பல்கலையில் தொடரும் புலி பிடிப்பு நாடகங்கள் -வீரகேசரி
கடந்த ஆகஸ்ட், மூன்றாம் திகதி அதிகாலை பிரவேசித்த வன்முறையாளர்கள் சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், முகமாலை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் சுதர்ஷன் என்ற மாணவரே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தாக்குதலும் அதனை சுற்றிய சம்பவங்களும் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.
தென் இலங்கையில் அல்லது வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழ் மாணவர்கள் அல்லது தமிழ் பேசும் மாணவர்கள் அதிகமாக கற்கும் பல்கலைக்கழகமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை அடையாளப்படுத்தலாம். இந்த பல்கலையைப் பொறுத்தவரை சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எவ்வித பேதமும் இன்றி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் அனைத்து தரப்பினரையும் அல்லது இனத்தவரையும் உள்ளடக்கிய அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் 8 உள்ளிட்ட சங்கங்கள் பலவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் தடை செய்யப்பட்டன. இதனை எதிர்த்து அந்த பல்கலையின் மாணவர்கள் செய்து வரும் போராட்டமானது 512 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
இந் நிலையிலேயே அப்பல்கலையில் கற்ற தமிழ் மாணவன் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டு, அங்குள்ள ஏனைய சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மாணவர்களின் மனங்கள் அச்சம் கொள்ளும் படியாக அல்லது புதிதாக மாணவர்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வண்ணம் விஷமிகள் சிலர் கைகோர்த்துள்ளதாக எண்ண வேண்டியுள்ளது.
சம்பவம் யாழ்.முகமாலையை சேர்ந்தவர் சந்திர குமார் சுதர்ஷன். பல கனவுகளுடன் யுத்த வடுக்களை தாண்டி சப்ரகமுவ பல்கலையில் கல்வி பயில வந்த மாணவன் அவன். இந்த கட்டுரை நேற்று எழுதப்படும் போது அவன் கனவுகளை சுமந்தவனாக இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
இதற்கு காரணம் கடந்த மூன்றாம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற அந்த சம்பவமாகும். சந்திரகுமார் சுதர்ஷன் பல்கலையின் வெளியே உள்ள விடுதியிலேயே தங்கியிருந்து கற்றலை மேற்கொண்டவன். சுதர்ஷன் தங்கியிருந்த அந்த விடுதிக்கட்டிடத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது இன்னுமொரு விடயம்.
இந் நிலையில் கடந்த இரண்டாம் திகதி இரவு தனது கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்துவிட்டு வழமை போன்றே சுதர்ஷன் நித்திரைக்கு சென்றுள்ளான். அப்போது நேரம் நள்ளிரவு 12 மணியை அண்மித்திருந்துள்ளது. நித்திரையிலிருந்து மீண்டும் அதிகாலை 3.00 மணியளவில் விழித்துக்கொண்டுள்ள சுதர்ஷன் இயற்கை தேவையை பூர்த்தி செய்வதற்காக மலசல கூடத்தை நாடி சென்றுள்ளார்.
இதன் போது முக மூடி அணிந்த நபர் ஒருவர் சுதர்ஷனை மறைந்திருந்து கட்டிப்பிடித்து வாயை அடைக்க, இன்னுமொருவர் கட்டை ஒன்றினால் அம்மாணவனின் தலையில் அடித்துள்ளார். இதனை அடுத்து என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது என கூறும் சுதர்ஷன் என்ற அந்த மாணவன் மயக்கம் தெளியும் போது தான் விடுதிக்கு வெளியே காட்டுப்பாங்கான இடத்தில் இருந்ததாக குறிப்பிடுகின்றார்.
குறித்த மாணவனின் கைகால்கள் கட்டப்பட்டு உடம்பெங்கும் வெட்டுக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் மாணவன் சத்தம் போட்டுவிடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ வாயில் உள்ளாடை (பெனியன்) ஒன்று திணிக்கப்பட்டிருந்துள்ளது. அத்துடன் தலைப்பகுதி உடல் பகுதி என வேறு பாடின்றி மிக மூர்க்கத்தனமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ள அந்த மாணவன் பல்கலைக்கழக விடுதி நோக்கி வந்து அந்த விடுதி வாயிலிலேயே விழுந்துள்ளான். இதனை அடுத்தே மாணவன் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து பலாங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் பலாங்கொடை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அந்த மாணவன் நேற்றும் அந்த வைத்தியசாலையிலேயே சிகிச்சைகளை தங்கியிருந்து தொடர்ந்து பெற்று வருகின்றார்.
எச்சரிக்கைகளும் பின்னணியும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற சில வாரங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஜூலை மாதம் 20 ஆம் திகதியளவில் பல்கலையின் பண்டா மாணவர் விடுதியில் அசிங்கமான வார்த்தைகளால் தமிழ், முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு சுவரொட்டியொன்றின் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.
குறித்த மாணவர் விடுதியின் கழிப்பறையில் ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில் சிறுபான்மை இன மாணவர்களை உடன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
குறித்த அறிவித்தலை மீறி எவரேனும் (தமிழ், முஸ்லிம் மாணவர்கள்) பல்கலையில் இருப்பின் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் எனவும் மாணவிகள் மானபங்கப்படுத்தப்படுவார்கள் எனவும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அங்கு கல்வி பயிலும் பல மாணவர்களும் எமது கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.
அந்த சுவரொட்டியில் சில மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் எழுத்துப் பிழைகளும் காணப்படுகின்றன. இது எங்கள் நாடு, நீங்கள் போய்விடுங்கள், நீங்கள் புலிகள் போன்ற வார்த்தைகள் அவற்றில் எழுதப்பட்டுள்ளன. இந் நிலையில் அந்த சுவரொட்டியை பல்கலைக்கழக நிர்வாகம் பார்த்த பின்னரும் எவ்வித நடவடிக்கையும் அல்லது உருப்படியான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையிலேயே கடந்த மூன்றாம் திகதி மாணவன் ஒருவன் தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட தோற்றத்தை கொண்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் உடலில் பச்சை குத்தியிருந்ததாகவும் அவர்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் எனவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் கூறியுள்ளார்.
கடந்த 30 வருடகாலம் போர் நடைபெற்ற போதிலும் பல்கலைக்கழங்களில் இனவாத மோதல்கள் ஏற்படவில்லை. அதற்கு மாணவர்களும் இடமளிக்கவில்லை. பல்கலையிலும் புலி வேட்டையா? தமிழ் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டு ஏனைய சிறுபான்மை இன மாணவர்களுக்கு சுவரொட்டியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,
தமிழ் மாணவர்களை விடுதலை புலிகளாக சித்திரிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்பதை மட்டும் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றது.
கடந்த மூன்றாம் திகதி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தொடர்பிலான விசாரணைகளில் சமனல்கந்த பொலிஸார் மற்றொரு தமிழ் மாணவனை கடந்த ஐந்தாம் திகதி முற்பகல் வேளையில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த போது கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த மாணவன் தற்போது புலி முத்திரை குத்தப்பட்டு பயங்கர வாத புலனாய்வுப் பிரிவினரால் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யோகநாதன் நிரோஜன் முன்னாள் புலிகளின் உறுப்பினர் என்பதை காரணம் காட்டியே இவ்வாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். யோகநாதன் நிரோஜன் புலிகளின் மருத்துவ பிரிவில் இறுதிகட்ட யுத்தத்தின் போது இருந்துள்ளமை உண்மை தான்.
எனினும் பின்னர் யோகநாதன் நிரோஜன் உள்ளிட்ட பலரும் புனர் வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 2011/2012 ஆம் ஆண்டுகளில் புனர்வாழ்வு முகாமில் இருந்த வாறே பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் நுழைந்தவரே இந்த யோகநாதன் நிரோஜன். தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் யோகநாதன் நிரோஜன் தொடர்பில் இந்த மூன்று ஆண்டுகளில் எவ்வித முறைப்பாடுகளும் இல்லை.
இவ்வாறான நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் கைதானது பாரிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. இதனிடையே சப்ரகமுவ பல்கலைக்கழக சிறுபான்மை இன மாணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்ட சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அந்த மாணவனின் கைதுக்கு குறிப்பிடும் காரணத்துக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை.
எவ்வாறாயினும் இந்த கைதை பல்கலைக்கழகத்தில் உள்ள சிங்கள மாணவர்களே எதிர்த்துள்ளனர். அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கைது செய்யப்பட்ட மாணவனை உடன் விடுதலை செய்யுமாறு கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்த கைது மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தற்போது காணப்படும் நிலைவரம் குறித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவர் கேசரியுடனான கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார். 'சப்ரகமுவ பல்கலையை பொறுத்த மட்டில் மாணவர்களுக்கு மத்தியில் எவ்வித இன மத பேதங்களும் இது வரை இருந்ததில்லை. தற்போது யாரோ, தமது அரசியல் நோக்கங்களுக்காக இடரினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதனாலேயே மூன்று வருடங்களாக எம்முடன் கல்வி பயின்ற சகோதரரை புலி முத்திரை குத்துகின்றனர்.
இவர் இங்கு மூன்று வருடங்கள் இருந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி வரை புலியாக தெரியாதது ஏன்?. அத்துடன் இவரைப் போன்றே புனர்வாழ்வளிக்கப்பட்ட இன்னும் பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்ளனர். அவர்களுக்கும் ஒரு அபாய சமிக்ஞையை இந்த கைது கொடுத்துள்ளது.
செல்லும் போக்கை பார்க்கும் போது பிரபாகரனின் மக்கள் கூட ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து கைது செய்யப்படலாம். இது மிகப் பயங்கரமான ஒரு நிலைமையாகும்.' என குறிப்பிட்டார்.
அச்சுறுத்தும் பல்கலை நிருவாகம் இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவன் குறித்து ஆரம்பத்தில் பொலிஸார் மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்கோ நண்பர்களுக்கோ தகவல் வழங்காத நிலையில் பல்கலை நிர்வாகத்தை அந்த பல்கலை மாணவர்கள் நாடியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர் தொடர்பில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார், அவரை பரீட்சை எழுத அனுமதிக்க வேண்டும், உடனடியாக விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் பல்கலை நிர்வாகத்தை சந்தித்த இரு மாணவர்களில் அடையாள அட்டைகள் பல்கலை நிர்வாகத்தினால் பிடுங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பல்கலை மாணவர் ஒன்றியம் எமது கவனத்திற்கு விடயத்தை கொண்டுவந்தது. தம்முடன் ஒன்றாக படிக்கும் மாணவனின் கைதுக்கான காரணம் கோரி சென்ற இருவரே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளனர். மாணவனை தாக்கியது யார்? இந்த கைது விடயம் ஒரு புற மிருக்க, கடந்த மூன்றாம் திகதி அதிகாலை குறித்த மாணவனை உண்மையிலேயே தாக்கியது யார் என்ற கேள்விக்கு இது வரை விடையில்லை.
அது தொடர்பான விசாரணைகளிலேயே இந்த மூன்றாம் வருட மாணவன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் சமாளிக்க முனைந்தாலும், சம்பவம் இடம்பெற்ற மூன்றாம் திகதி யோகநாதன் நிரோஜன் சப்ரகமுவ பல்கலையில் இருக்கவே இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது முதலாம் வருட மாணவன் சந்திர குமார் சுதர்ஷன் தாக்குதலுக்கு உள்ளாகும் போது யோகநாதன் நிரோஜன் விடுமுறையில் வவுனியாவில் உள்ள அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். அவர் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு நான்காம் திகதி திங்கட் கிழமையே சமூகமளித்துள்ளார்.
இதற்கான நேரடி சாட்சியங்களாக அங்குள்ள பல மாணவர்கள் உள்ளனர். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த மாணவனின் கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற புலனாய்வு துறையினர், அவரது விவரங்களைப் பெற்றுள்ளனர்.
எதற்காக விவரம் எடுக்கின்றீர்கள் என கேட்ட போது "எதுவும் வேலை வந்தால் கொடுப்பதற்கு" என்று கூறினார்கள் என மாணவனின் தாயார் தெரிவித்தார். இப்படியான பின்னணியில் முதலாம் வருட மாணவர் சுதர்ஷனை தாக்கியது மிகத்திட்டமிட்டே என்பதும் இந்த கைதும் அவ்வாறான ஒரு திட்டத்தின் பின்னால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பதையும் விளங்கிக்கொள்ள அவ்வளவு நேரம் தேவை இல்லை.
எனவே யாரோ ஒரு குழுவின் அல்லது நபரின் தனிப்பட்ட தேவைக்காக அல்லது பல்கலைக்கழகத்தின் ஒற்றுமையான நடவடிக்கைகளை திசைதிருப்பும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலும் கைதும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது அவதானிகளின் பார்வையாக உள்ளது.
இதனிடையே இந்த கைது விவகாரம் குறித்து கைது செய்யப்பட்ட மாணவனின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவை நாட தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் மாணவனின் தந்தையான எஸ்.யோகநாதன் தெரிவிக்கையில், எனது மூத்த மகன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் துறையில் 3ஆம் வருட மாணவனாக கற்று வருகின்றார்.
தனக்கு லீவு எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்னடம்பனில் உள்ள எமது வீட்டில் நின்றுவிட்டு, பரீட்சை இருப்பதாகத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகம் சென்றிருந்தார். அங்கு பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பொழுது கடந்த 05.08.2014 அன்று எனது மகனை சிலர் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தகவலறிய நேற்று கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் சென்றோம். அவர்கள் தமக்கு தகவல் கிடைத்துள்ளது, எனது மகனை பலாங்கொட பொலிஸார் கைது செய்து கொழும்பில் தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனையடுத்து இன்று வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம்.
தற்போது எனது மகனைத் தேடி கொழும்பு செல்கின்றோம் எனத் தெரிவித்தார். இதனிடையே மேற்படி மாணவனை கைது செய்யும் போது நேரில் கண்ட சக மாணவன் ஒருவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். “கடந்த 5 ஆம் திகதி அன்று பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நாங்கள் நின்றிருந்தோம்.
அப்போது எமது பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இந்திக்கா என்ற விரிவுரையாளர், நிரோசனின் பரீட்சை இலக்கத்தை கூறி அவரை வருமாறு அழைத்து, அங்கிருந்து கூட்டிச் சென்றார். இந்த நிலையில் பல மணி நேரங்களுக்கு பின் நிரோஜனை வளாகம் முழுவதும் தேடிய போதும் காணவில்லை.
பின்னர் பல்கலைக்கழக நிர்வாகம் ஊடாக நிரோஜனை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று அறிந்து கொண்டோம்” என்றார். இந் நிலையில் மாணவன் சந்திர குமார் சுதர்ஷன் மீதான தாக்குதலும் மாணவன் யோகநாதன் நிரோஜனின் கைதும் மிகத்திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என நம்புவதற்கு போதுமான காரணிகள் உள்ளன.
அத்துடன் இந்த விடயங்கள் யுத்த வடுவிலிருந்து மீண்ட புனர்வாழ்வு பெற்று சாதாரண வாழ்வை வாழும் அனைவரையும் கிலிகொள்ளச் செய்யும் விடயமாகும். அத்துடன் அவர்களது சாதாரண சிவிலியன் வாழ்வைக் கொச்சைப்படுத்தும் விடயமும் கூட.
எனவே சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் நீடிக்கும் பிரச்சினைகளை தீர்க்காது அதனை திசை திருப்ப கல்வி பயிலும் அப்பாவி சிறுபான்மையின மாணவர்களை பலிக்கடாவாக்க எந்த ஒரு தரப்பும் முயலக்கூடாது. அப்படி ஒரு துரதிஷ்டமான சம்பவம் இடம்பெற்றால் நாடு இன்னும் பல வருடங்களுக்கு பின்னோக்கி நகர்த்தப்பட்டு விடும் என்பது மட்டும் நிதர்சனம்.