அமைச்சரின் கிழிந்த பாதணியை விற்கவும் மகிந்த நிபுணர் குழு நியமனம்
அளப்பரிய ஆர்வம் அமைச்சருக்கு. கைலாகு கொடுக்கும்போது அணி வதற்கான உடை தயாராகிவிட்டது. ஆனால் அதற்கேற்ற பாதணி தெரிவு செய்வதிலும் மிகவும் அக்கறை. அணியப்போகின்ற உடை வெள்ளை நிறம் என்பதால் பாதணியும் வெள்ளை நிறத்தில் அமையவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இதனால் வீட்டில் சிலகாலம் பயன்படுத்தப்படாமல் இருந்த வெள்ளை நிற பாதணியை தூசு தட்டி அணிந்துகொள்கிறார். குறித்த உலகப் பலம்வாய்ந்த நாட்டின் தலைவரை சந்திப்பதற்கான நேரமும் நெருங்கிவிட்டது. அமைச்சர் மிகவும் நேர்த்தியான முறையில் உடை அணிந்து பாதணியையும் அணிந்து ஜனாதிபதி செயலகத்துக்கு செல்கின்றார். அங்குதான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஒரு கணம் அவர் உலக அளவில் பிரபலமடைந்துவிட்டார்.
உலகில் பலர் பல வழிகளில் ஒரே இரவில் உலகப் பிரபலமடைவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சிலரை ஒரு கணத்தில் திடீரென பிரபலத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும். இவ்வாறான நிலைமைகளை உலகில் நாம் பல நிலைகளில் கண்டுள்ளோம்.
அவ்வாறானதொரு சுவாரஷ்யமான சம்பவம் எமது நாட்டிலும் கடந்தவாரம் நடந்துவிட்டது. ஆம். அடிகழன்ற பாதணி வடிவத்தில் மிக முக்கிய அமைச்சர் ஒருவர் ஒரே இரவில் உலகப் பிரபலம் அடைந்துவிட்டார். உலகின் பிரபல நாடுகள் பிரபல நிறுவனங்கள் அவரை தொடர்புகொண்ட வண்ணம் உள்ளன. அடிகழன்ற பாதணிகளை 1000 மில்லியன் டொலர்களுக்கு மேல் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலை கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்கவுக்கு ஏற்பட்ட அசெளகரியம் தற்போது அவரை சர்வதேச ரீதியில் பிரபலமிக்க மனிதராக மாற்றிவிட்டது. உலகின் கண் அவரின் பக்கம் தற்போது உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
அதுவொரு வரலாற்று முக்கியத்துவமிக்க சந்தர்ப்பம். 28 வருடங்களின் பின்னர் உலகின் பலம்வாய்ந்த நாடான சீனாவின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மிக முக்கிய தருணமாக அது அமைந்தது. அவரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு செங்கம்பள வரவேற்பும் அரச மரியாதையும் வழங்கப்பட்டது. அப்போது இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட சில அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு சீன ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சில அமைச்சர்களில் ஒருவர் அடிகழன்ற பாதணியுடன் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்ததை யாரும் அந்த சந்தர்ப்பத்தில் அறிந்திருக்கவில்லை. ஆனால் குறித்த அமைச்சரும் சமாளித்துக்கொண்டேயிருந்தார். (அவரும் எவ்வளவு நேரம்தான் சமாளிப்பார்) ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு செல்லும்போதே பாதணியின் அடிப்பக்கம் கழன்றுவிட்டது.
அமைச்சரும் சமாளித்துக்கொண்டே சீன ஜனாதிபதிக்கும் கைலாகு கொடுத்துவிட்டார். (அப்பாடா ஒரு கட்டத்தை தாண்டிவிட்டோம் என்று அமைச்சருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்) அதன் பின்னர் சீன தூதுக்குழுவின் பிரதிநிதி ஒருவருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடும் சந்தர்ப்பம். அடிகழன்ற பாதணியுடன் உடன்படிக்கையிலும் அமைச்சர் கைச்சாத்திட்டார். யாரும் கண்டிருக்கமாட்டார்கள் என்று அமைச்சர் கருதியிருக்கலாம். ஆனால் பாதணியிலிருந்து அமைச்சரின் பாதங்கள் வெளியே எட்டிப்பார்த்ததை படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் அவதானித்துவிட்டதுடன் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர். இந்த கணம்தான் நாங்கள் ஆரம்பத்தில் கூறியவாறு அமைச்சரை ஒரே இரவில் உலகப்பிரபலமாக்கியது. இனி அமைச்சர் எம்முடன் அந்த நிகழ்வை பகிர்ந்துகொள்கிறார்.
கேள்வி: அன்றைய தினம் என்ன நடந்தது?
பதில்: உலகின் மிகவும் பலம் வாய்ந்த நாடான சீனாவின் ஜனாதிபதி இலங்கை வந்திருந்தார். அவரை சந்திப்பதற்கு ஒரு சில அமைச்சர்களுக்கே ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் மிகவும் மகிழ்ச்சியுடன் நிகழ்வுக்கு தயாராகினேன். வெள்ளை நிற உடையை அணிவது என்று தீர்மானித்தேன். அதன்படி வெள்ளை நிற உடைக்கு ஏற்ற பாதணி தெரிவு செய்யவேண்டியேற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த வெள்ளை நிற பாதணியை அணிந்துகொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு புறப்பட்டேன்.
ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு சென்றபோதே ஒரு பாதணியின் அடிப்பக்கம் கழன்றுவிட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சமாளித்துக்கொண்டு சென்றேன். சீன ஜனாதிபதிக்கு கைலாகும் கொடுத்தேன். பின்னர் சீன தூதுக்குழுவின் பிரதிநிதி ஒருவருடன் இரண்டு நாட்டு ஜனாதிபதிகள் முன்னிலையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு வந்தது. உடன்படிக்கையில் கைச்சாத்திடும்போது அடுத்த பாதணியின் அடிப்பக்கமும் கழன்றுவிட்டது. நான் சமாளித்துக்கொண்டு கைச்சாத்திட்டேன். ஆனால் மேல் பகுதியிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்பட பிடிப்பாளர் ஒருவரின் கமராவில் எனது பாதங்கள் சிக்கிவிட்டன. அவர்கள் அதனை வெளிப்படுத்திவிட்டனர். இதுதான் நடந்தது.
கேள்வி: பாதணியை அணியும்போது அவை கழன்றுவிடும் அபாயத்தை நீங்கள் உணரவில்லையா?
பதில்: இல்லை.
கேள்வி: தற்போதைய நிலைமை என்ன?
பதில்:வெளிநாட்டுஊடகங்கள் அதனை வெளிப்படுத்திய பின்னர் உலகம் என்னை பார்க்க ஆரம்பித்துவிட்டது. ஜேர்மன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உலகப் பிரபல நிறுவனங்கள் என்னை தொடர்புகொண்டு மிகப்பெரிய விலைக்கு எனது பாதணியைக் கேட்கின்றன. நான் இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை.
கேள்வி: என்ன செய்யப்போகின்றீர்கள்?
பதில்: மிகப்பெரிய விலைக்கு வந்தால் விற்பனை செய்யலாம். ஆனால் நான் ஒன்றும் செய்யமாட்டேன். இது தொடர்பில் செயற்படுவதற்காக மூவர்கொண்ட குழுவை நியமித்துள்ளேன். பேராசிரியர் முதியன்ஸே திசாநாயக்க, நாடக தயாரிப்பாளர் சுகத் ரோஹன மற்றும் கலாசார பணிப்பாளர் விஜித் கணுகல ஆகியோரை நியமித்துள்ளேன். அவர்கள் அது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து உயர் விலைக்கு வந்தால் விற்பனை செய்வார்கள். அதில் வரும் பணத்தைக்கொண்டு வடமேல் மாகாணத்தில் வறிய பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். இதுதான் எனது எண்ணம்.
கேள்வி: எவ்வாறான நிறுவனங்கள் உங்களை அணுகின?
பதில்:உலகப் பிரபலமான ஆபரணங்களை சேகரிக்கும் நிறுவனங்கள்.
கேள்வி: 1000 மில்லியன் டொலருக்கு பாதணிகளை கேட்டனரா?
பதில்: பெரிய விலைக்கு கேட்டனர். தற்போது மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமையினால் அவர்கள் இனி அதனை தீர்மானிப்பார்கள்.
கேள்வி: பாதணியின் அடிகழன்ற அந்த சந்தர்ப்பம் எவ்வாறு இருந்தது? அசெளகரியமாக இருந்ததா?
பதில்: இல்லை. நாங்கள் மண்ணில் காலடி வைத்து வாழ்ந்தவர்கள். குறிப்பாக நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே எனக்கு இது புதிய விடயமல்ல. பாதணி இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல. நான் இது தொடர்பில் கவலையடையவில்லை. அசெளகரிய மடையவுமில்லை. எனது நிலை குறித்து பெருமையடைகின்றேன். உலகம் என்னை பார்க்கின்றது.
கேள்வி: அரசாங்கம் ஏதாவது விளக்கம் கோரியதா?
பதில்: ஒரு விளக்கமும் என்னிடம் கோரவில்லை.
கேள்வி:சீனாவின் பக்கத்தில் ஏதாவது கூறப் பட்டதா?
பதில்: ஒன்றும் கூறவில்லை.