Breaking News

''மலேசிய விமானத்தில் பயணித்தால், ஒரு வழி பயணச்சீட்டு போதும்'' வேடிக்கை உண்மையான பரிதாபம்


உக்ரேனுக்கு மேலாக கடந்த வாரம் பயணித்தவேளை
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த நபரொருவர் தான் ஐரோப்பாவுக்கான விடுமுறை சுற்றுலாவிலிருந்து திரும்பப்போவதில்லை என தனது சகோதரருடனான உரையாடலின் போது வேடிக்கையாக கூறியுள்ளார்.

இந்த விமான அனர்த்தத்தில் ஹவார்ட் ஹோர்டர் (68 வயது) என்ற மேற்படி நபரும் அவரது மனைவி சூஸனும் (63 வயது) பயணித்திருந்தனர். பிறிஸ்பேனிலிருந்து விமானத்தில் புறப்படுவதற்கு இரு நாட்களின் முன் ஹவார்ட் தனது சகோதரர் கிளென் ஹோர்ட்டுடன் உரையாடுகையில் மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதாயின் தனக்கு ஒரு வழிப்பயணச் சீட்டு போதும் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த மலேசியன் எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் காணாமல் போனமை தொடர்பாக குறிப்பிடும் வகையில் அந்த விமானத்தில் பயணித்தால் அது திரும்பாமல் போகலாம் அதனால் ஒரு வழி பயணச்சீட்டு வாங்கினால் போதுமானது என அவர் கூறியுள்ளார்.

அவர் வேடிக்கையாகவே அவ்வாறு கூறினார். எனினும் ஐரோப்பிய பயணத்திலிருந்து திரும்புவதற்கான பயணச்சீட்டை வாங்கியிருந்தார். ஆனால் அவர் வேடிக்கையாகக் கூறியது இறுதியில் உண்மையாகி விட்டது என கிளென் தெரிவித்தார்.