யாருக்கும் அரசாங்கம் ஒருபோதும் அடிபணியமாட்டாது
விசாரணைக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. அந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் நாம் அடிபணியமாட்டோம் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழுவினர் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே இங்கு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவிப்பிள்ளை இங்கு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைத்த சர்வதேச விசாரணைக் குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாராளுமன்றத்திலும் இது தொடர்பான பிரேரணையை கொண்டு வந்து சர்வதேச விசாரணைக்குழுவை நிராகரித்துள்ளோம். இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைக் குழுவின் நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஜஹாங்ஹிர் விசாரணைக்குழுவுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காவிட்டால் அது அந்நாட்டுக்கே பாதகம் எனக் கூறியுள்ளார்.
இது எம்மை அச்சுறுத்தலுக்கு உட்படுத்த முனையும் செயலாகும். அவ்வாறு அச்சுறுத்தல் விடுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. அத்தோடு அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணிய போவதும் இல்லை என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
ரமபோஷா இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி ரமபோஷா தலைமையிலான குழுவினர் இங்கு வருகின்றனர். அரசுக்குள் இதற்கெதிரான கருத்துடையவர்கள் இருக்கலாம். ஆனால் எமது தேசிய பிரச்சினையில் தீர்வுக்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் எவ்விதமான தவறும் இல்லை. அக் குழுவினரின் வருகை புதியதொரு பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக அமையும். தேசிய பிரச்சினைக்கு தீர்வு என்ற பிள்ளை பிறக்க வேண்டும்.
அதனை நான் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதில் சிக்கல் நிலையிலேயே காணப்படுகின்றது. இது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாய் இருக்கின்றனர். எனவே ஜனாதிபதி கூட்டமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். இதன்போது உறுதி மொழிகளை வழங்கக்கூடாது.
முன்னைய பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்ய வேண்டும். அவ்வாறானதொரு சூழ் நிலையில் கூட்டமைப்பினர் நம்பிக்கையோடு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரக்கூடும். அதனை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும். பிரிவுகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் விடுதலைப் புலிகளினதும் புலம்பெயர் தமிழர்களினதும் ஈழக் கோரிக்கையை வலியுறுத்தும் கடும்போக்கு பிரிவு ஒன்றுள்ளது. அதேபோன்று மிதவாதப்போக்குடைய ஒரு பிரிவும் உள்ளது.
இன்று புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் துண்டு துண்டாகப் பிரிந்துள்ளன. எதிர்காலத்தில் இப்பிரிவுகளில் ஈழக்கனவும் தவிடு பொடியாகி விடும். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடும் போக்காளர்களும் பின்னடைவைக் காண்பார்கள். பின்னர் இயல்பாகவே பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். யுத்த வெற்றி முப்பது வருட கால பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்தது ஒரு வரலாறாகும். அந்த வரலாறு மறக்கக்கூடியதல்ல. இதனை யுத்த வெற்றி எனக்கூறுவதை விட பயங்கரவாதம் ஒழிப்பு என்றே கூற வேண்டும்.
எனவே, அதனை மறப்பதற்கு காலம் எடுக்கும். அளுத்கம அளுத்கம, பேருவளை சம்பவங்களுக்கு பாதுகாப்பு பிரிவினரதும் அரசினதும் அசமந்தப்போக்கும் செயல்திறனின்மையும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், ஐ.தே.கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதனை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். இவ்வாறான இனவாத குழப்பங்களுக்கு முன்னுதாரணம் காட்டியவர்கள் ஐ.தே.கட்சியினர். ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தில் தான் இனவாதம் உச்சக்கட்டத்தில் தாண் டவமாடியது என்றார்.