வரப்போவது ஜனாதிபதி தேர்தலா யுத்தமா?
கடந்த 19ஆம் திகதி ஹெல உறுமய அமைப்பின் மகா நாடு
முடிந்ததும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களான ஓமல்பே சேஹித்த தேரர், அதுருலியே ரத்னசாரதேரர், அமைச்சர் சம்பிக்க என் போர் ஜனாதிபதியைச் சந்திக்க அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர்.
சரியாக 5.30 மணிக்கு அங்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந், டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துரையாடல் மேசைக்கு வந்தர்கள். ஜனாதிபதி ஒரு மணி நேரம் கழித்து அங்கு வந்தார். எமது கட்சி மகாநாட்டில் எடுத்த தீர்மானங்களுடன்தாம் இங்கு வந்திருப்பதாக ஹெல உறுமய தரப்பினர் குறிப்பிட்டு, சுதந்திரமான ஆணைக்குழுக்கள் அமைப்பது,மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்காமல் தடுப்பது போன்ற தீர்மானங்கள் உட்பட இன்னும் பல தீர்மானங்களை முன்வைத்தனர்.
இதனை அமுல் படுத்துவதற்கான உத்தரவாதத்தை அவர்கள் அங்கு எதிர்பார்ப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குப் புரியவே, இவற்றை எல்லாம் இப்போது யோசித்துக் கொண்டிருக்க தனக்கு நேரம் கிடையாது கொடுத்து விட்டுப் போங்கள் என்று முறுகிக் கொண்டு ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து எழுந்து சென்றிருக்கின்றார்.
எனவே, இந்தச் சந்திப்பு தோல்வியில் முடியவே அதுருலியே ரத்னசாரத்தேரர் நியாயமாக ஒரு சமுதாயத்தை நோக்கி என்ற அமைப்பை வைத்திருக்கின்ற சோபித தேரருடன் தற்போது போய் இணைந்து கொண்டிருக்கின்றார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெல உறுமயக் கட்சியுடனான சந்திப்புக்கு தாமக்கும் கலந்துகொள்ள அழைப்பு வரும் என்றிருந்த சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மைத்திரிபால சிரி சேனாவும், நிமல் சிறிபாலாவும் அந்த அழைப்பு வராததால் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். இது கட்சி முக்கியஸ்தர்களிடையே தற்போது ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
நமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயகத்துக்கு மக்களாட்சி என்றொரு பெயரும் இருக்கின்றது! இங்கு முறையாக மக்களாட்சி நடக்கின்றதோ இல்லையோ அடிக்கடி தேர்தல்கள் மட்டும் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தேர்தல்கள் ஒரு கால அட்டவணையில் நடப்பதுதான் சம்பிரதாயம். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் தமக்கேற்றவாறு தேர்தல் வரைபடத்தை மாற்றிக் கொள்ளவும் நமது அரசியல் யாப்பில் தாராளமாக இடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
தேர்தலைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் இலங்கையில் தற்போது ஜாதகக் காரர்களின் கரங்களே மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்தத் தேர்தலில் உள்ளூர் ஜாதகக்காரர்கள் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள ஜாதகக்காரர்களினதும் ஆதிக்கம் கணிசமாக இருப்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
எனவே, தேர்தல் ஆணையாளரின் வேலையை தற்போது ஜாதகக்காரர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமக்குப் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தமக்கு தேவைப்படும் போதும் தேர்தல்களை நடத்தவும் அதிகாரங்களைக் கூட்டிக் கொள்ளவும் அரசியல் யாப்பில் அடிக்கடி திருத்தங்களைச் செய்வதும் நாம் இங்கு பார்க்கின்றோம்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் தற்போதைய ஆட்சியாளர்களை குறைகூற முடியாது. இந்த அசிங்கமான சம்பிரதாயத்தை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ஐக்கிய தேசியக் கட்சி. எனவே, மகிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவகையிலும் இது விடயத்தில் கைநீட்டும் அருகதை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது. ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வடிவமைத்து இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்திய யாப்பே தற்போது இந்த நாட்டுக்குச் சாபக்கேடாக மாறி இருக்கின்றது.
இன்று இந்த யாப்பை அறிமுகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியே தற்போது அதனை விமர்சித்து, அதனை நீக்கவும் வேண்டும் என்றும் குரல் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கின்றது. இது அரசியல் நாகரிகம் இல்லாத விடயமாக இருந்தாலும் காலத்தின் தேவை என்ற வகையில் இந்தக் குத்துக்கரணத்தைப் பாராட்டவும் வேண்டி இருக்கின்றது. அதிகாரம் கையில் இல்லாத நிலையில் இப்படிப் பேசினாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தபின்னர் இவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் கிடையாது.
ஆனால், இந்த முறை 18ஆவது திருத்தத்துக்கு வாக்களித்ததன் மூலம் நாம் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கவழி சமைத்துக் கொடுத்திருக்கின்றோம் என்று ஆளும் தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று பகிரங்கமாக பேசுவது ஒரு சிறப்பம்சமாக இருக்கின்றது.
மகிந்த ராஜபக்ஷவுக்கு எல்லை மீறிய அதிகாரத்தையும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு வாக்களித்துவிட்டு இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்ற அரசியல்வாதிகளைப்பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சமகால அரசியலில் இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படி பேசியும் நடந்தும் தான் அவர்களுக்கு தமது அரசியல் வியாபாரத்தைச் செய்ய வேண்டி இருக்கின்றது.
இது காலத்தின் தேவை. மேற்சொன்ன எமது விமர்சனம் பொதுவாக இந்த நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அரசியல் நடைமுறைகள் தொடர்பான மக்கள் மனக்குறைகள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறினால் பதவி பறிபோகாது என்று, தான் கொடுத்த தீர்ப்புத் தொடர்பாக மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்டு தற்போது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா.
நேற்றுவரை ராஜபக்ஷவுக்கு கூஜாத்தூக்கிக் கொண்டிருந்த ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களும் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கைதூக்கி நாம் ஒரு பாவச் செயலைப் புரிந்த விட்டதாகவும் இதற்குப் பின்னரும் ஆளும் தரப்பின் தவறான நடவடிக்கைகளுக்குத் தம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று குறிப்பிடுவதுடன், மூன்றாம் தரப்பு வேட்பாளர் தொடர்பாகவும் தற்போது பேச ஆரம்பிதிருக்கின்றனர் ஹெல உறுமய கட்சியினர்.
ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க 18ஆவது திருத்த மூலத்திற்குக் கைதூக்கியது தனக்குத் தற்போது பெரும் மனஅழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக பகிரங்கமாகக் கூறிவருகின்றார். சுகாதார அமைச்சரும் சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தெரேச என்ற அதிகாரியை கடவுள் கட்டாயம் தண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாக சபித்துப் பேசி வருகின்றார்.
சுகாதாரத் துறையில், தான் கொண்டுவர முனைந்த மாற்றங்களுக்கு அதிகாரிகள் குறுக்கே நிற்பதால் அமைச்சர் அப்படி சாபமிடுகின்றார். எனவே, மைத்திரிபால சிரி சேனவுக்கு தனது அமைச்சிலேயே எதுவும் செய்யமுடியாத நிலை. தான் ஜனாதிபதியாக வந்தால் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவரையும் அரசியல் ரீதியாகப் பதவிகளுக்குக் கொண்டு வரமாட்டேன் என்று வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர ஊடகமொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவர் இப்படி கருத்துக் கூறி இருப்பது ஏன் என்று சொல்லத்தேவையில்லை. அமைச்சர் ஜனக தென்னக்கோன் குடும்பத்தினருக்கும் புதிதான அரசியலுக்கு நுழைந்து பிரதியமைச்சர் பதவி பெற்றிருக்கின்ற வசந்த பெரேராவுக்கும் மிடையில் நேரடி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ஜனக தென்னக்கோன் குடும்பம் பொதுமக்ககள் பணத்தில் 34 கோடி ரூபாவை கையாடி இருக்கின்றது என்று வசந்த தொடுக்கின்ற குற்றச்சாட்டு விடயத்தில் அந்தக் குடும்பம் மிகவும் மனம் நொந்து போய் இருக்கின்றது.
இந்த விவகாரத்தை வசந்த பெரேரா நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து முற்றாக விலகிவிடப் போவதாக மத்திய மாகாண அமைச்சர் பிரமித்த தென்னகோன் சவால் விடுத்திருக்கின்றார். தென்னக்கோன் குடும்பம் இப்படி நடத்தப்படுவது தொடர்பாக சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரி சேனாவும் தனது கவலையை வெளியிட்டிருக்கின்றார். வழக்கம் போல் முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரம நாயக்கவின் மகன் விதுரு விக்ரமநாயக்க இந்த நாட்களில் தனது அரச எதிர்ப்புப் பிரசாரங்களை துரிதப்படுத்தி வருகின்றார்.
ராஜபக்ஷவுக்கு எதிரான பொது வேட்பளர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்ற ரணில் விடயத்தில் அந்தக் கட்சிக்காரர்கள் எவரும் இதுவரை பகிரங்கமாக வாய்திறக்க விட்டாலும், ரணிலை ஓரம் கட்டிவிட்டு பொது வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வந்து முதலில் ராஜபக்ஷவை வெளியேற்றுவது பாதுகாப்பானது என்றும் ஒரு யோசனை இருக்கின்றது.
அந்த யோசனைப்படி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கின்ற ஒழுங்குகள் தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்ற ஒரு குழு பொது வேட்பாளருக்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றது. பிரதான எதிர்க்கட்சிகளும் புத்திஜீவிகளும் ரணிலை வேட்பாளராக நிறுத்தினால் ராஜபக்ஷவை வீழ்த்துகின்ற நல்லதொரு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று கருதுகின்றார்கள்.
எமக்குக் கிடைக்கின்ற செய்திகளின்படி பொது வேட்பாளர் திட்டத்தை ரணில் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகின்றது. இப்படிப் பார்க்கின்ற போது ரணில் வேட்பாளர் என்ற விடயத்தில் அந்தக் கட்சி மத்தியில் ஒட்டு மொத்த உடன்பாடு இல்லை. ஆனால், இந்த முறை ரணிலுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்து அவருக்கு மற்றுமொரு தோல்வி வந்து சேர்வதிலிருந்து தனது பிடியைக் கட்சிக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளும் தன்னலப் போக்குடன் தற்போது சஜித் வேலை பார்க்கின்றார் என்று தற்போது குற்றச் சாட்டப்படுகின்றார்.
சஜித்தைப் பொறுத்து அடுத்து வருகின்ற தேர்தல் தான் அவரது இலக்கு. இதற்கிடையில் ஒரு முறை இங்கு வந்த போது கடத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர் குமார் மாத்தியாவும் தேர்தலில் குதிப்பது உறுதியாகி இருக்கின்றது. இடதுசாரிகளின் பொது வேட்பாளராக இவர் களமிறங்க இருக்கின்றார்.
இவர் வருகையை அரசு அங்கீகரிக்குமா? அவரால் நாட்டுக்குள் பிரவேசிக்க வாய்ப்பு இருக்கின்றதா என்று சோசலிசக் கட்சிக்காரர்களிடம் கேட்டால் நிச்சயம் அவர் இங்கு வருவார் என்று நம்பிக்கையுடன் பேசுகின்றார்கள் அந்தக் கட்சி சார்பில் கருத்து வெளியிடக்கூடியவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் இந்த தேர்தலில் ராஜபக்ஷ போட்டியிட முடியாது அவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் தேர்தலை முன்கூட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியாவிடம் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்கள்.
இது இலங்கை வரலாற்றில் ஒருவரை வேட்பாளராக ஏற்கக்கூடாது என்று கொடுக்கப்படும் முதல் முறைப்பாடாக வரலாற்றில் பதியப்படுகின்றது. எமக்குத் தெரிந்த வரை இது விடயத்தில் ஆணையாளர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் விளக்கம் கேட்பார் அந்த விளக்கத்தின் அடிப்படையில் அவர் தீர்ப்பு அமையும். தேர்தல் நாட்களில் பாப்பரசர் இங்கு விஜயம் செய்வது சாத்தியமில்லை எனவே, எப்போது தேர்தலை நடத்தப்போகின்றீர்கள் என்று இலங்கையிலுள்ள அதிமேற்று ராணியர் ஆளும் தரப்புக்கு கடிதம் கொடுத்து விளக்கத்தை எதிர்பார்த்தாலும் இன்று வரை அவர்கள் கொடுத்த கடிதத்துக்கு ஆளும் தரப்பு பதில் கொடுக்காமல் இருந்து வருகின்றது.
2015 ஜனவரி 13,14,15இல் பாப்பாண்டவர் இங்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் ஜனவரி 8ஆம் திகதி இங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நம்பப்படுகின்து. தற்போது ஆளும்தரப்பு எதிர்க்கட்சியை இலக்குவைத்து போஸ்டர் போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது.
ரணில் வேட்பாளர் என்று கருதி இந்தப் போஸ்டர் தாக்குதல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திடீரென்று பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை இலக்கு வைத்து நடத்தக்கூடிய போஸ்டர்களும் தற்போது வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. எப்படியும் வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் ஒரு பெரும் போராகவே அமைய இருக்கின்றது.
-நஜீப் பின் கபூர்-