Breaking News

பயிற்சி முகாமை முடித்து வைக்க வந்த தலைவர் அவர்கள் பயிற்சி பெற்ற வரலாறு!


1985 ஆம் ஆண்டு ஆரம்பம் !
உயர்ந்த மலை. பனி தவழும் மேகங்கள்..குருதியைஉறைய வைக்கும் குளிர். வானத்தைப் பார்த்தவாறு உயர்ந்து நிற்கும் மலையில், காலை ஐந்து மணிக்கு ஏறத் தொடங்கினால்,மாலை ஐந்து மணிக்குத்தான் ஏறி முடிக்க முடியும். அதுவரை உயிர் போய் விட்டதோ? என்று கால்கள் இரண்டும் வலிக்கும்.

களைப்பால் உடல் நடு,நடுங்கும். சுற்றி வர அடர்ந்து-நெருங்கி பரந்திருக்கும் காடுகளில் யானைகள்,புலிகள்,கரடிகள்,எப்போது,எந்த நேரத்தில் வந்து தாக்கும் என்று சொல்ல முடியாத திகில்ப் பயணம் அதுவாகவே-அந்த மலையை ஏறிக் கடப்போருக்கு இருக்குமோ? என்ற ஓர் உணர்வை இலவசமாக கொடுக்கும் இடம் அது. மொத்தத்தில் சொல்லப் போனால் அதுதான்-அந்த மலை உச்சியில்தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஐந்தாம் பயிற்சிப் பாசறை, லெப்.கேர்ணல் ராதா தலைமையில் அமைந்திருந்தது.

தளபதி ராதாவின் கை வண்ணத்தில் பூத்த ஓர் நெருஞ்சி மலர்தான் அந்தப் பயிற்சி முகாம். ரோஜா மலர் என்று ஏன் நான் சொல்லாமல் விட்டேன் என்றால் அங்கே பயிற்சி பெற வந்த என்னைப் போன்றவர்களுக்கு அப்போது அது மிகப் பெரிய நெருஞ்சி மரம் போலவே தோன்றியது. ஆனால், பயிற்சியை முடிக்கும்போது, அதுவே மனதுக்கு மிக்க மகிழ்வைத் தந்தது. அன்று அந்த பயிற்சி முகாம் நிறைவு பெறும் நாள்.  ராதா அண்ணர் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனைபோல் ஓடிக்கொண்டிருந்தார். வழக்கமாக அவரின் முகத்தில் இல்லாத பரபரப்பை பார்த்து போராளிகள் ஆச்சரியப் பட்டனர்.

ஆனால், அன்று மாலை புலிகளின் தலைவர்,தளபதிகளான புலேந்திரன்,பொன்னம்மான்,பொட்டம்மான்,அருணா, போன்றவர்கள் புடை சூழ வந்த போதுதான் புரிந்தது ராதாவின் பதற்றத்துக்கு என்ன காரணம் என்று! பயிற்சி முகாமை முடித்து வைக்கப் போகிறவர் தலைவர் என்னும் பூரிப்பில் எல்லோரும் திழைத்தோம்.

பின்னர் இருக்காதா என்ன? ஓர் ஒப்பற்ற தலைவனின் கையால் அந்தப் பாக்கியம் கிடைக்குமென்றால்,ஒவ்வொரு போராளியுடனும் சில நிமிடங்கள் , தலைவர் தனியாக உரையாடப் போகிறார் என்றால்,அதைவிட ஓர் நல்ல செய்தி எமக்கு புலிகள் அமைப்பில் அப்போது இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை! பலாலி முகாமை புலிகள் அடித்துப் பிடித்து விட்டார்கள் என்னும் செய்தியை விட இனிய செய்தி அல்லவா அது புதுப் போராளிகளுக்கு?

ஆனால், பிற் காலத்தில் ஒன்பதாம் பயிற்சி முகாமை பயிற்று வித்தவர்கள் என்பது மட்டுமல்ல,பிரிகேடியர்கள் பால்ராஜ்,சசிகுமார், கப்டன் மில்லர்(கரும்புலி) போன்ற இணையற்ற வேங்கைகள் பயிலப் போகும் இடம் என்பதும் அதுவாக இருக்கும் என்பதை ஐந்தாம் பயிற்சிப் போராளிகள் அன்று அறிந்திருக்கவில்லை. தலைவர் அன்று அந்த மலையில் ஏறிவந்து புதுப் போராளிகளை சந்தித்தபோது கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? எப்படியடாப்பா இந்த மலையில் ஏறி வந்து,சாமான்களை ஏற்றி இறக்கி பயிற்சி பெற்றீர்கள்"? என்பதுதான்! அத்தனை கடின மலை அது.

முரட்டுக் காளை என்று சொல்வதுபோல். வாய்-உயிர் இருந்திருந்தால் அந்த மலையும் அதுபோல்தான் இருந்திருக்கும். தலைவரும் முக்கிய தளபதிகளும் அங்கே சில நாட்கள் அங்கே நின்றார்கள்.. தளபதி ராதா தலைவருக்கே 'அலெர்ட்' சொன்ன மலையும் அதுவே. தலைவர் அங்கே இருந்த நாட்களில் மேடையில் ஆட்டம் பாட்டம் என்று அற்புதமாக கழிந்த நாட்கள் அவை. அது மட்டுமல்ல தளபதிகளுக்கு இடையில் அங்கே சில இராணுவப் பயிற்சிகளும் இடம் பெற்றன. அதில் தலைவர் என்ற பெருமையின்றி தலைவரும் கலந்து கொண்டதுதான் அதன் சிறப்பு!

பார்வையாளர்களாக நாங்கள் இருந்தோம். ஒவ்வொருவருக்கும், ஆறு வெற்று போத்தல்கள் ஐம்பது அடி தூரத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை குறிபார்த்து ரிவால்வரால் ஒவ்வொரு தளபதியும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு உடைக்க வேண்டும்,தலைவரும் அந்த ஆறு பேரில் ஒருவராக கலந்து கொண்டார். மிக சுவாரஷ்யமான நிகழ்வு அது பிற்காலத்தில் பல தளபதிகள் கூட காண முடியாமல் போன நிகழ்வும் அதுவே.

பெரும் பாலானோர் ஐந்து போத்தல்களை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார்கள். தலைவர் ஆறு போத்தல்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடக்கூடியவர். ஏன் ஒன்றைத் தவற விட்டார் என்பதற்கு பலருக்கு அன்று விடை தெரியவில்லை ,ஆனால் என்னால் யூகிக்க முடிந்தது! அப்போது மட்டு-அம்பாறைத் தளபதியாக இருந்த அருணா(இவரே பின்னர் கோட்டை சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டவர்) ஆறு போத்தல்களையும் கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியதை அப்போது மறக்க முடியுமா..என்ன?

தலைவர், அருணாவைக் கட்டித் தழுவி வாழ்த்தியதையும் எப்படி மறக்க முடியும்? அல்லது,தாழ்வு உணர்ச்சி இன்றி, தலைவரும் ஓர் போட்டியாளராக கலந்து கொண்டதை எப்படி மறக்க முடியும்? நினைவில் இருந்து அழியாத நாள் அது!

-மு.வே.யோகேஸ்வரன்-

முன்னைய தொடர்கள்