Breaking News

தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு -நிலாந்தன்


இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல.

காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல.

ரெலோ இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் வவுனியாவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இவ்விதமாக அறிவித்திருப்பதை ஒரு வெற்றுக்கோஷமாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது, வரும் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அவர் அப்படி அறிவித்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

மாவை சேனாதிராஜா அப்படி அறிவித்ததிற்குப் பின்னால் வேறு உள்நோக்கங்கள் இருக்கக் கூடும். ஆனால் நிச்சயமாக அராசாங்கம் அவர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதில்லை. கடந்த, சுமார் 60 ஆண்டு கால அனுபவத்தை வைத்து அதிலும் குறிப்பாக கடந்த சுமார் ஐந்தாண்டுகால அனுபவத்தை வைத்து அப்படிக் கூற முடியும்.

வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட தரப்போடு சமரசத்திற்கு வரப்போவதில்லை. குறிப்பாக வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் ஓர் பின்னணியில் இந்த அரசாங்கமானது எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறதோ. அவ்வளவுக்கு அவ்வளவு அது தனது வெற்றிவாய்ப்புக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகத்தால் நடத்தப்படும் விசாரணைகளின் முடிவுகள் அடுத்த ஆண்டில் வெளியிடப்படும். அப்பொழுது சிங்கள வெகுசனத்தின் உளவியலானது வெள்ளைக்கார நாடுகளுக்கு எதிராகவும் அந்த நாடுகளை பின்னிருந்து தூண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டும் தமிழர்களுக்கு எதிராகவும் கொதிப்புற தொடங்கும்.

அப்படியொரு கொதிப்பான அரசியற் சூழலை இலக்கு வைத்தே அரசாங்கம் தேர்தல்களை திட்டமிடக் கூடும். மாவை அறிவித்திருக்கும் போராட்டமும் ஏறக்குறைய அக்காலகட்டத்திற்கு உரியதுதான். எனவே தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வலைகள் மிக உச்சமாக காணப்படும் காலகட்டத்தில் தேர்தலை நடாத்தினால் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

இப்படிப் பார்த்தால் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதை விடவும் அவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே அரசாங்கத்திற்கு அதிகம் அனுகூலங்களை தரும். அதாவது தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை அரசாங்கம் அநேகமாக நிறைவேற்றாது. அக்கோரிக்கைகள் ஐக்கிய இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை கேட்கின்றன. ஆனாலும் அவற்றை நிறைவேற்றுவதை விடவும் எதிர்ப்பதன் மூலம் இந்த அரசாங்கம் தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இது தவிர தமிழ் மிதவாதிகளின் செயலுக்குப் போகா வீரம் குறித்தும், சிங்கள தலைவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ் மிதவாதிகள் கூறிக் கொள்வது போல அஹிம்சை போராட்டத்தின் தோல்வியினால் தான் ஆயுதப் போராட்டம் தோன்றியது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றே. எனது கட்டுரைகளில் ஏற்னவே பல தடவை இது பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

அஹிம்சை எனப்படுவது சாகப் பயந்தவர்களின் ஆயுதம் அல்ல. அது சாகத் துணிந்தவர்களின் ஆயுதம் தான். அது ஒரு போராட்ட முறையல்ல மாறாக அது ஒரு வாழ்க்கை முறை. சிலர் இரத்தம் சிந்துவதோடு மற்றவர்கள் அதிலிருந்து பின்வாங்க முடியாது. தமது இறுதி இலக்கை அடையும் வரை உச்சமான தியாகங்களைச் செய்யத் துணிந்தவர்களே அஹிம்சைப்போராட்டத்தில் வெற்றிபெறலாம்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட அஹிம்சை போராட்டம் மேற்சொன்ன பண்புகளை கொண்டிருந்ததா? தமிழ் மிதவாதிகளின் சத்தியாக்கிரகத்தை சிங்கள தலைவர்கள் மூர்க்கமான வன்முறை மூலம் எதிர்கொண்ட போது ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் தலைவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை.

இந்திய அமைதி காக்கும் படையிடம் நீதி கேட்டு மாமாங்கப் பிள்ளையார் கோவிலில் உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அளவுக்கு உயிரைத் துறக்க ஒரு மிதவாத தலைவர் கூட தயாராக இருக்கவில்லை. நடுத்தர வயதைக் கடந்த ஒரு சாதாரண குடும்பத்தலைவியான அன்னை பூபதி தனது கோரிக்கைகளுக்காக சுமார் 30 நாட்களுக்கு மேல் உண்ணாதிருந்து முடிவில் தன் உயிரைத் துறந்தார்.

அப்படியொரு தியாக சிந்தை தமிழ் மிதவாத பாரம்பரியத்தில் யாரிடமாவது இருந்ததா? மாவை சேனாதிராஜாவைப் போன்ற சில மிதவாதிகள் சிறைபோயிருக்கிறார்கள் சித்திரவதைப் பட்டிருக்கிறார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அது ஒரு வயது வரை தான். ஒரு கட்டத்திற்குப் பின் நாடு உயிரைத் தா என்று கேட்ட போது பெரும்பாலான மிதவாதிகள் அரங்கிலிருந்து மறைந்து போனார்கள்.

எனவே, அஹிம்சை போராட்டத்தின் தோல்வியிலிருந்தே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது என்பது முழுக்கச் சரியல்ல. மாறாக அஹிம்சை எனப்படுவது தமிழ் மிதவாதிகளால் சாகப் பயந்தவர்களின் ஆயுதமாகவே கையாளப்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த அனுபவத்திற்கூடாகவே அவர்கள் தமிழ் மிதவாதிகளின் அஹிம்சை போராட்டங்களை பார்ப்பார்கள்.

அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் அரசாங்கமானது தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தை தோற்கடித்த ஓர் அரசாங்கம். தமிழ் மிதவாதிகளைப் போலன்றி ஆயுதமேந்திய இயக்கங்கள் தமது இலட்சியத்திற்காக ஆயிரக்கணக்கில் உயிர்களை துறந்த போராடின. அதனாலேயே அது முழு உலகத்திற்கும் முன்னெப்பொழுதும் கிடைத்திராத ஒரு புதிய அனுபவமாக மாறியது. அப்படிப்பட்ட ஆயுதப்போராட்டத்தையே தோற்கடித்த ஓர் அரசாங்கம் தமிழ் மிதவாதிகளின் அறைகூவல்களை எப்படிப் பார்க்கும்?
எனவே மேற்கண்டவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கும் அஹிம்சைப் போராட்டம் மிக மலிவான ஓரு தேர்தல் உபாயமாக பொலிவிழந்து போகக் கூடிய நிலைமைகளே அதிகம் தென்படுகின்றன.