தீயில் கருகிப்போன 298 உயிர்களின் கனவு - ஒரு பார்வை
வைத்துள்ளது மற்றுமொரு மலேசிய விமானம். பல கனவுகளோடு பயணித்த மொத்தம் 298 பேரைச் சுமந்து சென்ற இந்த விமானம் உக்ரைனில் வீழ்ந்து நொறுங்கி அத்தனை பேரையும் பலியெடுத்திருக்கிறது.
இதற்கு யார் பொறுப்பு? ஏன் இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்தது? என்ற பல கேள்விகளுக்கு விடைதேட புறப்பட்டாலும் மாண்டவர்களை நாம் மீட்டு விடப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.
நடந்தது என்ன?
இலங்கை நேரப்படி நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்த தகவல்களின் அடிப்படையில், மலேசிய ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 777 ரக எம்.எச்.17 பயணிகள் விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் வெடித்துச் சிதறியதில் 298 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால், அந்த விமானம் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
மோதல் பகுதியில் விமானம்
விமானம் நொறுங்கி விழுந்த இடம், கிழக்கு உக்ரைனில் உள்ள ஷாக்தர்ஸ்க் நகருக்கு அருகில் உள்ளது. அந்த பகுதி, கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் இராணுவத்துக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் பகுதியாகும். மேலும், அப்பகுதி ரஷ்யாவுக்கு அருகே உள்ளது. எனவே, ரஷ்ய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது.
எனவே, அந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் நாட்டு உள்துறை அமைச்சக ஆலோசகர் தெரிவிக்கிறார். தரையிலிருந்து பாய்ந்து சென்று வானிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உதவியால் இவ் விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கொடூரமான `பக்' ஏவுகணை
இந்த ஏவுகணையின் பெயர் ‘பக்’ என குறிப்பிடப்படுகிறது. நேட்டோ படைகளால் மிகவும் கொடூரமானதாக வர்ணிக்கப்படுவதுதான் இந்த பக் ஏவுகணை. இது, 22 ஆயிரம் மீற்றர் உயரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறனுடையது. 1970 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.
இதன்பிறகு பல வகைகளிலும் இந்த ஏவுகணை உருமாற்றப்பட்டது, மதிப்பு கூட்டப்பட்டது. பல நாடுகளுக்கும் இந்த வகை ஏவுகணையை ரஷ்யா ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் பிரிவினைவாதிகளிடமும் இந்த ஏவுகணை உள்ளதாம்.
இந்த ஏவுகணையை பொறுத்தவரை 60 முதல் 90 சதவீதம் இலக்கை சரியாக குறிவைத்து தாக்கும் வல்லமைமிக்கது. ராடார் உதவி தேவை சர்வதேச நாடுகள் பயன்படுத்தும் ஏவுகணைகளில் மிகவும் சக்திவாய்ந்தது இந்த பக் வகை ஏவுகணையாகும்.
ராடார் உதவி கொண்டே இந்த ஏவுகணையால் தாக்க முடியும். இதை ஒரே நபரால் செயற்படுத்திவிட முடியாது. துப்பாக்கியால் சுடுவதை போல காலையில் குறிவைத்து மாலையில் சரியாக சுட்டுவிடவும் முடியாது. இதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலக்கை சரியாக தாக்குவதற்கு சரியான பயிற்சி தேவை. ரோயல் யுனைட்டட் இன்ஸ்ட்டிடியூட்டின் இயக்குநர் ஜோனாதன் இயல் இதுதொடர்பில் கூறுகையில், ``உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் இந்த ஏவுகணை இருந்தாலும், அதை பயன்படுத்த போதிய நிபுணத்துவமோ, சக கருவிகளின் உதவிகளோ அவர்களுக்கு கிடையாது.
ஒரு பொத்தானை அழுத்தினால் முடிந்துபோகும் விடயம் இதுவல்ல. ராடாரை எப்படி பயன்படுத்த வேண்டும், இலக்கை எப்படி நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல திறமைகள் இதற்கு தேவை. சாதாரண கிளர்ச்சியாளர்களால் இதை செய்திருக்க முடியாது.
விமானம் சுடப்பட்டது உண்மையாக இருந்தால் அது ஏதாவது ஒரு நாட்டு படைகளால் மட்டுமே முடியும். கிளர்ச்சியாளர்களால் அதை செய்ய முடியாது'' என்று உறுதியாகத் தெரிவித்தார்.
கிளர்ச்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு ஆதாரத்தை வெளியிட்டது உக்ரைன்
இதனிடையே, இவ்விடயம் தொடர்பாக தொலைபேசி உரையாடல் மூலமான ஆதாரமொன்றை உக்ரைன் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு தொலைபேசி உரையாடலில் புரட்சிப் படையின் தளபதியான இகோர் பெஸ்லர், ரஷ்ய இராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரியொருவரிடம் தங்களது வீரர்கள் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறுகிறார்.
2ஆவது தொலைபேசி உரையாடலில், இரண்டு புரட்சிப் படையினர் பேசிக் கொள்வதாக உள்ளது. ஒருவர் விமானம் விழுந்த இடத்திலிருந்து பேசுகிறார். அந்த நபர் கூறுகையில், ரொக்கெட் தாக்குதல், சம்பவ இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலிருந்து நடந்ததாக கூறுகிறார்.
மேலும் அவர், நான் விமானம் விழுந்த இடத்தில் இருக்கிறேன். விமானம் சிதறிக்கிடக்கிறது. சிலருடைய அடையாள ஆவணங்களைப் பார்த்தேன். அதில் ஒருவர் தாம்ப்சன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தோனேசியர் என்று கூறுகிறார்.
இருப்பினும், இந்த தொலைபேசி உரையாடல்களில் இடம் பெற்றவர்கள் உண்மையிலேயே உக்ரைன் கூறுவதைப்போன்று ரஷ்ய ஆதரவுப் படையினர்தானா என்பதில் சந்தேகம் நிலவிவருகிறது.
உக்ரைன் இராணுவமே காரணம்- கிளர்ச்சியாளர்கள்
இந்நிலையில், உக்ரைன் இராணுவத்தினரே விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு தங்கள் மீது பழி போடுவதாக தங்கள் மீதான குற்றச்சாட்டை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.
உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கிளர்ச்சியாளர் படைகளின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் இதுகுறித்து கூறுகையில், “மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எனவே, உக்ரைன் இராணுவம்தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்பது உறுதி” என்றார்.
`சுட்டுத்தள்ளப்பட்ட தகவலில் உறுதியில்லை'
இந்த பரபரப்புக்கு மத்தியில் மலேசிய விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
மாறாக, விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது உறுதியானால் குற்றவாளிகள் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எனக்கு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக நான் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேசியுள்ளேன்'' என்றார்.
ஆபத்தான பாதையில் பயணம் ஏன்?
ஆசிய கண்டத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாக கருதப்படுகிறது.
உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டுவீழ்த்தியிருந்ததால், இந்த பாதையை சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆபத்து நிறைந்த பாதை என்பதை அறிந்திருந்தும் 298 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் அவ்வழியாக சென்றது ஏன்? என இந்த விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு துறை பிரபல பேராசிரியர்களில் ஒருவரான நார்மன் ஷேங்க்ஸ், ``உக்ரைன் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள கிழக்கு உக்ரைன் பகுதிக்கு மேலே உள்ள வான் எல்லையில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என்றே அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து விமான நிறுவனங்களும் எரிபொருள் மற்றும் நேரத்தை சிக்கனப்படுத்தும் பாதைகளை தேர்ந்தெடுப்பதையே விரும்புகின்றன. கிழக்கு உக்ரைனின் வான் வெளியின் மீது பறப்பது ஆபத்து நிறைந்தது; அவ்வழியே பறக்க வேண்டாம் என்று பிரத்தியேகமாக எச்சரித்திருந்தால் அவ்வழியே பறப்பதை விமானங்கள் தவிர்த்திருக்கும்.
மேலும், நேற்றுமுன்தினம் அப்பகுதி வழியாக பறந்தது இராணுவ விமானம் அல்ல பயணிகள் விமானம் என்பதை அறிந்த பின்னரே அதை ஏவுகணையின் மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளனர்.
30 ஆயிரம் அடிகளுக்கு உட்பட்ட உயரத்தில் அந்த விமானம் பறந்த நிலையில் அதன் உருவ அமைப்பை வைத்தே, அது இராணுவ விமானம் அல்ல; பயணிகள் விமானம் தான் என்பதை கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கக்கூடும்.
பயணிகள் விமானம் என்று தெரிந்த பின்னரும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்'' என்றார். கறுப்பு பெட்டி சிக்கியது இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி சிக்கியுள்ளது.
அந்த பெட்டியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அது தங்கள் வசம் இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அந்த கறுப்பு பெட்டியை ஆராய்ந்தால் விமானம் விபத்துக் குள்ளானதா? ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதா? அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்று தெரியவரும்.
உயிரிழந்தோர் விபரம்
ஆனால், எது எவ்வாறானாலும் இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்ளடங்கலாக 280 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்கள் என மொத்தம் 298 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பயணிகளில் 154 பேர் நெதர்லாந்து பிரஜைகள். 43 பேர் மலேசியர்கள், அவுஸ்திரேலியர்கள் 27 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 12 பேர். பிரித்தானியர்கள் 9, ஜேர்மனியர்கள் 3, பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 3, கனேடியர் ஒருவர், 4 பேர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பெண் ஊழியர் ஏஞ்செலின் மேலும், இந்த விமானத்தில் பணியாற்றிய ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்றும் தெரியவந்துள்ளது.
அவரது பெயர், ஏஞ்செலின் பிரமிளா ராஜேந்திரன் (வயது 30). விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி கேள்வியுற்றதிலிருந்து, ``சிறு வயதிலிருந்தே விமானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாகக் கொண்டிருந்த நிலையில், அந்த கனவே அவரை கருகச் செய்து விட்டதே'' என அவரது குடும்பத்தினரும், உறவுகளும் கதறி அழுகிறார்கள்.
இதுபோன்று, பலரின் கனவுகளும் இன்று கருகிபோய்விட்டன. மனதை உருக்கிய பேஸ்புக் பதிவு இதனிடையே, மேற்படி விமானத்தில் பயணித்த கோர்பேன் என்ற இளைஞரின் பேஸ்புக் பதிவு பலரின் மனதையும் உருக்கியுள்ளது.
தான் பயணிக்கும் விமானம் விபத்துக்குள்ளாகப் போகிறது என்பதை அறியாமலேயே, விமானம் புறப்பட சற்றுமுன்னர் அந்த விமானத்தை புகைப்படமெடுத்து அதில், ``இந்த விமானம் கடத்தப்பட்டால் இது தான் அதன் உண்மையான புகைப்படம்'' என நகைச்சுவை உணர்வுடன் பேஸ்புக்கில் கருத்தை பகிர்ந்திருந்தார்.
2014 ஆம் ஆண்டு மலேசிய விமான நிலையத்திற்கு கறுப்பு ஆண்டு என்று கூறும் வகையில் அடுத்தடுத்து சிறிய இடைவெளியில் இருவேறு துயர சம்பவங்கள் நிகழ்ந்தாகிவிட்டன. ஞாபகமிருக்கிறதா? 2014 ஆம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி புறப்பட்ட மலேசிய விமானம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம்.
அதிகாலைவேளை தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் 239 பயணிகளுடன் மாயமானது. தொழில்நுட்ப வசதிகள் பல்கிப் பெருகி, செவ்வாய்க் கிரகத்திலேயே குடியேறுவதற்கான ஆயத்தங்களை மனிதன் மேற்கொண்டிருக்கும் நிலையில், இந்த விமானத்திற்கு என்ன நடந்தது என்பது மட்டும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 227 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்றதன் அடிப்படையில் மலேசிய அரசு அவர்கள் அனைவரையும் இறந்தவர்களாக கருதி மிகவும் வருத்தத்துடன் அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று வருவார்கள் நாளை வருவார்கள் என எதிர்பார்ப்பிலிருந்த 239 பேரினதும் உறவினர்கள், தங்கள் தவிப்பை கண்களிலிருந்து வெளியேறிய கண்ணீரின் மூலம் உலகத்திற்கு வெளிக்காட்டினார்கள்.
இந்த சோகம் மறைவதற்குள் மற்றுமொரு மலேசிய விமானம் தொடர்பான செய்தி இன்று அனைவரையும் பேரிடியாக தாக்கியுள்ளது. 298 அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுதொடர்பிலான விசாரணைகள் அனைத்து தரப்பிலிருந்தும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உலகத் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர். ஆனால், இவை எல்லாவற்றையும் விட இனியும் இதுபோன்றதொரு சம்பவம் நிகழாமல் தடுப்பதே அனைவரது கடமையுமாகும்.