அந்தரித்த அகதிகளை அதே அரசின் கையில் கொடுக்கும் அவுஸ்திரேலியா (இரண்டாம் இணைப்பு)
கடற்பரப்பை அடைந்ததாகக் கூறப்படும் இரு படகுகளில் ஒரு படகு பற்றி எதுவும் தெரியாத நிலையில், மற்றைய படகு பற்றி இலங்கையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எவ்வாறு ஒப்படைக்கப்படுவார்கள் என்பது பற்றியும் முரண்பாடான கருத்துக்கள் வெளியானதாக ‘த அவுஸ்திரேலியன்’ இணையத்தளம் அறிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
புகலிடக் கோரிக்கையாளர்களின் கதி என்ன என்பது பற்றி இதுவரை பேணப்பட்டு வந்த இரகசியத்தைத் தகர்த்தெறிந்து, இவர்களிற்கு என்ன நடைபெறுகின்றதென்ற உண்மையை அவுஸ்திரேலிய மக்களிற்குத் தெரியப்படுத்தி, இவர்கள் யாரிடமிருந்து வந்தார்களோ அவர்கள் கைகளிலேயே மீண்டும் இம்சைப்பட விடாது பாதுகாக்குமாறு தென் துருவ சம்மேளனம் அவுஸ்திரேலிய அரசையும் மாண்புமிகு அமைச்சர் ஸ்கோட் மொறிசன் அவர்களையும் கேட்டு நிற்கிறது. என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னைய செய்தி
கடற்படையின் உயரதிகாரியொருவர் கருத்து வெளியிட்ட சமயம், ஜூன் நடுப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறு படகில் ஏற்றப்பட்டதாகவும், அவர்கள் நடுக்கடலில் இலங்கைக்கு சொந்தமான கப்பலுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
கொக்கோஸ் தீவிற்கு அருகிலும், கிறிஸ்மஸ் தீவிற்கு அப்பாலும் இரு படகுகள் தத்தளித்ததாகத் தெரிகிறதென அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கொக்கோஸ் தீவிற்கு அருகிலிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பதாகவும், அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை நோக்கிச் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் பல நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தையின் பின்னர், இலங்கையில் இருந்து கப்பலொன்று புறப்பட்டதாக அவர் கூறினார். ‘புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்தக் கடற்கலத்தில் இருந்து மாற்றப்படுவார்கள் என்பது எமக்குத் தெரியாது.
எனினும், கடல் கொந்தளிப்பாக இருக்கின்ற பின்னணியில் அவர்களை மாற்றுவது மிகவும் சிரமமான காரியம். தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காற்று ஆரம்பமாகியிருக்கிறது. இந்த வேலை கஷ்டமானதாக இருக்கப் போகிறது,’ என்றார், அவர். ஆனால், கடற்படைக்கு சொந்தமான படகொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியான செய்தியை அதன்; உத்தியோகபூர்வ பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய நிராகரித்தார். புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இலங்கையின் பொறுப்பில் ஒப்படைப்பது நடுக்கடலில் நிகழ வேண்டுமா என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.
ஆனால், புகலிடக் கோரிக்கையாளர்களைக் கையளிக்கும் நிகழ்வொன்று இடம்பெறும் என்பதையும், அது இரண்டாவது படகில் இருந்தவர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்பதையும் அவர் ஊர்ஜிதம் செய்தார்.
ஜூன் 13ஆம் திகதி பாண்டிச்சேரியில் இருந்து 153 இலங்கையர்களுடன் புறப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையர்கள் அல்லாமல், இலங்கையில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் படகில் இருந்தவர்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். ‘இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களைத் தாம் மீட்டிருப்பதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு சேவைகள் மூலம் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.’
‘புகலிடக் கோரிக்கையாளர்களை தாம் எல்லைப் பாதுகாப்பு படகில் ஏற்றி வருவதாகவும், அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். (இதில் சம்பந்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின்) எண்ணிக்கை எமக்குத் தெரியாது,’ என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து இலங்கைத் தமிழர்கள் 153 பேரை ஏற்றி வந்ததாக நம்பப்படும் மற்றைய படகு கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தீவில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் இருந்ததாகத் தெரிகிறது. இந்தப் படகில் இருந்தவர்களாக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள், அதில் தண்ணீரும் எரிபொருளும் குறைந்து வருகிறதெனத் தெரிவித்தார்கள்.
இந்தப் படகை அவுஸ்திரேலிய சுங்கத்திற்கு சொந்தமான படகொன்று வழிமறித்ததாக ஊகங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் இருந்தவர்களுக்கு நேர்ந்த கதியை பகிரங்கப்படுத்துமாறு பசுமைக் கட்சியின் தலைவர் கிறிஸ்ரீன் மில்னே கோரிக்கை விடுத்தார்.
சிட்னியில் உரையாற்றிய பசுமைக் கட்சியின் தலைவர், ‘இந்த மக்கள் எங்கே?’ என்று கேள்வி கேட்டார். ’21ஆம் நூற்றாண்டில் மக்கள் வெறுமனே காணாமல் போவதை ஏற்றுக் கொள்ள முடியாது., என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதனை பிரதம மந்திரி சொல்ல வேண்டும்.’ குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் திரும்பவும் கருத்து வெளியிட மறுத்தார்.
அரசாங்கம் சர்வதேச கடப்பாட்டுக்கு அமையவே நடப்பதாகவும், அது கடலில் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டார். இலங்கை கடற்படையின் தரப்பில் வெளியிடப்பட்ட கருத்தானது அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒரு கடற்கலத்தைப் பற்றியேனும் அறிந்திருக்கிறார்கள் என்பதையும் அதனைத் திருப்பி அனுப்புவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பதையும் முதற்தடவையாக கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் நடுக்கடலில் பல தடவைகள் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். எனினும், பருவப்பெயர்ச்சி காற்று பலமாக வீசுவதால் இம்முறை புகலிடக் கோரிக்கையாளர்களை ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றுவது சற்று அபாயகரமான வேலையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கையின் பொறுப்பில் ஒப்படைப்பது அகதிகளுக்கான ஐநா சாசனத்தின் மீதான அவுஸ்திரேலியாவின் கடப்பாட்டை அப்பட்டமாக மீறுவதாகுமெனத் தெரிகிறது. தாம் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டால் தாம் தண்டிக்கப்படுவோம் என்ற நியாயமான அச்சம் நிலவும் பட்சத்தில், குறித்த அகதிகளுக்கு பாதுகாப்புக் கோரும் உரிமையை குறித்த சாசனம் உறுதிப்படுத்துகிறது.
செய்தி ஆசிரியர் படங்கள் நன்றி – த அவுஸ்திரேலியன்
முன்னைய செய்தி
153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 153 இலங்கை தமிழ் அகதிகளுடன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற படகை அவுஸ்திரேலியா இலங்கை கடற்படையினரிடம் கையளித்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்தி எதனையும் வெளியிடவில்லை.
எனினும் 153 தமிழ் அகதிகள் படகும் 50 பேரைக் கொண்ட மற்றும் ஒரு படகும் இன்னும் கடலில் தரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் 50 பேரைக் கொண்ட படகில் உள்ளவர்களை படகில் வைத்து தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம் அடையாளம் காணும் பணிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை மனித உரிமைகள் சட்டத்தரணிகள் கண்டித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதற்கிடையில் இதுவரை தமது கரையில் இருந்து அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்லவில்லை என்று கூறிவந்த இந்திய அதிகாரிகள் தற்போது பாண்டிச்சேரி கரையில் இருந்து மீனவப்படகு ஒன்றில் அகதிகள் புறப்பட்டு சென்றமையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்
அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் இரண்டாவது அகதிப் படகிலுள்ள அகதிகளிடம், விசாரணை என்ற பெயரில் நான்கு கேள்விகள் மாத்திரமே அவஸ்திரேலிய அதிகாரிகளால் எழுப்பப்பட்டுள்ளன. ஏற்கனவே 153 ஈழ அகதிகளுடனான படகு அநாதரவான அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நிற்கும் நிலையில், மேலும் 50 பேரை ஏற்றிய படகு ஒன்றும் அந்த பகுதியில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படகை தொடர்பு கொண்டு அவுஸ்திரேலிய அதிகாரிகள், அவர்களின் பெயர், நாடு, எங்கு செல்கிறார்கள், எதற்காக அவர்களின் நாட்டில் இருந்து வெளியேறினார்கள் ஆகிய நான்கு கேள்விகளை மாத்திரமே கேட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவும், நாடு கடத்தவும் தீர்மானிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் இருந்து செல்லும் அகதிகளாக இருந்தால் அவர்கள், நடுக்கடலில் வைத்தே நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.