ஏட்டிக்குப்போட்டியாக தீவிரமடையும் நகர்வுகள்
விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு ஜெனிவாவில் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதேபோன்று இலங்கையிலும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளும் வேகமடைய ஆரம்பித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணை குழுவுக்கு ஆலோசனை வழங்கவும்
மூன்று நிபுணர்கள் செயற்பட்டுவருகின்ற நிலையில் இலங்கையில் உள்ளக செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ள காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக மூன்று சர்வதேச நிபுணர்களும் தற்போது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
அது மட்டுமல்ல, உள்ளக விசாரணைக் குழுவுக்கு மேலும் மூன்று நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டத்திலும் ஏட்டிக்குப் போட்டியாக காய்நகர்த்தல்களும் நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாடுகள் தீவிரமடைய ஆரம்பித்துள்ள சூழலில் அதனை முறியடிக்கும் அல்லது வலுவற்றதாக்கும் நோக்கில் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாகிஸ்தான் விஜயம் ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூஷி அகாஷியின் இலங்கை விஜயம், செப்டெம்பரில் இடம்பெறப்போகின்ற சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம் என நாட்டின் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாடுகள் தொடர்பில் தனது பதவியிலிருந்து சில தினங்களில் ஓய்வுபெறவுள்ள நவநீதம் பிள்ளை அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது, இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை. இலங்கையிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ விசா கோரி எவரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு கடும் விசனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனிப்பட்ட ரீதியில் பக்கச்சார்பாக நடந்துகொண்டுவருகின்றார்.
அவர் ஐ.நா. விசாரணை செயற்பாட்டில் அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சிப்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது என்று கடும் விமர்சனங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் யுத்தம் முடிவடைந்த மறுவாரமே உள்நாட்டு செயற்பாடுகளின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிக்காமல் அப்போதே சர்வதேச விசாரணையை கோரியவர் என்றும் அவரின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாகவும் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் முக்கிய விடயம் ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புதிதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக பதவியேற்கவுள்ள செயித் அல் ஹுசைன் பக்கச்சார்பின்றியும் விதிமுறைகளுக்கு அமைவாகவும் சமத்தன்மையுடனும் இறைமையை மதித்தும் செயற்படுவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இலங்கை அரச தரப்பு நீண்ட நாட்களாகவே முரண்பட்டுவந்தது. நவநீதம் பிள்ளையை விமர்சித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையிலேயே அரசாங்க பிரதிநிதிகள் உரையாற்றினர்.
எனினும் அனைத்து விடயங்களுக்கு மத்தியிலும் நவநீதம்பிள்ளை கடந்த 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இருந்தபோதிலும் அவர் மீதான இலங்கையின் விமர்சனங்கள் நீடித்தே வந்தன. இம்மாதத்தின் இறுதிப் பகுதியில் நவநீதம் பிள்ளை ஓய்வுபெற்று செல்லவுள்ளதுடன் புதிய ஆணையாளர் பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுவதாக அண்மைக்காலங்களில் தகவல்கள் வெளிவந்தன. எனினும் நவநீதம் பிள்ளையின் தற்போதைய அறிவிப்பின் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலக விசாரணையும் வேகமாக நடைபெற்றுவருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அலுவலகத்தை அமைத்து விசாரணை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணை ஆணைக்குழுவானது இதுவரை எந்தவொரு நாட்டுக்கும் செல்வதற்கான விசா அனுமதியை கோரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை வருவதற்கும் ஐ.நா. விசாரணையாளர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. ''இலங்கை வருவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை குழுவினர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு இலங்கை வர விண்ணப்பிக்கமாட்டார்கள் என்று கருதுகின்றோம்.
காரணம் விசாரணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கூறிவிட்டதால் அவர்கள் இலங்கை வர விண்ணப்பிக்கமாட்டார்கள்'' என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவினர் தாங்கள் இலங்கை செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பித்தோம் என்ற பதிவை மேற்கொள்ளவாவது விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்வுகூறப்படுகின்றது.
எது எவ்வாறெனினும் இதுவரை எந்த அனுமதியும் கோரப்படவில்லை. இதனை நவநீதம் பிள்ளையின் அண்மைய கூற்றும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகிய மூன்று விசேட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்தவாரம் லண்டனில் சந்தித்து விசாரணை செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியிருந்தனர். அதாவது விசாரணை செயற்பாடுகளுக்கு சாட்சியங்களை பெறல் சாட்சிகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விசாரணை அறிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 27 ஆவது அமர்வில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. செப்டெம்பர் மாத அமர்வுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஆகும்போது விசாரணை அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்தவரை ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவுக்கு எக்காரணம் கொண்டும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்பதனை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மற்றும் விசாரணைக் குழு என்பனவற்றை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசார ணைக் குழுவினரின் பரந்துபட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பல நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் உள்நாட்டு ரீதியில் பல காய்நகர்த்தல்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணை விரிவுபடுத்தப்பட்டதுடன் அதற்கு ஆலோசனை வழங்கவென மூன்று சர்வதேச நிபுணர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவிற்கு சேர் டெஸ்மன் டி சில்வா தலைமை தாங்குகின்றார். இவருடன் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் டேவிட் க்ரேய்ன் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இது இவ்வாறு இருக்க சர்வதேச நிபுணர் குழுவின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஆறாக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலிருந்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஜப்பான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நிபுணர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த புதிய மூன்று நிபுணர்கள் தொடர்பான அறிவிப்பு வர்த்தமானியில் வெளிவர ஏற்பாடாகியுள்ளது. அந்தவகையில் தற்போது காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன் தலைவர் டெஸ்மன்ட் டி. சில்வாவுடன் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஷ்வல் பரணகம பேச்சுக்களை நடத்தியுள்ளார். தொடர்ந்தும் சில சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன. காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர் குழுவினர் என்ன செய்வார்கள் என்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மெக்ஷ்வல் பரணகம, சர்வதேச நிபுணர் குழுவினர் எமக்கு பலவந்தமாக ஆலோசனைகளை வழங்க முடியாது.
எமக்கு தேவையாயின் நாங்கள் ஆலோசனைகளை பெறுவோம். இது சுயாதீன ஆணைக்குழுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது எந்தவொரு நிலையிலும் சர்வதேச நிபுணர் குழுவினர் விசாரணை செயற்பாடுகளில் பங்கெடுக்க முடியாது என்பதே ஆணைக்குழுவின் கருத்தாகவுள்ளது. அது மட்டுமன்றி புதிய ஆணைக்கு அமைய விசாரணை அமர்வுகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் எவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டாலும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்படக்கூடாது என்பதில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக இதற்கு முன்னரும் இவ்வாறு பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகள் 2010 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றபோது அதில் சாட்சியமளித்த அதிகமான முக்கியஸ்தர்கள் ஆணைக்குழுக்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மை தொடர்பாக பிரஸ்தாபித்திருந்தனர்.
எனவே ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் மத்தியில் நம்பிக்கைகள் ஏற்படும் வகையில் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெறவேண்டியது அவசியமாகும். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்னும் பல விவகாரங்களுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். கடந்தகால யுத்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை கள் காலம்தாழ்த்தப்படக்கூடியவையல்ல. காணாமல்போனோர் தொடர்பாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்கவேண்டுமாயின் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவேண்டும். வெறுமனே ஆணைக்குழுக்களை நியமித்து காலத்தை கடத்துவதற்கு எந்தத் தரப்பும் முயற்சிக்கக்கூடாது. அதேபோன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் உரிய முறையில் அரசியல் இராஜதந்திரங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முன்வரவேண்டும்.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக் கப்படவேண்டும் என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா இவ்வாறு தெரிவிக்கின்றார்.
அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு உள்ளக செயற்பாட்டை முன்னெடுத்தால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப் படவுள்ள விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையை வலுவிழக்கச் செய்ய முடியும் என்று குறிப்பிடுகின்றார்.
அத்துடன் தீர்வுத்திட்டத்துக்காக அதிகாரப் பகிர்வுக்கும் செல்லவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இராஜதந்திர நகர்வுகளும் காய்நகர்த்தல்க ளும் எவ்வாறு அமைந்தாலும் கடந்த காலயுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதிகிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் என் பதனை எவரும் மறந்துவிடக்கூடாது.
எனவே அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டியது அவசியமாகும். சர்வ தேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு காய்நகர்த்தல்களை மேற்கொள்ளலாம். ஆனால் மறுபுறம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அவர்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் அவசியமாகும்.
-ரொபட் அன்டனி–