Breaking News

மோடியுடன் என்ன பேசப்பட்டது விளக்குகிறார் சம்பந்தன்


புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் கோடி காட்டியிருக்கின்றார்.

புதுடில்லி மற்றும் தமிழக விஜயங்களை முடித்துக் கொண்டு இரா.சம்பந்தன் எம்.பி. நேற்றுமுன்தினம் ஞாயிறு மாலை கொழும்பு திரும்பினார். அடுத்த நாள் திங்கட்கிழமை சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான என்.வித்தியாதரனுடன் இணையத்தளம் ஒன்றுக்காக தமது புதுடில்லிப் பேச்சுக்கள் குறித்து மனம் திறந்து உரையாடினார்.

புதுடில்லியில் பேச்சின் முடிவில் தங்களை வழி அனுப்ப வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'நூற்றுக்கு நூறு வீதம் நாங்கள் உங்களுடன் இருப்போம்!' எனத் தங்களுக்கு உறுதியளித்தார் என்பதை சிலாகித்துக் குறிப்பிட்டார் சம்பந்தர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சில, பல ஆலோசனைகளை இந்தியப் பிரதமர் முன்வைத்தார் என்று குறிப்பிட்ட சம்பந்தர், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் தங்களிடம் குறிப்பிட்டார் என்றும் சொன்னார்.

புதுடில்லிப் பேச்சுக்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தாங்கள் கூறவுள்ள செய்தி என்ன? - என்ற கேள்விக்குப் பதிலளித்தார் சம்பந்தர்.

அப்போது அவர் கூறியவை வருமாறு:-


புலம்பெயர் தமிழர்கள் குறித்து நான் ஒரு விடயத்தைக் கூறவேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் அது பற்றி என்னிடம் கூறியிருந்தார்.

'நீங்கள் (இரா.சம்பந்தன்) ஒரு நிதானமான - பக்குவமான - போக்கைக் கடைப்பிடிக்கின்றீர்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்திலிருந்து ஒரு காரசாரமான - வன்முறையை ஆதரிக்கக்கூடிய - ஒரு கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.' - என்று அவர் சொன்னார்.

எமது மக்களைப் பொறுத்தவரை - அவர்கள் இங்கு வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி - நாம் கூறுவது ஒன்றுதான். சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை அது இந்தியாவாக இருக்கலாம்.அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கலாம். வேறு எந்த ஒரு நாடாகவும் இருக்கலாம். இலங்கையில் ஒரு பிரிவினை ஏற்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஒருமித்த இலங்கைக்குள் தமிழ்ப் பேசும் மக்கள் சமத்துவமாக வாழக்கூடிய ஒரு நிலைமை ஏற்படவேண்டும் என்பதுதான் அவர்களுடைய கருத்து. அந்த அடிப்படையில்தான் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தை பல நாடுகள் ஆதரித்தன.

அவ்விதமான ஆதரவு இருந்த காரணத்தின் நிமித்தம்தான் இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்கடிக்க முடிந்தது. அந்த நேரத்தில் இலங்கை அரசினால் சர்வதேச சமூகத்துக்கு - விசேடமாக இந்தியாவுக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கும் - அரசியல் தீர்வு சம்பந்தமாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றைக்கும் நிறைவுவேற்றப்படவில்லை.

அவை நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற காரணத்தின் நிமிர்த்தம்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படியான கூடிய அழுத்தம் இன்று வெளிப்படுகின்றது. ஆகவே இவ்விதமான சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி நாம் மிகவும் நிதானமாக, பக்குவமாக - விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களில் விட்டுக்கொடுக்காமல் - ஒரு நியாயமான, நிரந்தரமான, நடைமுறைப்படுத்தக்கூடிய ஓர் அரசியல் தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அத்தகைய தீர்வைப் பெறுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு அவசியமானதாகும். எமது சந்திப்பு - டில்லி விஜயம் - திருப்திகரமாகப் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் நாங்கள், ஒற்றுமையாக, ஒருமித்து மிகவும் கவனமாக இந்தக் கருமத்தை முன்னெடுக்க வேண்டும் என எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.