Breaking News

வித்துடல்களை தோண்டி வீரம்காட்டப்போகும் இராணுவம்


1987ம் ஆண்டு உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான லெப். கேணல் திலீபனின் சடலம் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் மற்றும் இராணுவம் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான .ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புகின்ற முயற்சிக்கின்றார் என்ற சந்தேககத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்திய போதே திலீபனின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள விடயம் அம்பலமானது என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தொடர் உண்ணாவிரதத்தின் பின்னர் மரணமடைந்த புலிகள் அமைப்பில் லெப்டினன் கேர்ணல் பதவிநிலை வகித்த திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்து போடப்பட்டு முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள தீலிபனின் சடலமானது வெளியில் எடுத்துச் சென்று பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாகவும், முல்லைத்தீவு மாவட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில், திலீபன் உயிரிழந்த தினத்தை அனுஷ்டிக்கும் போது, அவருடைய சடலத்தை பார்ப்பதற்கு அப்பிரதேச மக்களுக்கு சந்தப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

திலீபனின் புதைக்குழி இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் கொள்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் முக்கியமானவர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்திய அமைதி காக்கும் படை, இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன், யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து 1987 ம் ஆண்டு செப்டெம்பர் 26 ம் திகதி உயிர்துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.