எல்லாளன் படை எச்சரிக்கை பிரான்ஸ் பத்திரிகை மூடப்பட்டது!
எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்ஸ் இலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகைக்குமின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் துப்பாக்கி முனையில் பதில் சொல்ல வேண்டிவரும் என்ற மிரட்டல் காரணமாக அந்த பத்திரிகை தற்காலிகமாக தமது பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது இதன் முழுமையான அறிக்கை இணைக்கப்படுகிறது.
இடை விலகுகின்றோம் - விடியலில் சந்திப்போம்
தொழில்நுட்ப தகவற் தொடர்பாடல் வளர்ச்சிகள் உலக அச்சு ஊடகங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல அழித்தும் வருகின்றது. பொருளாதார ரீதியாக பத்திரிகைகளின் விற்பனை மற்றும் விளம்பர வருவாயில் மட்டும் தங்கியிருக்காத அச்சு ஊடகங்களும், கட்சி அல்லது அமைப்புக்கள் சார்ந்த பிரச்சார அச்சு ஊடகங்களுமே இன்று ஓரளவுக்கு நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கின்றது. இதில் புதிதாக ஒரு பத்திரிகையை ஆரம்பிப்பதென்பது இன்று கற்பனை செய்து பார்க்கமுடியாத நிலையில், வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகையை தக்கவைப்பதென்பது பெரும் போராட்டமாகவே இருக்கின்றது.
இந்த நிலையில்தான் ஈழமுரசு பத்திரிகை கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த நாடொன்றில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்த பத்திரிகை என்ற சாதனையும் ஈழமுரசு பத்திரிகையையே சாரும். பொருளாதார நெருக்கடிக்குள் மூச்சுத் திணறியபோதும் மக்கள் இன்றுவரை உறுதியோடு பற்றுக்கொண்டிருக்கும் ஒரேயரு நம்பிக்கைக்குரிய பத்திரிகையான ஈழமுரசை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை வழங்கவேண்டி இருந்தது.
ஆனால் இன்று ஈழமுரசையும் அதனை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஊடக இல்ல அமைப்பையும் மூடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, சிறீலங்காவின் அரச பயங்கரவாதம். போர் நிறைவடைந்ததன் பின்னர் சிறீலங்காவின் இனப்படுகொலைக் கரங்கள் புலம்பெயர்ந்த நாடுகளெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதை எத்தனையோ ஆதாரங்களுடன் ஈழமுரசு கடந்த காலங்களில் வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. அதற்கு முதற் பலியானவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. பரிதி அவர்கள். இன்று அதன் கொலைக் கரங்கள் ஊடக இல்லத்திற்குள்ளும் நுழைந்திருக்கின்றன.
ஈழமுரசின் தோற்றம்
1995ம் ஆண்டு தமிழர் திருநாளில் கப்டன் கஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஈழமுரசு பத்திரிகை, பொருளாதார நெருக்கடியால் 2004ம் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் கொண்டுவரவேண்டும் என விரும்பியவர்கள் சிலர்.
சட்டத்திற்கு உட்பட்டு அந்த இதழை மீண்டும் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல்களைக் கடந்து, ‘பூபாளம்’ என்ற நிறுவனம் ஊடாக அந்த இதழைச் சட்ட ரீதியாகக் கொண்டுவருவதில் வெற்றியும் கண்டனர். ஆனால், எத்தனை காலத்திற்கு மீண்டும் இந்த இதழைக் கொண்டுவர முடியும் என்ற கேள்வியும் எழாமலில்லை. ஏனெனில் ஒரு நிறுவனமாக இருந்து இதழை வெளியிடுகின்றபோது அரசுக்கு கட்டவேண்டிய வரி மற்றும் வேலையாட்களுக்கான அரசு கட்டுப் பணம் என்பவை தொடர்ச்சியாக செலுத்தவேண்டும். அவற்றைக் கட்டாது போனால் அதிரடியாகவே நிறுவனத்தை மூடும் அதிகாரம் அரசுக்கு இருக்கின்றது.
எனவே, இலாப நோக்கமற்ற தேசவிடுதலையையே இலக்காகக் கொண்ட ஒரு பத்திரிகைக்கு, பின் தளமாக நிதி ஆதாரம் இருந்தாலேயே அதனைத் தொடர்ச்சியாகக் கொண்டுவரமுடியும். அந்தத் தளம் இல்லாதபோது ஒரு கட்டத்தில் அது ஆட்டம் கண்டு, மீண்டும் மூடப்படும் நிலையையே அடையும். இது பூபாள நிறுவனத்திற்கும் தவிர்க்கமுடியாததாகவே இருக்கும் என்பது தெரிந்தே இருந்தது. எனவே இதழை இலவசமாக வெளியிடுவதன் ஊடாக அதிக விளம்பரங்களைப் பெறமுடியும், ஈழமுரசை மேலும் சில காலம் தக்கவைக்க முடியம் என்ற அடிப்படையில் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஈழமுரசுடன் பணியாற்றியவர்களுடனான சந்திப்பில் அதனை அறிவித்தபோது, “இலவச இதழ் மதிப்பற்றது. நாளை லாச்சப்பல் வீதிகளில் அது கால்களுக்குள் கிடந்து மிதிபடும். இதற்கு ஒத்துழைக்க முடியாது” எனக்கூறி அதிரடியாகச் சிலர் ஈழமுரசை விட்டு வெளியேறினார்கள்.
ஆனால், அப்போதிருந்த நிலையில் மாற்று வழி எதுவுமில்லை. இதழைத் தக்கவைப்பதற்காக இலவச இதழாக ஈழமுரசு வெளிவரத் தொடங்கியது. ஆனாலும் இதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் கடந்து செல்வது கடினமாகவே இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.
இந்த நிலையில்தான் இந்த இதழைத் தொடர்ச்சியாக கொண்டுவருவதற்கு மாற்று வழிகள் இருக்கின்றனவா என்பதை சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஆராய்ந்தபோது வரிகள் இல்லாமல் கொண்டுவருவதற்கான ஒரு மாற்று வழி இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையே எதிர்பார்த்ததுபோலவே பூபாளம் நிறுவனமும் பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்து மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருந்தது. அதேவேளை, தாயகத்தில் விடுதலைப் போராட்டமும் உச்சக் கட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
2009 மே, பெரும் இன அழிப்புடன் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல குழப்பகரமான செய்திகள் பரவிக்கொண்டிருந்த நிலையில், அடுத்து என்ன என்ற நிலை ஈழமுரசு உட்பட அனைவருக்குமே இருந்தது. அப்போதுதான், விடுதலைப் புலிகளால் இறுதிக் கட்டத்தில் வெளிநாடுகளுடனான தொடர்புக்கென நியமிக்கப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபனிடம் இருந்து ஒரு அறிக்கை வெளிவர இருப்பதாகவும் அதில் என்ன உள்ளடக்கம் இருக்கப்போகின்றது என்ற தகவலும் கிடைத்தது. அந்த அறிக்கையை விரும்பியோ, விரும்பாமலோ வெளியிடவேண்டிய நிர்ப்பந்தமும் ஈழமுரசுக்கு இருந்தது.
ஆனால், ஏற்கனவே குழப்பமடைந்திருக்கும் மக்கள் அதனை வெளியிட்டால் மேலும் குழப்பமடைவார்கள். விடுதலைப் போராட்டத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் இவ்வாறான ஒரு அறிக்கையை எதற்காக இப்போது அவசர அவசரமாக வெளியிடவேண்டும், இதற்குள் ஏதோ சதித்திட்டம் இருக்கின்றது என்பதையும் எம்மால் புரிந்துகொள்ளமுடிந்தது. இதனால், அந்த அறிக்கையை வெளியிடுவதில்லை என்ற உறுதியான முடிவை ஈழமுரசில் பணியாற்றியவர்கள் உறுதியோடு எடுத்தார்கள். ஏற்கனவே மூடப்படும் நிலையில் இருந்த பூபாளம், அரசு மூடுவதற்கு முன்பாக, அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக இழுத்து மூடப்பட்டது.
ஊடக இல்லத்தின் உருவாக்கம்
பூபாள நிறுவனம் மூடப்பட்டபோதும் அதில் பணியாற்றியவர்கள் அனைவரும் அங்கேயே இருந்தார்கள். ஈழமுரசை மீண்டும் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதில் உறுதியோடு பணியாற்றினார்கள். இந்தக் காலத்தில்தான் ‘ஊடக இல்லம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதிகொண்ட சிலர் தயக்கம் காட்டியபோதும், பூபாள நிறுவனத்தை நிருவகித்துவந்த மாமா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மறைந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களே ஊடக இல்லத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். 2012 டிசெம்பர் 15ல் அவர் மறையும் வரை அதற்கு அவரே தலைமை தாங்கினார்.
2009ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் வாரம் தனது முதல் இதழை ஊடக இல்லம் வெளியிட்டது. சிறீலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்ட பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பல ஆதாரபூர்வமான செய்திகளை ஈழமுரசு வெளிக்கொண்டுவரத் தொடங்கியது. ஊடக இல்லம் நடத்திவந்த சங்கதி இணையத்தளம் அதன் உரிமையாளரால் பறிக்கப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் சங்கதி24, தமிழ்க்கதிர் எனும் இரு இணையங்களையும் ஊடக இல்லம் நடத்திவந்தது.
இந்த ஊடகங்கள் சிங்களப் பேரினவாத அரசு தனது பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதற்கும் பெரும் தடைக்கல்லாக இருந்தது.
இதேவேளை, அறிக்கையை வெளியிடாது புறக்கணித்த ஈழமுரசின் மீது கே.பியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களால் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்பட்டன. கே.பியை கைது செய்து கொழும்பிற்குக் கொண்டுசெல்லப்பட்டு, சிறீலங்கா அரசுடன் இணைந்து அவர் இயங்கத் தொடங்கியதன் பின்னர் இந்த அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கின.
ஊடக இல்லத்தில் பணியாற்றிய ஒருவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் லாச்சப்பல் வீதிகளில் ஒட்டப்பட்டன. இந்த அச்சுறுத்தல்களை பிரெஞ்சுக் காவல்துறையிடம் பதிவு செய்துவிட்டு, ஈழமுரசு தனது பணியை முன்னிலும் அதிக வீச்சுடன் முன்னெடுக்கத் தொடங்கியது.
மக்களைக் குழப்பமடைய வைப்பதற்காக வேறு சில பத்திரிகைகள் லாச்சப்பலை ஆக்கிரமித்தன. ஆனாலும் மக்கள் குழப்பமடையவில்லை. ஈழமுரசுக்கே தமது முதலிடத்தை வழங்கினார்கள். இதனால் அவை வந்தவேகத்திலேயே காணாமலும் போயின.
ஈழமுரசு இதழை லாச்சப்பல் வீதியில் மனித கால்களுக்கு கீழே எங்கும், என்றும் காணமுடியவில்லை. மக்கள் தேடிவந்து இதழை வாங்கிச் செல்லும் நிலை அதிகரித்திருந்தது. இதனால் வர்த்தகர்கள்தான் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் ஈழமுரசைத் தேடிவரும் வாசகர்களை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. ஈழமுரசில் ‘இலவசம்’ என்று போடாதீர்கள். காசுக்கு விற்பனை செய்யுங்கள், மக்கள் வாங்குவார்கள் என்று அவர்கள் வலியுறுத்தத் தொடங்கினார்கள்.
ஆனால் அதிகளவு மக்களை ஈழமுரசு சென்றடைய வேண்டும் என்பதற்காக இதழை இலவசம் என்ற நிலையில் இருந்து மாற்றுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தோம். எனினும், வர்த்தகர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக ‘வர்த்தக நிலையங்களில் மட்டும் 30 சதம்’ என்ற வாசகத்தை சேர்த்துக்கொண்டோம்.
தொடர்ச்சியானஅச்சுறுத்தல்களும் தடைகளும்
2009ற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக இல்லாத வெற்றிடத்தில் பொய்களும், புரளிகளும் சூழ்ந்துகொண்டன. இணையத் தளங்கள் பல தான்தோன்றித்தனமாகத் தோன்றி மக்களை மேலும் மேலும் குழப்பமடைய வைத்துக்கொண்டிருந்தன. இதற்குள் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு முடிவு செய்து, முகமூடி அணிந்து வேசமிட்டவர்களையும், விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவென்ற போர்வையில் துரோகமிழைத்துக் கொண்டிருந்தவர்களையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தத் தொடங்கினோம்.
இதில் கலாநிதி சேரமானின் பணி மிகவும் காத்திரமாக இருந்தது. அதில் சுட்டிக்காட்டப்பட்டவர்களால் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து இன்றுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதில் இருந்து அதன் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்துகொண்டிருப்பார்கள். மக்களை ஏமாற்றிய பலரது வேடங்கள் ஈழமுரசினால் கலைக்கப்பட்டன. அவர்களால் மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியவில்லை. இனியும் ஏமாற்றமுடியாது என்றே நம்புகின்றோம்.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்ற வேறுபாடின்றி தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திசை திரும்பும் எவரையும் துணிச்சலோடு நாம் எதிர்கொண்டோம். அவர்களின் வழி தவறிய பயணத்தை ஒரு நாணயக் கயிற்றைப்போல் இழுத்துப்பிடித்து நிறுத்தினோம். தேச விடுதலையை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை எமது எழுத்துக்கள் அவர்களுக்கு ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுகின்ற தவறுகளைக்கூட நாம் நேர்மையோடு சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு சக்தியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க அதனுள் ஆழ ஊடுருவும் நபர்களைப் பற்றிய ஆதாரங்களை எடுத்துவைத்தோம்.
அதேவேளை, ஈழமுரசினதும் சங்கதி24, தமிழ்க்கதிர் இணையங்களில் வெளியாகும் உண்மைகளை முறியடிக்க முடியாமல் திணறிய சிங்களப் பேரினவாதத்தின் நீண்ட கொலைக் கரங்கள் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தலை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இணையங்கள் பலதடவைகள் முடக்கப்பட்டன. பலதடவைகள் செயலிழக்கவைக்கப்பட்டுச் சிதைத்தழிக்கப்பட்டன. அண்மையில் கூட இவ்விரு இணையங்களும் முழுமையான தாக்கியழிப்புக்கு உள்ளானதை வாசகர்கள் அறிந்துகொண்டிருப்பார்கள்.
அத்துடன், விடுதலைப் புலிகளின் அந்தப் பிரிவு, விடுதலைப் புலிகளின் இந்தப் பிரிவு எனப் பலமுறை முகம் தெரியாத பலரும், முகம் தெரிந்த சிலரும் ‘விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஈழமுரசை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு’ மிரட்டினார்கள். எங்கே விடுதலைப் புலிகள் என்று கேட்டால் அவர்களிடம் அதற்கான பதில் இல்லை. ஈழமுரசை நிறுத்த வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அது முடியாதபோது ஈழமுரசை நிறுத்த வைப்பதற்காக விளம்பரம் தரும் வர்த்தகர்களை அணுகி விளம்பரங்களை நிறுத்தப் பணித்தார்கள். ஈழமுரசில் விளம்பரம் வந்தால் என்றைக்குமே இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றளவிற்கு விளம்பரதாரர்களை அவர்கள் அச்சுறுத்தினார்கள். இதில் ஓரளவு வெற்றியையும் அவர்கள் கண்டார்கள்.
ஆனாலும், தேசியத்தின் மீது பற்றும் ஈழமுரசு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கொண்ட வர்த்தகர்களும் ஆதரவாளர்களும் அதன் வருகைக்கு பக்கபலமாக இருந்தார்கள். இன்றுவரை இந்த இதழ் வெளிவருவதற்கு அவர்களின் ஒத்துழைப்பே முழுமுதற் காரணம். எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் எத்தனை அச்சுறுத்தல்களை விடுத்தாலும் ஈழமுரசு வெளிவந்துகொண்டிருப்பதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாம, தான, பேத, தண்டம் என்பதுபோல், ஊடக இல்லப் பணியாளரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனையும் கடந்து ஈழமுரசு தனது பயணத்தை தொடர்ந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 18ம் திகதி வியாழக்கிழமை ஊடக இல்லத்தின் பணியாளர் ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஊடக இல்லத்தில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த அவரை பின்தொடர்ந்து சென்ற தாக்குதலாளி அவரது இல்லத்திற்கு மிக அருகில் வைத்து இந்தக் கொலை முயற்சியை மேற்கொள்ள முனைந்திருக்கின்றார்.
கொண்டுவந்த ஆயுதம் சடுதியாக இயங்க மறுத்ததாலும், சம்பவம் நடந்த இடத்தில் அதிகமாக மக்கள் இருந்ததாலும் அவர்களது முயற்சி கைகூடவில்லை. சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களின் பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்திய அந்தக் கொலை முயற்சியாளர்கள், ‘24 மணி நேரத்திற்குள் ஈழமுரசையும், ஊடக இல்லத்தையும் இயக்கத்திடம் ஒப்படைக்குமாறு பணித்ததுடன், அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் ஊடக இல்லப் பணியாளர் ஒரு வருடத்திற்குள் திரு. பரிதி அவர்களைப் போன்று படுகொலை செய்யப்படுவார்’ என்றும் எச்சரித்தார்கள்.
இவ்வாறான எச்சரிக்கைகள் பல தடவைகள் எதிர்கொண்ட நாம் இந்த எச்சரிக்கையையும் காவல்துறையிடம் பதிவு செய்துவிட்டு எமது பணியை முன்னெடுக்கவே விளைந்திருந்தோம். ஆனால், சம்பவம் நடந்த மறுநாளான 19ம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சல் இந்தக் கொலைக் கரங்கள் மிக நீளமானவை, அவை சிங்களப் பேரினவாதத்திடம் இருந்தே வருகின்றன என்ற உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது. ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையில் (அதனைப் பெட்டிச் செய்தியில் பார்க்கவும்) தாங்கள் ஆயுத முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அதற்கு அடிபணியாதுவிட்டால் தங்கள் துப்பாக்கி பேசும் என்றும் எச்சரித்துள்ளார்கள். இந்த எச்சரிக்கையை எம்மால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
ஏனெனில் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் சிங்களப் பேரினவாத அரசபடைகள் யாழ்குடா நாட்டில் நடத்திய படுகொலைகளை உலகம் நன்கறியும். விடுதலைப் புலிகளின் இரகசிய ஆயுதப்படை போன்ற தோற்றத்தில் சிங்களப் படைகளால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட அந்தப் படுகொலைகளில் ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேவேளை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில்தான் திரு. பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எனவே, இந்த எச்சரிக்கையை அத்தனை இலகுவில் சாதாரணமாக எடுக்க முடியாது.
சிறீலங்காப் பட்டியலில் விடுபட்டபிரான்ஸ் ஊடக இல்லமும் ஈழமுரசும்
அண்மையில் சிறீலங்கா அரசு வர்த்தமானி, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதாரவாளர்கள் என்று குற்றம்சாட்டி ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டிருந்தது. அவற்றைவிட புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளங்கள் என்ற பட்டியலையும் தமது இணையத்தில் இணைத்திருந்தது. அதில் பிரான்சிலுள்ள ஊடக இல்லமோ, பிரான்ஸ் ஊடக இல்லத்தில் பணியாற்றுபவர்களோ எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஊடக இல்லம் விடுதலைப் புலிகளின் ஓர் ஆதரவு சக்தியென்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், சிறீலங்கா எதற்காக பிரான்சில் உள்ளவர்களை மட்டும் தவிர்த்திருந்தது பலத்த கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது.
ஏனெனில் ஊடக இல்லத்திற்காக வேறு நாடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், பிரான்சில் பணியாற்றுபவர்கள் மட்டுமே தவிர்க்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து சில இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்தபோது, அவர்கள் சில காரணங்களை முன்வைத்தார்கள். அதாவது ‘போடவேண்டியவர்களை, அந்தப் பட்டியலில் போடவில்லை’ என்பதுதான் அது. அதாவது தமது கொலைக் கரங்களால் அழிக்கப்படவேண்டியவர்களை அந்தப் பட்டியலில் இணைத்துவிட்டால் நாளை அவர்கள் மீது எதாவது நடவடிக்கையை மேற்கொண்டால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் நேரடியாக தங்கள் மீதே வரும் என்பதை சிறீலங்கா அறிந்திருந்தது.
அத்துடன், அந்தப் பட்டியலில் இணைக்காவிட்டால் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவில்லாதவர்கள் என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் எழும், இதன்மூலம் ஊடக இல்லத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஏன் சிறீலங்காவின் ஆதரவுடன் ஊடக இல்லம் இயங்குகின்றது என்ற ஒரு பரப்புரையையும் இதன்மூலம் செய்யமுடியும் என்ற ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டத்துடனேயே அதனைத் தவிர்த்திருக்கக்கூடும் என்றும் விளக்கம் கிடைத்திருந்தது. அதாவது ஏனைய நாடுகளில் இவ்வாறான படுகொலைகளில் இறங்குவது சிறீலங்காப் புலனாய்வாளர்களுக்கு அத்தனை இலகுவாக இருக்காது.
ஆனால், பிரான்சில் ஏற்கனவே மூவர் இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்னொருவரை படுகொலை செய்வது சிறீலங்காவிற்கு அத்தனை கடினமாக இருக்காது என்றே சிறீலங்கா கருதும். இந்த நிலையில்தான் இந்தக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் புறந்தள்ளிவிட்டு பயணிப்பதென்பது, கண்ணை மூடிக்கொண்டு பாழும் கிணற்றுக்குள் குதிப்பதைப் போன்றது.
இந்த நாடுகளில் உள்ள சட்டங்களைப் புறந்தள்ளி, மிகவும் துணிவோடு கொலை அச்சுறுத்தலை விடுக்கின்ற சிங்களத்தின் நீண்ட கொலைக் கரங்களால், ஊடக இல்லத்தின் கழுத்தை நெரிப்பது அத்தனை கடினமாக இருக்காது என்பதை நாம் உணர்ந்துகொண்டிருந்தோம். ஊடக இல்லத்தில் உள்ள ஒருவரை இலக்கு வைத்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளபோதும், இது ஒட்டுமொத்த ஊடக இல்லத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். ஏனெனில் ஊடக இல்லம் என்பது ஒரு தனி மனிதனின் உழைப்பில் மட்டும் இயங்கும் ஓர் அமைப்பு அல்ல. உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாயகத்தில் இருந்து இன்னமும் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகத்தின் பணியாளர்கள் முதல், தாய்த் தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் வியாபித்திருக்கும் எத்தனையோ பல விடுதலையை நேசிக்கும் அர்ப்பணிப்பாளர்களால்தான் ஊடக இல்லத்தினால் இத்தனை வேகமாகவும், இத்தனை கனதியாகவும், ஆதாரங்களையும் உண்மைகளையும் வேகமாக எடுத்துவந்து மக்கள் முன் வைக்கமுடிகின்றது.
எனவே, ஊடக இல்லத்தில் இருந்து ஒருவரை வெளியேற்றுவதால் அந்த ஊடக இல்லத்தின் பணிகள் நின்றுவிடப்போவதில்லை. இதனைத் தெரிந்துகொண்டே எதிரி இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றான் என்றால், அவனிடம் அடுத்த அடுத்த இலக்குகளும் இருக்கும் என்பதை நாம் அறியாமல் இல்லை. ‘நிலத்தை இழ, போராளிகளைத் தக்கவை. நிலத்தை இழந்தால் போராளிகளைக்கொண்டு நாளை நிலத்தை மீட்கலாம்.போராளிகளை இழந்தால் நாளை நிலத்தை மீட்க முடியாது? என்பது மாவோ சேதுங்கின் தத்துவ வாக்கு. எனவேதான், நாமும் ஊடக இல்லத்தையும் அது வெளியிட்டு வந்த ஈழமுரசையும் இழக்கின்ற முடிவிற்கு வந்திருக்கின்றோம்.
சொத்தை யாரிடம் ஒப்படைப்பது
ஈழமுரசிடம் சொத்துக்கள் இருப்பதாக பிரச்சாரங்கள் எதிரியால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தனியார் பெயரில் உள்ள சொத்துக்கள் நாளை அந்தத் தனியாருக்குச் சொந்தமாகி அவரது குடும்பத்திற்கே போய்விடப்போகின்றது என்று தமிழ் வானொலி ஒன்று ஓயாமல் அழுது புலம்பி வருகின்றது. ஈழமுரசின் சொத்து கடந்த மூன்று மாதங்களாக கட்டப்படாத வாடகைப் பணம், கடந்த மூன்று மாதங்களாக கட்டமுடியாமல் இருக்கும் அச்சகக் கூலி, கடந்த ஆறு மாதங்களாக கட்டமுடியாமல் இழுபறிப்படும் பத்திரிகையைக் காவிவந்த தொடருந்து சுமைக்கூலி. கடன்தான் இப்போது ஊடக இல்லத்தின் மிகப்பெரும் சொத்தாக இருக்கின்றது.
இதனையும்விட சொத்தென்று எஞ்சியிருப்பது ஒன்றேயன்றுதான். அது கடந்த 18 ஆண்டுகளாக வெளிவந்த ஈழமுரசு பத்திரிகைகள் மட்டும்தான். ஒரு ஆவணம்போல் காப்பாற்றி வரும் அந்த ஆவணப் பத்திரிகையிலும் தங்களது அடைக்கலக் கோரிக்கை¬யை உறுதிப்படுத்தும் தகவலை, செய்தியைப் பெறுவதற்காக அவற்றைப் பார்வையிடப்போவதாக வாங்கிப் பார்க்கும் நல்ல மனிதர்கள் சிலர், ஒருசில இதழ்களை திருடிச் சென்றுவிட்டார்கள். அவைபோக, எஞ்சியிருக்கும் அந்த ஆவணத்தை இப்போது நாம் யாரிடம் ஒப்படைப்பது?
ஊடக இல்லத்தில் பணியாற்றும் யாருமே ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை. தங்கள் சொந்தச் செலவிலேயே போக்குவரத்தினையும் செய்துவந்தார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்தபோதும், தமக்குக் கிடைத்த நேரத்தையெல்லாம் ஊடக இல்லத்திற்காகச் செலவழித்தார்கள். ஆனால், லாச்சப்பல் வர்த்தகர்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டம் என்று வசைபாடி மகிழ்ந்தது ஒரு கூட்டம்.
திலீபன் நினைவு நாட்களில் பிரிகின்றோம்
இது கனதியான நாட்கள். தேச விடுதலைக்காக மிக உன்னதமான அர்ப்பணிப்பைச் செய்த தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவு நாட்கள். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று தன் இறுதி மூச்சுவரை முழக்கமிட்டவர் மாவீரன் திலீபன். விடியல் பிறக்கும், தேசம் மலரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடிக்கொண்ட அந்தத் திலீபனின் நினைவு நாட்களில் ஆரம்பித்த ஊடக இல்லத்தின் பயணம் ஐந்து ஆண்டுகள் பயணத்தின் பின் அதே திலீபனின் நினைவு நாட்களில் தனது பயணத்தை நிறுத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதலைக்கான பயணம் ஓயப்போவதில்லை.
அந்த உன்னதமான தியாகியினதும் விடுதலைக்காக வீழ்ந்த ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் மக்களினதும் கனவுகள் ஒருநாளும் வீண்போகாது. தேசம் ஒரு நாள் நிச்சயம் விடியும். அடிவானில் மறைந்துள்ள எங்கள் தேசச் சூரியன் ஓர் அதிகாலையில் மீண்டும் கதிர்களை வீசியபடி எழுந்துவரும். அதுதான் தமிழர்களின் விடியல் நாள். அந்தப் பொன்னான நாளில் மீண்டும் நாம் தலை நிமிருவோம்.
இந்தவேளையில் எங்கெங்கோ எல்லாம் இருந்து ஊடக இல்லத்தின் வளர்ச்சிக்கு தோளோடு தோள் நின்று உதவிய அனைத்து உள்ளங்களையும், உறவுகளையும் நன்றியுடன் நினைவு கொள்கின்றோம். ஆதரவு தந்த வர்த்தகர்களின் கரங்களை உறுதியாகப் பற்றிக்கொள்கின்றோம். அடக்குமுறைகள் தொடரும் வரைக்கும் விடுதலைக்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த விடுதலையைப் பெறும் வரைக்கும் இலக்குநோக்கிய பயணம் நிற்காது.
எனவே, இது முடிவல்ல.
தற்காலிக ஓர் இடைவிலகலே...