தென்னாபிரிக்க விடுதலை அமைப்பு போன்று நாம் செயற்படவேண்டும் – மாவை!
அமைதியாகவும் செயற்பட்டதுபோல் நாம் செயற்பட வேண்டும். அப்பொழுதுதான் எமது நோக்கத்தை அடைய முடியும் என தமிழரசுக் கட்சியின் பொது செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை திருகோணமலை நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் முன்னாள் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுக்கான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்வாரத்துக்குள் கூட்டமைப்பு இந்தியாவுக்கு செல்லவிருப்பதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளது.அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சமபோஷா கூறிய கருத்தொன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
தென்னாபிரிக்காவிலுள்ள பல்வேறு குழுக்களுடன் கூட்டாகவும் தனியாகவும் கலந்துபேசி ஆக்கபூர்வமான தீர்மானங்களை அமைதியான முறையில் எடுத்து போராடியதன் காரணமாகவே தென்னாபிரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. எமது போராட்டம் வெற்றி பெற முடிந்தது என சமபோஷா எம்மிடம் குறிப்பிட்டார். அதுபோலவே நாமும் செயற்பட வேண்டும்.
எமது நோக்கத்துக்காக உழைக்க வேண்டும். அடுத்த மாதம் வன்னியில் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மிகச் சிறந்த முறையில் நடைபெற எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். மாநாட்டுக்கு முன் கிளைகள் அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாம் நமது நோக்கத்தை அடைய வேண்டுமானால் அறிக்கைகளை விட்டோ ஆரவாரங்களை செய்தோ நடந்துகொள்ளக்கூடாது. அவ்வாறு செய்கின்ற போது அது எமக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. எமது நோக்கை அடைய எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை நகர சபைத் தலைவர் க.செல்வராஜா, உப்புவெளி பிரதேச சபை தவிசாளர் விஜேந்திரன் மற்றும் மாகாண சபை, நகர சபை பிரதேச சபை உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.