Breaking News

விமானம் வெடித்துச் சிதறிய சம்பவத்துக்கு தாமே பொறுப்பென ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்


மலேசிய 'எம்.எச். 17' விமானம் நடுவானில்
வெடித்துச் சிதறி வீழ்ந்த சம்பவத்துக்கு தாமே பொறுப்பென ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்களை தாம் இடைமறித்து கேட்டதாக உக்ரேனிய பாதுகாப்பு சேவைகள் உரிமை கோரியுள்ளது.

ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு ரஷ்ய ஆதரவு கொஸ்ஸக் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த தொலைபேசி உரையாடல் ஒலிநாடா பதிவுகள் "கியவ் போஸ்ட்” ஊடகத்திற்கு உக்ரேனிய பாதுகாப்பு படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மலேசிய போயிங் 777-200 விமானம் டொனெட்ஸ்க் நகரின் வடமேற்கே 50 மைல் தொலைவில் ரஷ்ய எல்லைக்கு அண்மையிலுள்ள சொர்னுகின் கிராமத்துக்கு அருகில் வெடித்து சிதறியுள்ளது.


உக்ரேனிய பாதுகாப்பு படையினரால் கையளிக்கப்பட்ட ஒலி நாடாவொன்றில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரியான ஜகோர் பெஸ்லர் மலேசிய விமானம் வீழ்ந்தமை குறித்து தனது ரஷ்ய இராணுவ புலனாய்வுப் பிரிவில் தனது மேலதிகாரியாகவுள்ள கேணல் வஸிலி ஜெரானினுக்கு தெரிவிக்கின்றார்.

அந்த தொலைபேசி உரையாடல் விமானம் விழுந்து 20 நிமிடங்களின் பின் அந்நாட்டு நேரப்படி மாலை 4.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய இராணுவ புலனாய்வு அதிகாரியான ஜகோர் பெஸ்லர் உக்ரேனிலுள்ள ரஷ்ய ஆதரவு போராளிகளால் சுய பிரகடனம் செய்யப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வருவதாக உக்ரேனிய பாதுகாப்புச் சேவைகள் தெரிவிக்கின்றது.

தொலைபேசி உரையாடல் 

இந்நிலையில் மேற்படி ஒலிநாடாவில் ஜகோர் பெஸ்லர் என நம்பப்படும் குரல் நாம் சிறிது முன் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் அது யெனகியவோக்கு அப்பால் வீழ்ந்துள்ளது என தெரிவிக்கின்றார்.

அதற்கு ரஷ்ய ஆயுதப் படைகளின் கேணல் வஸிலி ஜெரானினுடையது என நம்பப்படும் குரல் விமானிகள் எங்கே என வினவுகின்றார். அதற்கு பதிலளித்த ஜகோர் தாம் தேடுதல் நடத்தவும் விமானத்தை புகைப்படமெடுக்கச் செல்வதாகவும் அங்கு ஒரே புகைமூட்டமாக உள்ளதாகவும் கூறுகின்றார்.

அடுத்த ஒலிநாடா மேற்படி உரையாடல் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளரான மேஜர் என்பவரும் பிறிதொரு கிளர்ச்சியாளரான கிரேக் என்பவரும் தொலைபேசியில் உரையாடுவதை வெளிப்படுத்துகின்றது.

அந்த உரையாடலில் விமானம் பெற்ரோபவ்லொவ்ஸ் கயா சுரங்க பிரதேசத்தில் விழுந்துள்ளதாகவும் விழுந்த விமானம் சிவிலிய பயணிகள் விமானம் எனவும் ஆயுதங்கள் எதுவும் அதில் இல்லையெனவும் சிவிலிய பாவனைப் பொருட்களே அதில் இருப்பதாகவும் பயணிகளில் ஒருவர் தொப்ஸ்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இந்தோனிசிய மாணவர் என்பதை அவரது அடையாள ஆவணங்கள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தொலைபேசி உரையாடலில் கிளர்ச்சியாளர் ஒருவர் பயணிகள் விமானமொன்றே விழுந்துள்ளதாகவும் அதில் பயணித்தவர்களில் பல பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார். அது மலேசிய எயார்லைன்ஸ் விமானம் எனவும் அதற்கு உக்ரேனுக்கு மேலாக என்ன வேலை எனவும் அவர் கூறினார்.

இந்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் ரஷ்ய பாதுகாப்பு சேவையின் தலைவர் வருவன்ரைன் நலிவேசென்கோ கூறுகையில், இந்த குற்றச் செயலை மேற்கொண்ட ரஷ்ய இராணுவத்தை தண்டிப்பதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்தி

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் விமானம் தொடர்பான அதிர்ச்சியான தகவல்கள்

295 பேருடன் இன்று விமானம் வீழ்ந்தது! ஏவுகணை தாக்குதலே காரணமாக இருக்கலாம்