முரண்பாடும் இணக்கப்பாடும் செல்வரட்னம் சிறிதரன்
நிர்வாகத்திற்கும் இடையில் எத்தனையோ முரண்பாடுகள் இருக்கின்றன. இணைந்து போக முடியாத வகையில் இந்த முரண்பாடுகள் வலுவானவைளாகக் காணப்படுகின்றன.
அரசியல் ரீதியிலும், அதிகார பலத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற ரீதியிலும் வடமாகாண சபையுடன் அரசாங்கம் மோதிக் கொண்டிருக்கின்றது. வடமாகாண சபை இயங்க வேண்டும். ஆனால், அது அதிகாரங்களைப் பயன்படுத்தி காரியங்களை ஆற்றக் கூடிய வல்லமை உள்ளதாகத் திகழக் கூடாது.
வெறும் ஜனநாயகப் பொம்மையாக, தான் சொல்பவற்றை ஏற்று, அதற்கேற்ப ஆடக் கூடியதாக, ஆட்டுவிக்கக் கூடியதாக வடமாகாண சபை செயற்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதுவே அதன் நிலைப்பாடும்கூட.
யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் செயலற்றுப் போயிருந்த ஜனநாயக உரிமைகளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர், நாங்கள் இப்போது நிலைநாட்டியிருக்கின்றோம் என்று உலகத்திற்குக் காட்ட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற மண்ணில், உண்மையான ஜனநாயகம் நிலவக்கூடாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது. ஆனால் அங்கு ஜனநாயகம் நிலவுவதாக வெளியில் தெரிந்தால் போதும். அதற்காக எதனையும் செய்யலாம் என்ற போக்கிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
உண்மையான ஜனநாயகம் நிலவுகின்ற ஒரு பிரதேசத்தில், மக்கள் தங்களுடைய கைகளில் அதிகாரத்தைக் கொண்டிருப்பார்கள். அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதிகார பலமுள்ளவர்களாக, அந்தப் பிரதேசத்தின் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளை ஜனநாயக வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இந்த நிலைமையை, வடமாகாணத்தில் காண முடியவில்லை. ஜனநாயகக் கட்டமைப்புக்கள் அங்கு இருக்கின்றன. ஆனால் அவைகள், அதிகார பலமற்ற வெறும் கோதுகளாகவே காணப்படுகின்றன. இத்தகைய ஒரு பரிதாபகரமான நிலைமையில்தான், தேர்தலின் மூலம், பொதுமக்களின் ஏகோபித்த பெரும்பான்மை பலத்தைப் பெற்று, ஆட்சியமமைத்துள்ள வடமாகாண சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.
வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராகப் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனின் தலைமையில் செயற்பட்டு வருகின்ற வடமாகாண சபையில் இரட்டை நிர்வாகம் நடைபெறுவதாக முதலமைச்சரே கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாக நிறைவேற்று அதிகார பலம் கொண்டவராக அங்கு வீற்றிருக்கின்ற முன்னாள் பிராந்திய இராணுவ தளபதியாகிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் நிர்வாகம் ஒன்று. மற்றது தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சரின் நிர்வாகம் என இரண்டு நிர்வாகங்கள் அங்கு செயற்பட்டு வருவதாக முதலமைச்சர் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஆளுனரின் உத்தரவுகளை அதிகாரிகள் அப்படியே செயற்படுத்துவார்கள். ஆனால் முதலமைச்சரின் உத்தரவுகளை அவர்கள் முழுமையாக நிறைவேற்றுவதில்லை. காரணங்களைக் காட்டியும், ஆளுனரின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறியும் பல செயற்பாடுகளை, வேலைத்திட்டங்களை அதிகாரிகள் புறந்தள்ளுவதுடன், அவற்றை முன்னெடுப்பதற்குத் தடைபோட்டு வருவதாகவும் முதலமைச்சர் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது ஒரு புறமிருக்க, மக்களுக்காகச் செயற்படுகின்ற மாகாண சபையும் மத்திய அராசங்கமும், தத்தமது அதிகாரங்களைப் பிரயோகிக்கும் போது, இயல்பாகவே இரண்டு நிர்வாகங்கள் நடைபெறுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
மத்திய அராசங்கம் தனது அமைச்சுக்கள் ஊடாக, முழு நாட்டுக்குமான பொது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட எல்லைப்பரப்புக்குள் அது பிரவேசிக்க நேரிடுகின்றது. அவ்வாறு பிரவேசிக்கும்போது சட்ட வரையறைகளை மீறி மத்திய அரசு செயற்படுமேயானால், அதனைத் தட்டிக் கேட்கின்ற அதிகாரம் மாகாண சபைக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் இன்றைய நாட்டின் அரசியல் சூழ்நிலையில், மாகாணங்களுக்கான அதிகாரங்களைப் பங்கீடு செய்வதில் நிலவுகின்ற முரண்பாடான சூழலில் மத்திய அரசாங்கத்தைத் தட்டிக் கேட்க முடியாத கையறு நிலைமையிலேயே, வடமாகாணசபை செயற்பட்டு வருகின்றது.
எனவே, உண்மையான நிலைமைகளின்படி பார்த்தால் வடபகுதியில் இப்போது மும்முனை நிர்வாகச் செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றன என்றே கூறவேண்டியுள்ளது. சபையின் முதல்வர் என்ற வகையில் முதலமைச்சர் நடத்துகின்ற ஒரு நிர்வாகம், அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக, பதவியில் உள்ள அரசாங்கத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள ஆளுனரின் நிர்வாகம், முழு நாட்டையும் ஆட்சி புரிகின்ற மத்திய அரசாங்கத்தின் நிர்வாகம் என மூன்று நிர்வாகங்கள் வடபகுதியில் செயற்பட்டு வருகின்றன.
இந்த மூன்று நிர்வாகங்களும் இணைந்து மக்களுக்காகச் செயற்பட வேண்டும். அப்போதுதான் இந்த நிர்வாகங்களினால் மக்களுக்கு முழுமையான நன்மைகள் கிடைக்கும். மூன்று தரப்பும் முரண்பட்ட வகைகளில் செயற்படுமானால், அங்கு மக்களுக்கான சேவைகள் நடைபெற மாட்டாது. குழப்பங்களே மேலோங்கியிருக்கும்.
இத்தகைய ஒரு நிலைமைதான், வடமாகாணத்தில் நிலவுகின்றது. குழப்பகரமான ஒரு நிர்வாகமே அங்கு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முரண்பாடுகளுக்குள்ளேயும் இணைந்து செயற்பட முடியுமா? அரசாங்கத் தரப்பினர் சொல்வார்கள்.
ஆனால் அதன்படி செய்யமாட்டார்கள். ஒரு விடயத்தைச் சரி என ஏற்றுக் கொள்வார்கள். பின்னர் அதுபற்றி முரண்படுவார்கள். எல்லாமே நன்றாக இருக்கின்றன என்று ஆதாரங்களைக்காட்டி நம்ப வைப்பார்கள். ஆனால் நடைபெறுகின்ற காரியங்களைப் பார்த்தால் நிலைமைகளை மோசமாக்குவதற்கான நடவடிக்கைகளாகவே அவைகள் அமைந்திருப்பதைக் காண முடியும்.
இணைந்து செயற்படுவோம் என்பார்கள். ஆனால் காரியத்தில் இறங்குகின்ற போது. இரகசியமான செயற்பாடுகளை முன்னெடுத்து, அந்தக் காரியத்தை அர்த்தமற்றதாக்கியிருப்பார்கள். இத்தகைய ஒரு நிலைமையில்தான் இன்று வடமாகாண சபையின் செயற்பாடுகளும் பிரதேச சபைகள், உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள சபைகளில் இந்த நிலைமை காணப்படுகின்றது. ஆனால், அரச ஆதரவு சக்திகள் நிர்வாக பலத்தைக் கொண்டுள்ள சபைகளில், எதிர்த்தரப்பினர் அந்த நிர்வாகத்தின் செயற்பாடுகளைத் தடுக்கவோ வலுவோடு எதிர்க்கவோ முடியாத காரணத்தினால் அங்கு, அந்த நிர்வாகத்தினருடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையிலேயே திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்தகைய இடங்களில் ஊழல்களும், முறைகேடான நடவடிக்கைகளும் இடம்பெறுவதாகப் பரவலாக முறைப்பாடுகளும் செய்யப்படுகின்றன. குறிப்பாக அரச தரப்பினருக்கு வாக்களிக்காத மக்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாக குற்றஞ் சுமத்தப்படுகின்றது.
தமக்கு எதிரான முறைப்பாடுகளையும், குற்றச்சாட்டுக்களையும் அந்த நிர்வாகத்தினர் மறுத்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஒரு நிலைமையில் மத்திய அரசின் செயற்பாடுகளும், மாகாண அரசின் செயற்பாடுகளும் சங்கமிக்கின்ற, மாவட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முரண்பாடுகளுக்கிடையில் இணைந்து செயற்பட முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான, அரசியல் முரண்பாடுகளும், அரசியல் ரீதியாக ஒத்துப் போக முடியாதுள்ள நிலைமைகளும், அரசியல் செயற்பாடுகளில் மட்டுமல்லாமல், அபிவிருத்திச் செயற்பாடுகளிலும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வேலைத்திட்டங்களிலும்கூட, ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.
இதன் காரணமாகத்தான் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகளை, அரச தரப்பினர் அழைப்பதில்லை.
தாங்களே கூடுவார்கள். தங்களுக்குள்ளேயும், அதிகாரிகளுடனும் கூடிப் பேசுவார்கள். அந்தப் பேச்சுக்கள் தீர்மானங்களுக்கு அமைவாகச் செயற்படுவார்கள். மக்களுக்கான வேலைத்திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுடைய ஆலோசனைகளை ஏற்பதற்கும், அந்த வேலைத்திட்டங்களில் தாங்களும் பங்களிப்பு செய்வதற்கும் அவர்கள் வாய்ப்பளிப்பதில்லை என அரச தரப்பினர்மீது கூட்டமைப்பினர் குறை கூறியிருந்தனர். குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஆனால், வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்தச் சபையின் அதிகாரத்தை;க் கைப்பற்றியதையடுத்து, படிப்படியாக இந்த நிலைமையில் மாற்றங்கள் எற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் இணைத் தலைவராக வடமாகாண முதலமைச்சரையும் அரசாங்கம் ஏற்று கூட்டங்களில் கலந்து கொண்டு செயற்படுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோருடன் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தேர்தல் தொகுதிகளிலான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இணைத் தலைவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கு பற்றி வருகின்றார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இணைத் தலைவராக முதன் முறையாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி எடுத்துரைத்திருந்தார்.
சட்டத்திற்கு முரணான வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வந்த சூழலில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி, அதில் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாகாண ஆட்சியை நடத்தத் தொடங்கியபோது, மாகாண மக்கள் நலம் கருதாது ஆளும் கட்சி நலன் கருதியே நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவது எம்மால் புரிந்து கொள்ளப்பட்டது.
மத்திய அரசாங்க ஆளும் கட்சி தாம் தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீரவேண்டும் என்ற பாணியில்தான் நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவதை அவதானித்தோம் என குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நலன்களுக்கு முரணற்ற முறையில் ஆனால் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இணைந்து முன் செல்வதற்கு, அபிவிருத்தியின் போது, அனைவரையும் உள்ளடக்கக் கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் அணுகுமுறை, பொது மக்களின் விசேட தேவைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளிடையே ஒரு சம நிலையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியமை போன்றவை இன்றியமையாதன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து நடத்திய பேச்சுக்களின்போது ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகள் எதுவுமே கடைப்பிடிக்கப்படவில்லை. நிறைவேற்றப்படவில்லை.
அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதியாமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தி வருகின்றன என கூறிய அவர் முரண்பாடான நிலைமையிலும் இணைந்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் சட்ட ரீதியாக இருக்கின்றது என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார்.
‘அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இருவற்றிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்குந் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்கள் ஊடாக அந்தந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும்.
ஆனால் யதேச்சையாக அரசாங்கமும் அரசாங்க அமைச்சர்களும் நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர். இது ஜனநாயகத்தையே பாதிக்கும்.
தொடர்ந்தும் எம்மக்கள் எதேச்சாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்க வேண்டும் என்று எண்ணுவது மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல் மடமையுமாகும்’ என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆணித்தரமாக அங்கு கூறியிருந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகவே 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்போதும்கூட, மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு திவிநெகும சட்டம் ஒரு உதாரணம். மாகாண சபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கை வைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார்.
வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முன்மாதிரியானதா? வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகிய இருவருடைய இணைத்தலைமையில் முதன் முறையாக நடைபெற்ற வவுனிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அரச தரப்பினரும், எதிர்த்தரப்பினராகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
பல விடயங்கள் ஆராயப்பட்ட இந்தக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அது வரவேற்கத்தக்கது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கைகள் பற்றிய விடயம் ஆராயப்பட்டபோது, 4000 சிங்களக் குடும்பங்கள், மீள்குடியேற்றம் என்ற போர்வையில் இந்த மாவட்டத்தைச் சேராதவர்கள் இங்கு குடியேற்றப்பட்டுள்ள விடயம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன, கடந்த 1983 ஆம் ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களே மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கமளித்தார். ஆனால் அவ்வாறான ஒரு சம்வம் அப்போது நடைபெறவில்லை என்ற காரணத்தினால் கூட்டத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்திருந்தன.
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இது குறித்து கேள்விக் கணைகளைத் தொடுத்தார். சிங்கள மொழியில் அவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அரச தரப்பினர் வேண்டுமென்றால் அவர்களைக் கூட்டி வந்து காட்டலாம் என கூறினர். அது அவசியமற்றது என்று இடித்துரைத்த முதலமைச்சர்,
அவர்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று மீண்டும் கேள்வி எழுப்பினார். உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்கள் சொந்தக் காணிகளிலோ அல்லது வேறிடங்களிலோ குடியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, வெளிமாட்டங்களில் இருப்பவர்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் இங்கு மீள்குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், அதுபற்றிய விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யும்போது, அப்போது அவர்கள் வசிக்கின்ற கிராமசேவை பிரிவைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரி அல்லது வேறு மாவட்டமாக இருந்தால் சம்பந்தப்பட்ட செயலாளர் பிரிவில் அவர்கள் இடம்பெயர்ந்துதான் வசித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியும், அவர்களின் பதிவுகள் நீக்கப்படுகின்றன என தெரிவித்தும் உரிய கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
அத்தகைய கடிதம் இல்லையேல் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படமாட்டார்கள். இந்த நடைமுறை வவுனியாவில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டபோது கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு அமைவாகவே அவர்கள் குடியேற்றப்பட்டார்கள் என்று வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர கூறினார்.
ஆனாலும் அவருடைய கூற்று அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களுக்குத் திருப்திகரமான பதிலாக அமைந்ததாகத் தெரியவில்லை. யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாயகம் திரும்பியபோது யுஎன்எச்சிஆர் நிறுவனத்தினால் வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் தற்போது எஞ்சியுள்ள 300 குடும்பங்களுக்குக் காணிகள் வழங்கிக் குடியேற்றுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரபுரத்தில் வசிக்கின்ற 187 குடும்பங்களை அவர்கள் வசிக்கின்ற அதே காணிகளில் குடியேற்றுவது என்றும், பூந்தோட்டத்த்pல் உள்ள 104 குடும்பங்களையும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடத்தில் அரச காணிகளில் குடியேற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பூந்தோட்டத்தில் உள்ளவர்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்களின் காணிகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த முறைப்பாடு கவனத்தில் எடுக்கப்பட்டபோது, வாக்குவாதங்களும் ஏற்பட்டிருந்தன. பொதுமக்களின் காணியாக இருந்தால் அதற்குரிய காணி அனுமதிப்பத்திரம் இல்லாவிட்டால், அதனை பொதுமக்களின் காணிகள் என ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்கள் அரச காணிகளில் அத்துமீறியிருக்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள் காணிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லாமலேயே வருடக்கணக்கில் வசித்து வருகின்றன என்பது எடுத்துக் கூறப்பட்டதையடுத்து, பூந்தோட்டத்தில் உள்ள குடும்பங்கள் அருகில் உள்ள அரச காணிகளிலேயே குடியேற்றப்படுவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, காணிகள் தொடர்பான வேறு சில பிரச்சினைகளுக்கும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முரண்பாடுகளுக்கு மத்தியிலும் விடயங்கள் தொடர்பாக வாதிட்டு முடிவுகளை மேற்கொண்ட வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இதுகால வரையிலும் நடைபெற்ற இது போன்ற கூட்டங்களுக்கு முன்மாதிரியதானதாகவே கருதப்படுகின்றது.
முரண்பாடுகளுக்கிடையிலும் பொதுமக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற இந்தப் போக்கு ஆரோக்கியமான ஒரு நல்ல அறிகுறியாகும். தொடர்ந்து இதனை சம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுக்க வேண்டும். முன்னெடுப்பார்களா?