பிரபாகரனை ராஜீவ் ஏமாற்றினாரா? ராஜீவை பிரபாகரன் ஏமாற்றினாரா?
நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது..!1987 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் டில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ்காந்தி.
ஆனால், இலங்கைத் தூதுவராகவிருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்து கொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள்.
பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை டில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள். இந்திய -– இலங்கை உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள்.
அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்சினையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார். அதற்குப் பிறகு ஜூலை 28-ஆம் திகதி நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார்.
''உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விபரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். 'ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கின்ற இலங்கையில் இந்த உடன்படிக்கையின் அதிகாரப்பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம்.
மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானவை. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம். அதற்கு ராஜீவ்காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப்புரிகிறது. இந்த உடன்படிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலிருந்தால் போதும்'' என்றார்.
இறுதியாக, வட கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப்புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விடயங்களை ஜெயவர்த்தனவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதியளித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் இலங்கை அரசு பொலிஸ் நிலையங்களைத் திறக்கக்கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ்காந்தி இணக்கம் தெரிவித்தார். ஆயுதங்கள் ஒப்படைப்புப்பற்றிய பிரச்சினையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும் என ராஜீவ் கூறினார்.
இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகேயிருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ்காந்தி - பிரபாகரன் உடன்படிக்கை பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடமிருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது.
அது இந்த இரகசிய உடன்படிக்கைக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார். இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்படிக்கையாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார்.
அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தன இந்த உடன்படிக்கைக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார். இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்.
அந்த உடன்படிக்கையில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தன மறுத்த போது அவரைத் தட்டிக் கேட்கவில்லை.
1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை.
2. வட கிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.
3. சிங்கள ஊர்காவல் படையிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை.
உடன்படிக்கையில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தன மறுத்தபோது, திலீபன் சாகும்வரை உண்ணா நோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தார். இலங்கை அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார்.
ஆனால், பிரதமர் ராஜீவ்காந்தி வாயைத் திறக்கவில்லை. இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது. சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தை விட்டு விட்டு, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய இராணுவத் தளபதியின் அனுமதி பெற்று புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி மறித்த இலங்கை கடற்படை, அவர்களைக் கைது செய்தது.
ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் இலங்கை கடற்படையின் செயலைக் கண்டித்தார். இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தன விரும்பவில்லை.
17 விடுதலைப்புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் டில்லிக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார்.
எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார். இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்து வந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். இலங்கை இராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் இறந்தனர்.
எஞ்சிய ஐவர் வைத்தியசாலையில் பிழைத்துக்கொண்டனர். ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடமிருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ்காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக்கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய இராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
விடுதலைப்புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ்காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்? இந்திய அமைதிப்படையின் தளபதியாகவிருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விபரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன.
பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை இரத்துசெய்யப் போவதாக ஜெயவர்த்தன பயமுறுத்தினார்.
இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ்காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார். இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தன மேற்கண்ட மிரட்டலை விடுத்தார்.
பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விடயத்தைத் தெரிவித்தார். உடன்படிக்கை இரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார்.
போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்படிக்கை செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார். புலிகளுடன் போர் தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது.
ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது. போஃபர்ஸ் பிரச்சினையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக் கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார்.
இதன் விளைவாக பெரும்போர் மூண்டது. துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.