தமிழர்களுக்கான புதிய தலைமையை வடக்கின் முதல்வர் உருவாக்க வேண்டும்
இருக்கும் உள்ளூராட்சி அமைப்புகளின் நிலைமைக்கு வந்துவிட்டதோ ! என்று நினைக்கும் அளவில் நிலைமை உள்ளது.
வடக்கின் மாகாண சபைக்கு மத்திய அரசு வழங்குகின்ற அதிகாரங்கள் போதாது என்ற உண்மைகளின் மத்தியில் வடக்கு மாகாண அரசின் செயற்பாடுகள் மந்த நிலைமையைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாததே.
எனினும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பயன்படுத்துவதிலும் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
எதுவாயினும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற போது, முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக தமிழ் மக்கள் கருதி வாக்களிக்கவில்லை.
அவரை தனியொரு தமிழ்த் தலைவராகக் கருதியே தமிழ் மக்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர். இதன் ஊடாக புதிய - நேர்மையான தமிழ்த் தலைமையை தமிழ் மக்கள் விரும்பி அதற்கான ஆணையையும் தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர்.
இருந்தும் தமிழ்மக்கள் தனக்கு அளித்த வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்றுத் தந்ததாக வடக்கின் முதல்வர் நினைத்திருப்பாராயின் அதனை மாற்றிக் கொள்வது அவசியமானதாகும்.
வடக்கின் முதல்வர், தமிழ் மக்களின் தனித்துவமான தலைவராகக் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கட்சியின் கட்டுப்பாடுகள், இடையூறுகள், இடைஞ்சல்கள் என்பவற்றைத் தூக்கியயறிந்துவிட்டு தமிழ் மக்களுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்ற வேண்டும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வடக்கின் முதல்வரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பில் முக்கியமானது, ஒரு பலமான அரசியல் தலைமையை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் உருவாக்க வேண்டும் என்பதாகும்.
உண்மையைக் கூறப்போனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையில்; அதில் இருக்கக் கூடிய சிலரின் நடவடிக்கைகளில் தமிழ் மக்களுக்கு அறவே நம்பிக்கையும் பிடிப்பும் இல்லை.
இருந்தும் விடுதலைப்புலிகள் இவர்களின் தலையில் தொட்டு ஞானஸ்தானம் கொடுத்ததன் காரணமாகவும் தமிழர்களுக்கு இன்னொரு பலமான அரசியல் தலைமை இல்லையென்ற நிலைமையாலும் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இந்த வாக்களிப்பை உண்மையான ஆதரவாக நினைத்து, கூட்டமைப்பின் தலைமையை புனருத்தாரணம் செய்யாமல் விட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் கணிசமாகக் குறைவடையும்.
எனவே தமிழ் மக்கள்; ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புத்திஜீவிகள், தமிழ் பற்றாளர்கள் மற்றும் மக்களிற்கு சேவையாற்றும் மன நிலை கொண்டவர்களையும் உள்ளடக்கிய புதிய அரசியல் தலைமையை வேண்டி நிற்கின்றனர்.
இதனைச் செய்யக் கூடிய அதிகாரம் வடக்கின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கே உண்டு. அந்த அதிகாரத்தை தமிழ் மக்கள் அவருக்கு அளித்த வாக்குகள் மூலம் வழங்கியுள்ளனர்.
எனவே கட்சி, அதன் கட்டமைப்பு என்ற எந்த விதிமுறைகளுக்கும் உட்படாமல் - கட்சிக் காரர்களைச் சமாளித்துப் போதல் என்ற அணுகுமுறையைக் கைவிட்டு, மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று புதியதொரு தமிழ்த் தலைமையை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உருவாக்க வேண்டும்.
இது காலத்தின் கட்டாய தேவையாகும்.