ஸ்கொட்லண்ட் பிரிந்துபோனால் மனமுடைந்துவிடுவாராம் பிரிட்டன் பிரதமர்
தான் மனமுடைந்து விடுவேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார்.
ஸ்காட்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து போகவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் வரும் 18ம்தேதி நடக்கவுள்ள நிலையில், ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் கேமரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு மாற்றப்படமுடியாதது என்பதை கேமரன் ஸ்காட்லாந்து மக்களுக்கு நினைவூட்டினார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனும், பிரிட்டனின் மற்ற இரு பிரதான கட்சிகளான, தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள், எட் மிலிபாண்ட் மற்றும் நிக் கிளெக் ஆகியோர், ஸ்காட்லாந்து சுதந்திரம் குறித்து அடுத்த வாரம் நடக்கவுள்ள கருத்தறியும் வாக்கெடுப்பில், ஸ்காட்லாந்து மக்களை பிரிந்து போக வாக்களிக்காதீர்கள் என்று வலியுறுத்த ஸ்காட்லாந்து சென்றிருக்கிறார்கள்.
ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கு எதிராக வாக்களியுங்கள் என்று மிகவும் உணர்ச்சிகரமான ஒரு வேண்டுகோளை டேவிட் கேமரன் விடுத்திருக்கிறார். இந்த வாக்கெடுப்பு குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் சில வாக்கெடுப்பு முடிவு எந்தத்திசையிலும் போகலாம் என்று காட்டுவதாக வந்ததை அடுத்து இந்தத் தலைவர்களது ஸ்காட்லாந்து விஜயம் வருகிறது. "
நாடுகளின் குடும்பம் சிதறிப்போவதை" தான் பார்க்க விரும்பவில்லை என்று டேவிட் கேமரன் , பிரிட்டனிலிருந்து வெளியாகும் "டெய்லி மெயில்" பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களின் விஜயத்தை ஒரு "நாடகம்" என்று வர்ணித்த ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு ஆதரவான தலைவர்கள்,
இந்த வருகை ஒரு பீதியில் எடுக்கப்பட்ட முடிவு என்றும், இந்தத் தலைவர்களுக்கு ஸ்காட்லாந்தில் ஆதரவு இல்லாததால், இந்த விஜயம் எதிர்மறையான விளைவுகளைத்தான் அவர்களுக்கு ஏற்படுத்தும் என்றும் கூறினார்.