மண்டைதீவில் பிரதேச வைத்தியசாலைக் கட்டிடம் முதல்வரால் திறந்து வைப்பு
அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலைக் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், வைத்தியசாலை என்றதும் “தினக்குரல்” பத்திரிகையில் சிலகாலத்திற்கு முன்னர் பிரசுரமான எனது “யதார்த்தச் சிறுகதைகளில்” ஒன்று நினைவுக்கு வருகின்றது.
எனது அனுபவத்தில் நான் கண்ட, அறிந்து கொண்ட உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்தே அந்தக் கதைகளை உருவாக்கினேன். அதில் ஒரு கதை. தெற்கு வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றிய எட்வின் என்பவரின் கதை.எட்வின் ஒரு வைத்தியசாலை பரிசாரகர்.
எங்கெங்கு பயன்படுத்தக் கூடிய கட்டில்கள் விடுவிக்கப்பட்டு நோயாளிகள் பாவனைக்காக இருக்கின்றன என்பதை வைத்தியர்களுக்கு எடுத்துக் கூறுவது அவரின் கடமைகளில் ஒன்று.
அவரின் சட்டைப்பை நிறைந்தால் கட்டாயம் ஒரு கட்டில் கிடைக்கும். இல்லையென்றால் நோயாளி நிலத்தில்தான் படுக்க வேண்டும்.
நிலத்தில் பேப்பர் விரித்துக் கொடுத்து விடுவார். அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில்! வைத்தியசாலை முழுவதற்கும், ஏன் நோயாளிகளுக்குந் தெரியும் எட்வின் பற்றி. ஒரு நாள் எட்வின் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சில காலத்தின் பின் அவர் மகள் நோயுற்றாள். தான் முன்னர் வேலை செய்த வைத்தியசாலைக்கு மகளை அழைத்து வருகின்றார் எட்வின்.
கட்டில் கிடைக்குமா என்று வைத்தியரிடம் கேட்க புதிய பரிசாரகரின் பெயர் சொல்லி அவரிடம் அனுப்புகின்றார். எட்வின் பரிசாரகரிடம் மகளுக்குக் கட்டில் தருமாறு கேட்கின்றார். “கட்டில் இல்லை. நிலத்தில்தான் படுக்க வேண்டும்” என்கிறார் புதிய பரிசாரகர். எட்வின் தன்னை அடையாளப் படுத்திக் கட்டில் கேட்கின்றார். “ஓ! நீங்கள்தானா எட்வின்? கேள்விப்பட்டுள்ளேன் உங்களைப் பற்றி! ஆனால் கட்டில் இல்லை” என்றார்.
அப்பொழுது எட்வின் காலத்தில் வேலை செய்த இன்னொரு சிப்பந்தி அங்கு வருகின்றார். தனது குறையை அவருக்கு எடுத்துரைக்கின்றார் எட்வின். “பிரச்சினை இல்லை! இத்தனை தொகைப் பணத்தை அவனின் கையில் வைத்தால் கட்டில் கிடைக்கும் என்றார் அவர்.
“அடப்பாவியே! இவ்வளவு தொகை கேட்கிறானா?” என்று எட்வின் வாயைப் பிளக்க, உங்கள் காலத்தில் நீங்கள் வாங்கியதுக்கு வட்டி போட்டு அவர் இன்று வாங்குகின்றார். கொடுப்பதானால் கிடைக்கும் கட்டில்” என்று கூற வேறு வழியின்றி குறித்த தொகைப் பணத்தை கொடுத்து மகளுக்கு ஒரு கட்டில் பெறுகின்றார்.
வைத்தியசாலைகளில் களையப்படவேண்டிய மிக முக்கியமான ஒரு பழக்கம் இந்தக் கையில் பணம் வைத்து அதை வாங்கிக் கொள்ளும் பழக்கம். பல வசதியற்ற வறுமையில் வாடும் நோயாளர்களை வைத்தியசாலை அலுவலர்கள் பாடாய்ப்படுத்துவதை நான் பார்த்துள்ளேன். இப்பேர்ப்பட்ட நிலை எங்கள் வைத்தியசாலைக்குள் அடியெடுத்து வைக்காது பார்த்துக் கொள்ளுங்கள்.
வைத்தியசாலைச் சூழலை இரம்மியமாக வைத்திருக்க ஆவன செய்வீர்கள் என்று நம்புகின்றேன். மரங்கள் நாட்டுங்கள், மலர்ச் செடிகள் வளருங்கள். நோயாளர் மனதைக் குளிர வையுங்கள். அதுவும் ஒருவித சிகிச்சைதான்! நாங்கள் யாவரும் வடமாகாணசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்கள் மக்களின் குறைபாடுகளை அறிந்து அவர்களுக்கு ஆவன செய்வதற்கே! பலர் இப்பொழுதே அடுத்த தேர்தல் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.
தேர்தல் என்பது ஒரு உடன்பாடு போன்றது. “மக்களின் பிரச்சினைகளை நான் தீர்க்கின்றேன். எனக்கு வாக்குத் தாருங்கள்” என்று கேட்கின்றோம். தேர்தலில் வென்றவுடன் எமது உடன்பாட்டை நடைமுறைப்படுத்தாமல் அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிடுகின்றோம்.
நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல தடைகள், தடுப்புக்கள் இருந்தாலும் தவறாது எம்மால் முடிந்த வரையில் எமது கடமைகளை நாங்கள் சரிவர இயற்றுவோமாக. அந்த வழியில் இன்று இந்த மண்டைதீவு பிரதேச வைத்தியசாலைத் திறப்பானது எமது பொறுப்பேற்புப் பணிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாகக் கொள்ளலாம் என்று நம்புகின்றேன்.
மண்டைதீவு மக்கள் தங்கள் வைத்தியசாலையில் இருந்து முழுமையான பலன்களைப் பெற நாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்றார். மண்டைதீவு வைத்தியசாலையில் முதல் பிறந்த குழந்தைக்கு மதிப்பளிப்பு மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட 1950களில், இந்த வைத்தியசாலையில் பிறந்த முதல் குழந்தையும் தற்போதைய நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபருமான எஸ்.சேதுராஜா மதிப்பளிக்கப்பட்டதுடன், மண்டைதீவும் அதன் வரலாற்று தடங்கள் பற்றியும் நினைவு கொண்டுள்ளனர்.
இதே வேளை இதே வைத்தியசாலையில் பிறந்து அங்கேயே பெயர் சூட்டப்பட்டவரும் தற்போதைய திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரும் வலம்புரி நாளேட்டின் பிரதம ஆசிரியருமான விஜயசுந்தரமும் மதிப்பளிக்கப்பட்டதுடன் இந்த வைபவத்தில் விஜயசுந்தரம் மிகவும் காத்திரமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார்.
அதில் முதலாவது இந்த மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய சேவையை பெறுகின்றவர்கள் மண்கும்பான் அல்லைப்பிட்டி மண்டைதீவைச் சேர்ந்தவர்களே. அதனால் மிகவும் சீரற்று கிடக்கும் அல்லைப்பிட்டி, மண்டைதீவு வீதியை புனரமைத்து மக்களின் போக்குவரத்தை சிரமமின்றி இலகுபடுத்த வேண்டும்.
அடுத்த கோரிக்கை மண்டைதீவிலிருந்து யாழ்.நகரம் மிகவும் அருகில் கண்ணால் தெரியும் தூரத்தில் உள்ளது.
ஆனால் மண்டைதீவு மக்கள் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஊர்காவற்றுறைக்கு செல்ல வேண்டும். காரணம் மண்டைதீவு தொலைவிலுள்ள ஊர்காவற்றுறை பொலிஸ்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆகவே மண்டைதீவு மக்களின் நலன்கருதி மண்டைதீவு, யாழ்.நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பொலிஸ்நிர்வாக அலகின் கீழ் இணைத்து உதவவேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.