வடமராட்சி கிழக்கிலும் அச்சுவேலியிலும் நில ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு
எண்ணூறு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களத்தினரின் முயற்சி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ். அச்சுவேலிப் பகுதியில் பொலிஸாரின் துணையுடன் நிலம் அளக்கும் நடவடிக்கைக்காக சென்ற நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு மக்கள் காட்டிய எதிர்ப்பினை அடுத்து தமது நடவடிக்கையினைக் கைவிட்டுவிட்டு வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் எண்ணூறு ஏக்கர் நிலப் பரப்பினை அபகரிக்கும் நடவடிக்கைக்காக நிலஅளவைத் திணைக்களத்தினர் மேற்கொள்ள முற்பட்டிருக்கின்றனர்.
அங்கும் திரண்ட மக்கள் நில அளவைத் திணைக்களத்தினருக்கு தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டதினை அடுத்து அவர்கள் பின்வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
இதன் போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அங்கு சென்றிருந்தனர்.
இராணுவத் தேவை: காணி அளவீடு! மக்கள் எதிர்ப்பு!- நிலஅளவையாளர்கள் திரும்பிச் சென்றனர்- 2வது தடவை முயற்சியும் ஏமாற்றம் அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அங்கு வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன் போது, இந்தக் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலையில், இந்த காணிகளை அளவீடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.
அதற்கு பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவினை கையளிக்கும்படி கோரியுள்ளார். நீதிமன்ற வழக்கு இலக்கம் மட்டுமே உள்ளது, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லையென பொதுமக்கள் பதில் கூறினார்கள். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காணி அளவீடு செய்வதினைத் தடை செய்ய முடியாது.
நாங்கள் காணி அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார். எங்களைக் கைது செய்த பின்னரே நீங்கள் காணிகளை அளவீடு செய்ய முடியும் என பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், நிலஅளவையாளர்கள் வந்த வாகனத்தினை சுற்றி அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இன்றைய தினமும் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படாமல் நில அளவையாளர்கள் திரும்பி சென்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,
வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ், சாவகச்சேர் நகரசபை உறுப்பினர் கிஷோர் ஆகியோரும் இப்போராட்டத்தில் உரிமையாளர்களுடன் கலந்துகொண்டனர்.
மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பிரிவு 2பிரசுரத்தில் பொது தேவைக்காக மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதே பிரசுரத் தில் கீழ் பகுதியில் 5வது காலாட்படையின் தலமை காரியாலயம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கடந்த 6ம் மாதம் 5ம் திகதி மேற்கொள்ளப்பட்ட 1ம் கட்ட முயற்சியின் பின்னர், மக்கள் குறித்த காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றில் 9குடும்பங்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நீதிமன்றின் வழக்கையும் மதிக்காமல் மீண்டும் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆகியோர் இன்றைய தினம் குறித்த பகுதியில் வந்து மக்களுடன் இணைந்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்களையும் மீறி நில அளவையாளர்கள் குறித்த காணிகளை அளவீடு செய்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் காலை 8.45 தொடக்கம் நண்பகல் 12மணிவரையில் மக்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தினர்.
இந்நிலையில் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதுடன், தமது அளவீட்டு நடவடிக்கைகளை குழப்பினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நில அளவையாளர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் மக்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றிணையும் இன்றைய தினம் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மக்களுக்குச் சொந்தமான சுமார் 800 ஏக்கர் காணியை கடற்படை தேவைகளுக்காக சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவில் இதே போன்று கடற்படைத் தேவைக்காக காணி இன்றைய தினம் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அங்கே இன்றைய தினம் எவ்விதமான எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை நாளைய தினம் தென்மராட்சி பிரதேச செயலர் எல்லைக் குட்பட்ட மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் உள்ள மக்களுடைய காணிகள் படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அள வீட்டு நடவடிக்கைள் நாளைய தினம் நடக்கவுள்ளது. அதற்கும் தாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.