வாழ்வைப்பறித்தவரின் வரங்கள் - ச.நித்தியானந்தன்
பேச்சுக்கு வருக
அதிகாரம் அழைக்கிறது நாடுநாடாய் திரிந்து பயனில்லையாம் தெரிவுக் குழுவில்தானாம் எலும்புகள் பகிர்ந்தளிக்கப்படுமாம் கொக்கரிக்கிறது வெள்ளரசு கொலை செய்த குற்றவுணர்ச்சி ஏதும் இல்லாமல் அடுத்த கொலைகளுக்காக ஆயத்தமாக நிற்கும் அவர்களுடன் எதைத்தான் பேசுவது என்னவென்று பேசுவது உள்ளெரியும் நெருப்பை ஒளித்து வைத்துவிட்டு வெள்ளைத்தனமாய் எப்படிப் பேசுவது அடித்துவிழுத்திவிட்டோமென்ற அகங்காரம் கொண்டவருடன் பேசுவதும் கால் பிடிப்பதும் ஒன்றுதான் எங்கள் குருதித்துளி ஒவ்வொன்றுக்கும் கணக்குகள் மனங்களிலுண்டு காலம் ஒருநாள் ஆய்வு செய்யும் எழும்படா என்றால் கேட்கிறார்களா இல்லை விழுந்த இடத்திலேயே நிற்கிறது தேர் - புதிய பாகனும் கிடைக்கவில்லை பார்த்தனும் வரவில்லை ஒத்து நிற்பதை உலக வல்லரசுகளிற்கு காட்டினோம் மாகாணசபையில் உள்ளுராட்சி சபைகளில் பெருவாழ்வு கிடைக்கப்பெற்றதாய் பொச்சடித்துப் போகவில்லை தமிழன் ஒத்து நிற்பதை உலக வல்லரசுகளிற்கு காட்டவேண்டிய இழிநிலை எங்களுக்கு வேகாத பருப்பு மாகாண சபை எத்தனை நாளைக்குத்தான் எரியாத அடுப்பை வைத்து இதை ஊதிக் கொண்டிருக்கப் போகிறோம் பாத்தீனியத்தை அழித்தார்கள் பாராட்டுகின்றோம் ஆங்காங்கே கையைத் தூக்கி தூக்கி படத்திற்கு போஸ் கொடுத்து போராட்டம் செய்கிறார்கள் நல்லது செய்ய வேண்டியதுதான் ஏதோ ஏழைப்பிள்ளைகளுக்கு புத்தகம் பேனா சைக்கிள் கொடுக்கிறார்கள் நன்றியுடன் உள்வாங்கிக் கொள்கிறோம் பாத்தீனியத்தை அழித்துவிட்டோம் பாலியல் வக்கிரங்களை அழிப்பது எப்போது வீட்டை மீட்க போராடத்தான் வேண்டும் நாட்டை.....? எப்போது மீட்பது இனமுரண்பாட்டை இடறும் சங்கதிகளைத் தேடென்றால் அவர்கள் இராசையா பார்த்தீபனின் உடலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் என்னதான் பேசுவது...? பிணங்களைத் தோண்டியெடுத்து போரிட மூர்க்கத்துடன் நிற்பவர்களுடன் உரிமை கேட்பது எப்படி விழுந்தது கூட தெரியாமல் மயங்கிக் கிடக்கிறது எங்கள் இனம் போகவேண்டிய பயணம் பாதியிலே கிடக்க இருட்டறையில் குருட்டுப் பூனையாய் நாங்கள் இறந்தவர்களைப் புணர்ந்த காரணத்தால்தானோ என்னவோ அவர்களின் ஈமச்சடங்குகளைச் செய்ய ஏன் ஒரு ஒரு தீபத்தை ஏற்றக்கூட அனுமதிக்க முடியவில்லை பேச்சுக்கு வரச்சொல்கிறார்கள் எப்படிச் செல்வது பிணம் புணர்ந்தவர்களுடன் கை குலுக்குவது எப்படி அழக்கூட தடை போட்டவர்களுடன் என்னவென்று பேசுவது எப்படி அவர்தரும் பானங்களை சுவைப்பது மரக்காலுடன் நடைபிணமாய் ஒரு கூட்டம் பொட்டையும் பூவையும்; போருக்களித்த பெண்கள் தந்தையரை புதைகுழியில் தேடும் குழந்தைகள் சிறைவாசலெங்கும் பிள்ளைகளுக்காய் தவமிருக்கும் தாய்மார் அவலங்களை தந்தவனிடமே மகஜர் கொடுத்து கானல் நீருக்காய் காத்து நிற்கும் கூட்டம் எப்படித்தான் மனம் ஒப்பி உங்களுடன் பேசுவது தந்ததை வாங்கி நக்கிவிட்டு தாள்பணிந்து நிற்க தமிழன் ஒன்றும் தரங்கெட்டுப் போகவில்லையென்று உள்மனசு கத்துகிறது கண்ணீருடன் அழும் குழந்தையை என்னவென்று ஆற்றுப்படுத்தவது...? வயலெல்லாம் வறண்டு போச்சு விரிசல் விழுந்தது நிலங்கள் காற்றில் கூட ஈரம் இல்லை துளி நீருக்காய் வானம் பார்த்து பிளந்து கிடக்கிறது துரவு
நூலிழை நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது
கண்ட இடமெங்கும் கட்டாக்காலி மேய்ச்சல்
தடுப்புவேலிகளும் இல்லை
தடியெடுத்து கலைக்கவும் வீரியம் இல்லை
சுதந்திரம் வேண்டி விலை கொடுத்த இனம்
வாடிக்கிடக்கிறது
தோல் சுற்றிய எலும்பாய்
வதங்கிக் கிடக்கிறது
கொடுத்த விலைக்கு ஆதாரமாய்
உறுதிகள் நகல்கள் ஏதும் இல்லை
எல்லாம் முடிந்தது
உழுது மறைத்துவிட்டனர்
வரலாற்றையே புரட்டிப் போட்டுவிட்டனர்
காக்கை வன்னியனும் எட்டப்பனும்
வீரப்பரம்பரையின் கடைசி மன்னர்களாயினர்
விபீஷணன் முடி சுட்டிக் கொண்டான்
புயலும் மழையும் அடித்த காட்டில்
இன்று புலராத வைகறை
எந்த திக்கிலும் ஒளியைக் காணவில்லை
இருளே மண்டிக்கிடக்கிறது.
மொத்தமும் தொலைத்தவருக்கு மோகமென்ன பாசமென்ன
மணிமுடியைக் காணவில்லை
மண்டைக்கு ஏனிந்த ஒப்பனை
முகமிழந்தவர்களுக்கு ஏன் இந்த முகப்பூச்சு
வாழ்வைப் பறித்தவரே வரங்கள் தருகிறோம் வாருங்கள் என்கிறார்கள்
இணங்கிப் போவதா இறந்து போவதா
மனதில் பட்டிமன்றம்
வேண்டாம்
முப்பத்து முக்கோடி தேவர்களே
பரமலோகத்தின் பரம பிதாவே
இங்கே நீக்கமற நிறைந்திருக்கும் புத்தர் பிரானே
யாராவது
எங்கள் கையிலிருந்த வாழ்வை
எமக்குப் பெற்றுத் தாருங்கள்
காலாற நடந்த வயிறார உண்ட
ஊர்கள் எமக்கு வேண்டும்
யாரின் வாசலுக்கும் சென்று யாசிக்காத திமிரை
மீட்டுத்தாருங்கள்
சுதந்திர தேவியை தொழுவதன்றி
வேறொன்றறியேன் பராபரமே
ச. நித்தியானந்தன்