மஹிந்த அரசை கலங்கடிக்க நாளை வெளியாகிறது ஐ.நா வின் வாய்மூல அறிக்கை (இணைப்பு)
மனித உரிமை பேரவையில் நாளை புதன்கிழமை வெளியிடப்படவுள்ள
இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த விசாரணைகள் தொடர்பான வாய்மூல அறிக்கையின் முழுமையான விபரம் இங்கே தரப்படுகின்றது,
இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்த விசாரணைகள் தொடர்பான வாய்மூல அறிக்கையின் முழுமையான விபரம் இங்கே தரப்படுகின்றது,
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் சார்பாக நான் இந்த வாய்மூல அறிக்கையை பேரவைக்கு சமர்ப்பிக்கின்றேன். ‘இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தலும் பொறுப்புக்கூறலும்’ என்ற தலைப்பில் மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் அமைவாக முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்தே இந்த வாய்மூல அறிக்கை முன்வைக்கப்படுகின்றது.
கண்காணிப்பது அவசியம்
1. இந்தப் பிரேரணையானது இலங்கை மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்க வேண்டுமென்றும் அதனை தொடரவேண்டுமென்றும் ஐ.நா.மனித உரிமை அலுவலகத்திற்கு கூறுகிறது. அத்துடன் இருதரப்பாலும் யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரதூரமான மீறல்கள் மற்றும் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரிக்கவேண்டுமென்றும் இந்தப் பிரேரணை கூறுகின்றது.
பக்கச்சார்பற்ற விசாரணை
3. ஐ.நா. மனித உரிமை அலுவலகம் தற்போது பரந்துபட்ட விசாரணையை முன்னெடுக்க அர்ப்பணிப்புமிக்க விசாரணைக்குழுவொன்றை நிறுவியுள்ளது. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. எவ்வாறு சாட்சியங்களை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல் நிலையான தகவல்களைப் பெறுவதற்கும் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் விசாரணைக்குழுவானது முன்னுரிமை அளிக்கிறது. இது மிகவும் சிக்கலுக்குரிய செயற்பாடு. பல செயற்பாடுகளை பல சம்பவங்களையும் வழங்கப்பட்டுள்ள காலத்திற்குள் விசாரிக்கவேண்டியுள்ளது.
இரகசியத்தன்மை அவசியம்
4. மனித உரிமை அலுவலகமானது வெளிப்படையற்றது என்றும் விசாரணைக்குழுவின் தகவல்களையும் மூலங்களையும் வழங்குவதில்லையென்றும் இலங்கை ஊடகங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் இந்த இரகசியத் தன்மையானது விசாரணைக்கான தகவல்களை வழங்குபவர்களையும் விசாரணையின் ஒருங்கிணைப்பையும் பேணுவதற்கு மிகவும் அத்தியாவசியமாகும்.
5. மே மாதம் 30 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியை சந்தித்து விசாரணைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளை விபரித்ததுடன் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரினர்.
பீரிஸுடன் சந்திப்பு
ஜூன்மாதம் 5 ஆம் திகதி முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விசாரணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அரசாங்கம் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஜூன் 10 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த ஜெனிவாவின் வதிவிடப்பிரதிநிதி இலங்கையின் குறித்த பிரேரணை நிராகரிப்பதாகவும் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையென்றும் திட்டவட்டமாக மனித உரிமை பேரவைக்கு கூறியிருந்தார்.
பாராளுமன்ற பிரேரணை
6. ஜூன் 18 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் விசாரணையை எதிர்த்து பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இது இலங்கையின் இறைமையை மீறுவதாக கூறியே பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எவ்வாறெனினும் ஒரு எதிர்க்கட்சியானது இதற்கு எதிராக வாக்களித்ததுடன் சிலர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டனர்.
வட மாகாண சபை பிரேரணை
வடமாகாணசபையின் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கான பிரேரணையை ஆதரித்து மூன்று பிரேரணைகள் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி நிறைவேற்றப்பட்டிருந்தன.
பீரிஸ் நிராகரிப்பு
7. ஜூன் மாதம் 5 ஆம் திகதி முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கடிதத்திற்கு ஜூலை மாதம் 5 ஆம் திகதி பதிலளித்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அரசாங்கம் இலங்கை தொடர்பான பிரேரணையை முற்றாக நிராகரிப்பதாகவும் இது தொடர்பான எந்த செயற்பாட்டிலும் இலங்கை ஈடுபடாது என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
எவ்வாறெனினும் எமது அலுவலகத்துடனான தொடர்புகள் தொடர்ந்தும் பேணப்படும் என்று கூறியிருந்தார். விசாரணைக்குழுவிற்கு இணைப்பாளர் ஒருவரை மனித உரிமை அலுவலகம் நியமித்ததையும் ஜெனிவாவிலுள்ள இலங்கையின் வதிவிட அலுவலகம் நிராகரித்திருந்தது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அலுவலக விசாரணைக்குழுவிற்கு இலங்கை வர அனுமதி வழங்கமாட்டாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கூறியிருந்தார்.
நிபுணர்கள் நியமனம்
8. எவ்வாறெனினும் பிரேரணையின் விதிமுறைகளுக்கு அமைவாக முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மாட்டின் அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் சில்வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜாங்கீர் ஆகிய நிபுணர்களை விசாரணைக்கு ஆலோசனை வழங்க நியமித்திருந்தார்.
விசேட ஆணையாளர்களும் விசாரணைக்குழுவிற்கு பல வழிகளில் உதவி வருகின்றனர். அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் சுயாதீனத்தினைப் பாதுகாத்து இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
விசேட ஆணையாளர்கள் உதவி
9. இந்த நிபுணர்கள் உதவியமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் நன்றி தெரிவிக்கின்றார். அவர்கள் விசாரணைகளை நடத்தமாட்டார்கள். ஆனால் விசாரணைக்கு நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் விசாரணைக்குழுவிற்கு வழங்குவார்கள். அதுமட்டுமன்றி விசாரணையை சுயாதீனமாக உறுதிப்படுத்துவதையும் செய்வார்கள்.
நிபுணர்கள் சந்திப்பு
செப். 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நிபுணர் குழு ஐ.நா. மனித உரிமை விசாரணைக்குழுவுடன் ஜெனிவாவில் சந்திப்புக்களை நடத்தியதுடன் விசாரணை முறைமை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்தது. அதுமட்டுமல்ல ஐ.நா. விசாரணைக்குழுவானது விசேட ஆணையாளர்களுடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.
அரசாங்கத்துக்கு பதில்
10. இந்த இடத்தில் இலங்கை அரசாங்கம் நேரடியாக முன்வைத்துள்ள இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு மனித உரிமைகள் ஆணையாளர் முன்வந்துள்ளார். முதலாவது குற்றச்சாட்டானது இலங்கை தொடர்பான பிரேரணையில் இராண்டாவது பந்தி சுயாதீனமான உள்ளக விசாரணையைக் கோருவதாகவும், 10ஆவது பந்தியானது சர்வதேச விசாரணையைக் கோருவதாகவும் எனவே இது முரண்பாடானது என்றும் தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இந்த இடத்தில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறுகின்றோம்.
நிறைவேற்றப்பட்டுள்ள மனித உரிமை பேரவையில் குறிப்பிட்டுள்ளவாறு இலங்கையானது மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேச கடப்பாட்டைக் கொண்டுள்ளது. எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கம் உள்ளக, நம்பகமான செயற்பாட்டை முன்னெடுக்காததை 25ஆவது அமர்வில் சுட்டிக்காட்டுவதுடன் அது அதனுடைய விசாரணையை கோரி நிற்கின்றது.
இரண்டாவது குற்றச்சாட்டு
11. இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது தர்க்கமானது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஐ.நா. விசாரணைக்குழு விசாரணை நடத்தப்போகின்றது என்பதாகும். இது மிக முக்கியமான காரணமாகும். ஏனெனில் நல்லிணக்க ஆணைக்குழுவானது 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதான சம்பவங்கள் தொடர்பாகவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சம்பவம் குறித்தும் விசாரணை செய்திருந்தது. யுத்த முடிவின் பின்னர் சந்தேக நபர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த விவகாரம் காணாமல் போதல் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
எனவேதான் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை 2009 ஆம் ஆண்டு வரை மட்டுமன்றி நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப்பகுதி வரை கவனம் செலுத்தப்படவேண்டுமென விளக்கமளித்திருந்தார்.
ஆணையாளர் கவலை
12. எவ்வாறெனினும் இலங்கை தொடர்பான பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை தொடர்பிலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணையாளர் ஆழமாக கவலையடைகிறார். அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் தன்னை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இம்மாத இறுதியில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை நியூயோர்க்கில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அருமையான சந்தர்ப்பம்
13. யுத்தத்தின் போது இரண்டு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உண்மையை ஆராய்வதற்கு இது ஒரு தனித்துவமான வரலாற்று சந்தர்ப்பமாகும். இது இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும். குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பு மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் இந்த செயற்பாடானது புலிகள் மற்றும் இராணுவக்குழுக்களின் குற்றங்களையும் அவர்கள் சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டமையையும், சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தியமையும் ஆராயும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதானது அரசாங்கத்தின் பெறுமதியான தகவல்களை கவனத்தில் கொள்வதற்கு முடியாமலபோவதற்கு காரணமாகிவிடும்.
உண்மையை கண்டறிய உதவும்
14. அதுமட்டுமல்ல இது ஆழமான உண்மையை கண்டறியும் செயற்பாட்டுக்கும் ஒரு சந்தர்ப்பதை வழங்குவதுடன் இது இலங்கையின் நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும். மே மாதம் 18 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்து அவர் குடிபெயர் தொழிலாளர்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
15. மேலும் 9 விசேட அறிக்கையாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு கோரியுள்ளனர். அவை இன்னும் நிலுவையில் உள்ளன. சிறுபான்மை விவகாரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம், காணாமல்போதல்கள், மனித உரிமை காப்பாளர்கள், சுயாதீன நீதித்துறை மற்றும் சட்டத்தரணிகள், பெண்களுக்கு எதிரான அநீதிகள், உண்மை, நீதி உள்ளிட்ட விடயங்களை ஆராய விசேட அறிக்கையாளர்களே இலங்கை வருவதற்கு கோரியுள்ளனர்.
அழையுங்கள்
16. நிர்ப்பந்தத்தின் பேரில் காணாமல் போனோர் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் குறித்த விசேட ஆணையாளர்களே இலங்கைக்கு அழைக்குமாறு ஆணையாளர் வலியுறுத்துகிறார். அரசாங்கம் இதனை பரிசீலிப்பதாகவும் இலங்கையில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை முடிந்ததும் விசேட ஆணையாளர்களை அழைப்பது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்தது.
17. இலங்கையிய்ன் ஐந்தாவது மீளாய்வு அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பரிசீலிக்கப்படும்.
ஆணையாளர் அதிர்ச்சி
18. இலங்கையில் தற்போது சிவில் சமூக குழுக்கள் மனித உரிமை காப்பாளர்கள், மற்றும் ஐ.நா.விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்கள் மீதான அச்சுறுத்தல் பிரசாரங்கள் , சித்திரவதைகள் மற்றும் பழிவாங்கல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஐ.நா. மனித உரிமை விசாரணைக்கு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அது அரசியல் அமைப்பிற்கு எதிராக இருந்தால் இவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். இவ்வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் அமர்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு பல அரசியல் கட்சிகள், குழுக்கள், கோரிக்கை விடுத்திருந்தன.
19. இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக வெறுக்கத் தக்க கூற்றுக்கள் வெளியிடப்பட்டன.
சந்திப்பு கலைப்பு
20. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இராஜதந்திர சமூகத்துடன் சிவில் அமைப்புகள் மேற்கொண்ட சந்திப்பு பிக்குமார்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களினால் கலைக்கப்பட்டது. அவர்கள் மோசமான வார்த்தைப்பிரயோகங்களால் விமர்சிக்கப்பட்டனர். பொலிஸார் அந்த இடத்தில் இருந்தாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை அடுத்து அறிக்கையொன்றை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு, இராஜதந்திர சமூகமானது நிகழ்வுகளில் பங்கெடுக்கும் போது உள்ளக உணர்வு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டுமெனக் கோரியிருந்தது.
21. இரண்டு முக்கிய மனித உரிமை சட்டத்தரணிகள் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இனந்தெரியாதவர்களினால் அச்சுறுத்தப்பட்டிருந்தனர்.
16 தமிழ் அமைப்புக்கள் தடை
22. மார்ச் 22ஆம் திகதி 16 தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்டநபர்களையும் தடைசெய்திருந்தது. புலிகளை மட்டுமல்ல சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையும் தடை செய்தது. இந்த அமைப்புக்கள் சர்வதேச பொறிமுறை அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டவைகள். இலங்கை அரசாங்கத்திற்கு பயங்கரவாதம் மீள் உருவாகுவதை தடுப்பதற்கு இருக்கின்ற பொறுப்பை மதிக்கின்ற மனித உரிமைகள் ஆணையாளர் இவை உரிய முறைகளை பின்பற்ற வேண்டுமென்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளையும் பாதிக்க கூடாது என்றும் கருதுகிறார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான செயற்பாடுகள்
23. முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரின் இறுதி அறிக்கைக்குப் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான தடைகளும் இதன் ஒரு பகுதியாகும். அரச சார்பற்ற நிறுவனங்கள், செய்தியாளர் மாநாடுகளையும், செயலமர்வுகளையும் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளையும் ஊடக அறிக்கை வெளியிடுதல்களையும் செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் சுற்றுநிருபம் ஒன்றை வெ ளியிட்டிருந்தது. இதனை எதிர்த்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார்.
தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வுகள் ஜூன், ஜூலை மாதங்களில் தடுக்கப்பட்டன.
24. மனித உரிமை அலுவலகத்தின் விசாரணைக்குழுவானது தகவல்களை வழங்கக்கூடிய சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்பதை உணர்கின்றது.
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம்
25. இது இலங்கையில் உள்ளக விசாரணையிலும் , தாக்கத்தை செலுத்தும். காரணம் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீண்ட கரிசனை காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமூலத்தை ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த சட்டமூல வரைபானது 2006 ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச தரங்களுக்கு அமைவாக இந்த சட்டமூலத்தை ஐ.நா. மனித உரிமை அலுவலகம் மிகவும் கவனமாக ஆய்வு செய்து வருகிறது.
எவ்வாறெனினும் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை தொடர்பில் பல கவனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சாட்சியாளர்களை பாதுகாக்கும் பிரின் அமைவிடம் பொலிஸ் திணைக்களத்திற்குள் வருகின்றமை வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை பெறமுடியாமை என்பன தொடர்பில் கவனம் எழுப்பப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் மனித உரிமை அலுவலகம் வழங்குவதற்கு முன்வந்த தொழில் நுட்ப உதவிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தேசிய செயற்றிட்டம் ஆராயவில்லை
26. இலங்கை தொடர்பான பிரேரணை ஊடாக மனித உரிமைப் பேரவை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரியது. இலங்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான தேசியசெயற்றிட்டம் உரிய முறையில் விடயங்களை ஆராயவில்லை என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. அது சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவில்லை.
30 வீத பரிந்துரைகள்
27. மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 30 வீத பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. செயலாளருக்கு குறிப்பிட்டிருந்தார். நல்லிணக்கத்திற்கான விசேட பணியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரை அமுலாக்கம் தொடர்பான இறுதித் திட்டம் இவ்வருடம் ஜூலை மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
28. மும்மொழி அமுலாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அரச கரும மொழி திணைக்கள நியமனம் , வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பொலிஸார் நியனம் என்பவற்றை குறிப்பிடலாம். தேசிய ஒற்றுமை மாநாடு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.
29. வடக்கு, கிழக்கில் இன்னும் 7840 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட் பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளன. வடக்கில் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை மீள்கட்டுமான செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஈடுபடவேண்டுமென மனித உரிமை ஆணையாளர் ஊக்குவிக்கிறார்.
அலுவலகம் பின்பற்றும்
30. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றங்களை ஐ.நா. மனித உரிமை அலுவலகம் தொடர்ச்சியாக நெருக்கமாக பின்பற்றும்
காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழு
31. மிக முக்கியமான விடயமாக காணாமல் போனோர் விடயம் குறித்து விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு,கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்துகிறது. ஆகஸ்ட் மாதம் வரை இந்த ஆணைக்குழு ஆறு சுற்று அமர்வுகளை கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் பகுதிகளில் நடத்தியுள்ளது. வடக்கு கிழக்கிலிருந்து ஆணைக்குழுவிற்கு 12,995 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எவ்வாறெனினும் ஏனைய மாகாணங்களிலிருந்து 374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இராணுவக் குடும்பங்களில் காணாமல்போன 5000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கண்காணிக்கவில்லை
32. இந்த ஆணைக்குழுவின் அமர்வுகளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு கண்காணிக்கவில்லை. இங்கே மொழிபெயர்ப்பு விவகாரம் எழுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குவதில் குறைபாடுகள், அமர்வுகளில் இராணுவ புலனாய்வாளர்களின் பிரசன்னம், காணாமல்போனவர்களின் உறவினர்களின் குடும்பங்கள் சித்திரவதை மற்றும் அழுத்தங்களுக்கு பொலிஸாரினால் உட்படுகின்றமை என்பன எழுப்பப்பட்டுள்ள விடயங்கள். காணாமல் போனோரின் குடும்பங்களிடம் காணாமல்போனவர்களுக்கான மரணச் சான்றிதழைப்பெற்றுக்கொள்ளுமாறு பயங்கரவாதப் புனாய்வுத் திணைக்களத்தினர் அழுத்தம் வெ ளியிட்டதாக முல்லைத்தீவில் ஜூலை மாதம் இடம்பெற்ற அமர்வுகளின் போது சாட்சியமளிக்கப்பட்டது.
ஆணை விரிவு
33. காணாமல்போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குவின் ஆணை 2015 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த ஆணைக்குழுவின் ஆணையை விரிவுபடுத்தினார். அதாவது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இரண்டு தரப்பினராலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டனவா என்பது குறித்தும் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினரா என்பது குறித்தும் விசாரிப்பதற்காக ஆணை விரிவுபடுத்தப்பட்டது.
34. அதுமட்டுமன்றி ஜனாதிபதி ஆறு சர்வதேச நிபுணர்களை ஆலோசனை வழங்குவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டவரை இந்த சர்வதேச நிபுணர்களின் வகிபாகம் தெரிவிக்கப்படவில்லை. ஆணை விரிவுபடுத்தப்பட்டதன் பின்னர் செயற்பாடுகள் மாற்றமடையுமா? என்பது குறித்தும் எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னேற்றம் இல்லை
35. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. எனினும் அதன் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இரண்டாவது கட்ட விசாரணைகள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் காணப்படவில்லை.
ஐந்து மாணவர் படுகொலை
36. 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை இதுவரை முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. 17 அரச சார்பற்ற ஊழியர்கள் மூதூரில் 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் பிரான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் தற்போது வெ ளிநாட்டிலுள்ள காட்சியாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
37. வெலிவேரிய சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவம் நடத்திய விசாரணையின் அறிக்கை இன்னும் வெ ளியிடப்படவில்லை. வவுனியா மற்றும் வெலிக்கந்த சிறைகளில் 2012 ஆம் ஆண்டு நடந்த மரணங்கள் குறித்த விசாரணைகள் குறித்தும் வரவில்லை.
38. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட சித்திரவதைகள் குறித்த தேசிய விசாரணை இதுவரை செயற்படவில்லை.
எம்லுபுக்கூடு விவகாரம்
39. புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் வெ ளிப்படுத்தப்பட்டாலும் விசாரணைகள் தாமதமாகவே இடம் பெற்றன. மன்னாரில் 2013 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் 80 சடங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
40. முல்லைத்தீவிலும் மாத்தளையிலும் இவ்வாறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டன. 1980 களில் ஜே.வி.பி. கிளர்ச்சிக்காலத்தின்போதானதாக இருக்கலாம் என்றும் அவற்றில் வெ ளிநாட்டு இரசாயண நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசாங்கம் கூறியது.
மனித உரிமை காப்பாளர்கள்
42. தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை காட்டியுள்ளது. 2014 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஆகும் போது 114 முன்னாள் போராளிகள் மட்டுமே புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும் 84 பேர் சட்ட நடவடிக்கைக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான புதிய கைது சம்பவங்களும் தடுப்புகளும் தொடர்ந்து அறிக்கையிடப்பட்டுள்ளன. பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் புலி அமைப்பை வடக்கில் மீள் உருவாக்க செயற்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெண்கள் உட்பட 65 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். யுத்த முடிவின் பின்னர் இது மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தது சம்பவங்களின் மத்தியில் இது அச்சத்தை ஏற்படுத்தியது. சில மனித உரிமை காப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ குறைப்பு
43. வடக்கில் இராணுவத்தினரை குறைப்பது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு கரிசனை செலுத்தியிருந்தது. அதுமட்டுமன்றி இவ்வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேஜர் ஜெனரல் ஜி/ ஏ/. சந்திரசிறியை மீண்டும் வடக்கின் ஆளுநராக நியமித்தார். அரசாங்கம் யுத்தத்தின் பின்னர் வடக்கில் 35 வீத இராணுவத்தைக் குறைத்துள்ளதாக அறிவித்திருந்தது.
44. எவ்வாறெனினும் இராணுவம் தொடர்ந்து தனியார் காணிகளை சுவீகரிப்பதை தொடர்கிறது. உதாரணமாக 6371 தனியார் காணிகளை வலிகாம் வடக்கில் இராணுவம் வைத்துள்ளது. 2176 பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
45. யுத்த முடிவின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை கொழும்பில் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது. 70 ஆயிரத்திற்கும் 1இலட்சத்து 35 ஆயிரத்து உட்பட்ட குடும்பங்கள் இடமாற்றப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை மக்கள் ஆலோசனைத் தன்மை குறைவு என விமர்ச்சிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அச்சுறுத்தல், சித்திரவதை என்பனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சிறுபான்மை மீதான நடவடிக்கைகள்
46. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முன்னாள் ஆணையாளரைப்போன்றே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினத்துக்கு எதிரான மதவாத நடவடிக்கைகள் குறித்து கவலையடைந்துள்ளார். ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் மத வழிப்பாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்கள் மீதான வெறுக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தொடர்பில் 88 முறைப்பாடுகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைகளே அண்மையில் வரலாற்றில் இடம் பெற்ற வெறுக்கத்தக்க வன்முறையாக இருந்தது. பொதுபலசேனாவின் மிகப்பெரிய ஊர்வலத்தை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்கு உட்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. நால்வர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள்
47. சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ விஜயம் செய்து இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணை செய்வதாகவும் நட்டஈடுகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமை தெ ளிவாகியது. வெறுக்கத்தக்க கருத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சட்டமூலம் இன்னும் வரவில்லை. இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான கடும் நடவடிக்கை எடுக்குமாறும் சிறுபான்மை சமூகம் மீதான அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மனித உரிமை அலுவலகம் வலியுறுத்துகிறது.
48. ஜனவரிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை சித்திரவதைகள், தனிப்பவர்களுக்கு எதிரான வன்முறைகள், தனிப்பட்டவர்கள் மத குருமார்கள், மதவழிப்பாட்டுத்தலங்கள் தொடர்பாக கிறிஸ்தவ குழுக்கள் அறிக்கை வெ ளியிட்டிருக்கின்றன.
கவனம் தேவை
49. இந்த வாய்மூல அறிக்கையானது ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளையும் யுத்தத்தின் போதான மீறல்கள் . குறித்த பொறுப்புக்கூறல்மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் மீதும் கவனம் செலுத்துவது முக்கியமானது என்பதை வெளிக்காட்டுகிறது.
50. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் அதன் மூலம் நீண்டகால நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். காணாமல் போனோரின் ஆணைக்குழுவின் ஆணையை விரிவுபடுத்தியதன் மூலம் அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கான பரந்து பட்ட செயற்பாட்டை மேற்கொள்ளும் என அவர் நம்புகிறார்.
ஒத்துழையுங்கள்
51. சிவில் சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருமாறு மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். அத்துடன் இலங்கையின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் குறைத்து மதிப்பிடத்தக்க வகையில் இடம்பெறும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.
52. இலங்கை மீள்குடியேற்றத்தில் முன்னேற்றத்தை வெ ளிப்படுத்தியிருந்தாலும் நடந்து முடிந்த மற்றும் தற்போது இடம் பெறுகின்ற மீறல்களை ஆராய்வது நல்லிணக்கத்தை அடைவதற்கும் சட்டத்தின் ஆட்சிப்பலப்படுத்துவதற்கும் அவசியம் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். இதற்கு மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை செயற்பாடானது முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர் கருதுகிறார்.
எனவே அனைத்து இலங்கையினரதும் நலனுக்காக ஐ.நா. மனித உரிமை அலுவகத்தின் விசாரணை செயற்பாட்டுடனும் ஐ. நா வின் விசேட . ஆணையாளர்களுடனும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறு இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுக்கின்றார்.