ஜனாதிபதியினால் வரவு திட்டம் சிறப்பு-இரா.சாணக்கியன்
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப் பட்டுள்ள இந்த வரவு திட்டமானது, என்னுடைய பார்வையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லக் கூடிய ஒரு திட்டமாகக் காணப்பட்டுள்ளது. 10 வீதம் தண்ணீர் கட்டணம் குறைப்பு, தபாற் காரர்களுக்கு மோட்டர் சைக்கிள் வழங்குதல், போன்ற பல திட்டங்கள் அதில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
என ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை (24) சமர்ப்பிக்கப் பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்து, சனிக்கிழமை (25) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி குமரன் கலா மன்ற வீதியில் வைத்து பட்டாசு கொழுத்தி ஆதரவு தெரிவித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
நாட்டின் பல பாகங்களிலும் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப் பட்டுள்ளதானது நாட்டில் மேலும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும், என தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்வரும் மாதங்களில் தேர்தல்கள் வந்தாலும் வராவிட்டாலும், இந்த வரவு செலவுத்திட்டம் நாட்டின் அபவிருத்தியை நோக்காகக் கொண்டு ஜனாதிபதியினால் முன் வைக்கப் பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் அண்டுக்குப் பின்னர் பல பாகங்களிலும் குறிப்பாக கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் என்பன அதிகளவு நடைபெற்றுள்ளன. கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் உட்கட்டமைப்பினை மேம்படுத்தியுள்ளன ஆனால் இம்முறை முன்வைக்கப் பட்டுள்ள வரவு செலவுத் திடத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதானது வரவேற்கத் தக்கதாகும்.
இந்த நிவாரணங்கள் நிறைந்த வரவு செலவுத்திடத்தற்கு தமிழ் தேசயக் கூட்டமைப்பு ஆதரிக்கா விட்டால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும், தமிழ் தேசயக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிக் கதைப்பதுபோல் அவர்களுக்கு மக்களின் தேவைகளையும் பூரத்தி செய்ய வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு உண்டு.
என்னைப் பெறுத்த வரையில் தமிழ் மக்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் தமிழ் மக்களுக்கு வரும் சலுகைகளை நாங்கள் தடுக்கக் கூடாது. தற்போது இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்காத காரணத்தினால் மக்கள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு என்னிடம் வருகின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.