இந்தியன் எயாலைனில் எலி அவசரமாக தரையிறங்கிய விமானம்
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கபின் அறையில் எலி ஒன்று ஓடியது. வயர்களை எலி கடித்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ1-021 என்ற எண்ணுடைய ஏ321 ஏர்பஸ் ஒன்று திங்கட்கிழமை அன்று மாலை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் திடீரென தரை இறங்கியது. இதற்குக் காரணம் ஒரு சுண்டெலிதான்.
விமான ஊழியர்களுக்கான பின்புற அறையில் எலிகளின் நடமாட்டத்தைப் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த விமானம் பயணத்திற்குத் தயாராகாமல் சுத்தம் செய்யப்படும் பணிக்காக மத்திய சேமிப்புக் கிடங்கு அதிகாரிகளால் ஒரு தனியான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
விமானத்தில் ஒரு எலியின் நடமாட்டம் தென்பட்டால்கூட விமானம் முற்றிலும் சுத்தப்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. வயர் இணைப்புகளை இந்த எலிகள் கடித்து குதறிவைத்தால் விமானிகளால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு பேரழிவை சந்திக்கக்கூடும் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பயணிகள் விமானத்தில் சிந்தும் உணவுப்பொருட்களை உண்பதிலேயே எலிகள் கவனமாக இருப்பதால் வயர்களைக் கடிக்கும் நிலைமையிலிருந்து அவை பொதுவாகத் தடுக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
விமானப் பயணத்திற்கான உணவை விமானத்தில் கொண்டுவந்து சேர்க்கும் கேட்டரிங் வேன்கள் மூலமாகவே எலிகள் விமானத்தினுள் நுழைகின்றன. இது ஒரு உலகளாவிய நிகழ்வாகவே நடைபெற்று வருகின்றது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
விமானத்துக்குள் எலி இருப்பது தெரிய வந்தால், விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. மின் வயர்களை எலி கடித்து சேதப்படுத்தியுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். எலியை உயிருடன் பிடிக்க முடியவில்லை என்றால், விமானத்துக்குள் மயக்க மருந்து புகை செலுத்தி எலியை பிடிக்க வேண்டும்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருக்கும்போது, முக்கியமான வயரை எலி கடித்துவிட்டால், அனைவரின் உயிருக்கும் ஆபத்து என்பதால், எலியைப் பொறுத்தவரை கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
விமானத்தின் மின் வயர்களை எலி கடித்து சேதப்படுத்தவில்லை என்பதையும், விமானத்தில் எலி இல்லை என்பதையும் 100 சதவீதம் உறுதி செய்தபிறகே விமானம் கிளம்ப அனுமதி அளிக்கப்படும்.
பலமுறை எலி பிரச்சினையால் ஏர் இந்தியா விமானம் புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரியாத் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
எலி சிறியதுதான். ஆனால் பெரிய விமானத்தையே நிறுத்திவிடுகிறது என்பதுதான் உண்மை.