Breaking News

2000 பேரை புலிகளுக்கு சேர்த்த பணி - தலைவருடன் ஓர் நாள்


பஜிரோ ஒன்று என் வீட்டு வாசலில் வந்து
திடீர் என்று நின்றது.தளபதி சூசையோ ? என்று எனக்குள் ஓர் கொக்கைத் தடியை(கேள்வி) எழுப்பினேன்.சூசையின் வால்' ஒன்று வந்தது.

அந்தப் பாதுகாவலனை(போராளி) காணும் வேளையில் 'எங்கையடா தலை?"என்று கேட்பேன் 32பல்லும் தெரியச் சிரிப்பான். அதுதான் அவனது சிறப்பு தளபதி சூசையை, ஒரு ஐந்து தலை(இருக்கோ தெரியாது) நாகம்போல். கண்ணாக பாதுகாப்பதில் அவனும் ஒருவன்.

அடிப்படைப் பயிற்சி முகாமுக்கு வந்த இவனுக்கு பாடத்தில் நான் கேள்வி கேட்டால், திரு திரு என்று முழித்துக் கொண்டு இருப்பான். பின்னர் பல சண்டைகளில் வீராதி வீரனாக செயல் பட்டான்,என்பதால் இவனைத் தூக்கி தன் பாதுகாவலனாக வைத்துக் கொண்டார் தளபதி சூசை.

அவன்தான் இப்போது வருகிறான்.."அண்ணா..உங்களை சூசை அண்ணா உடனே கூட்டி வரச் சொன்னார்." அதுக்கு ஏன் சிரிச்சுக் கொண்டு சொல்லுறாய்?" என்றேன்.

மீண்டும் ஒரு ஹி..ஹி ..சாரத்தை(கைலி) மாற்றிக் கொண்டு பஜிரோவிலேயே புறப்பட்டேன்.பஜிரோ நவிண்டிலில் உள்ள கடற் புலிகளின் விசேட அதிரடிப் படை முகாமுக்கு விரைந்தது.

அங்கே தளபதி சூசை மட்டும் ஒரு அறைக்குள் நின்று கொண்டிருந்தார்.அவருக்கு அண்மையில்....? தலைவர்! உடம்பு நடுங்கியது பயத்தினால் அல்ல ஒரு மரியாதைதான்.

அதுவும் திடீர் என்று கண்ட மகிழ்ச்சியில். "இருங்கோ அண்ணை" என்று தன் முன்னே இருந்த ஆசனத்தைக் காட்டினார். தலைவரின் சிறப்புகளில் ஒன்று இது! அண்ணை என்று அவருக்கு கீழ் இருக்கும் என்னை விழித்தார்.

அப்படி விழிப்பதே அவரின் பண்பாடு. சூசையிடம் கண்ணைக் காட்டினார். சூசை வெளியில் சென்ற மறு வினாடி, தட்டுத் தட்டாக கொண்டு வரத் தொடங்கினார் சூசை!

வேறு எந்தப் போராளிகளும் அந்தப் பணியைச் செய்யவில்லை!..உணவுத் தட்டுகள்தான்..! "எது விருப்பமோ அதைச் சொல்லுங்கோ.." என்று சொல்லிவிட்டு உணவுத் தட்டுகளை காண்பித்தார்.

இப்போதுதான் எனக்கு இன்னும் நடுங்கியது..எதைச் சொல்வது சோறு சிக்கன்,மட்டன் கொத்து ரொட்டி,இன்னும் சில கறித் தட்டுகள் என்று இருந்தன. கொத்து ரொட்டி தட்டைக் காட்டினேன்.

ஒப்புக்காக "வேண்டாம்" என்று தலைவருக்கு சொல்லவும் முடியாது ஏன் தெரியுமா? அப்போதுதான் மதியம் 12 மணி சாப்பிட்டிருக்க மாட்டேன்.என்பது அவருக்கு தெரியும்.அவரும் கொத்து ரொட்டியை , தன் தட்டில் போட்டார். எனக்கும் அவர் கையாலேயே போட்டுத் தந்தார் இருவரும் உண்ணத் தொடங்கினோம்.

சூசை கொடுப்புக்குள் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார். சாப்பிட முன்னர் எதோ ஓர் மாத்திரையை எடுத்து தன் வாய்க்குள் போட்டுவிட்டு தண்ணீர் குடித்தார் தலைவர்.அது என்ன மாத்திரை? என்று எனக்கு தெரியவில்லை.

நீண்ட நேரம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஏன் எனக்கு இத்தனை வரவேற்பு என்று எனக்குப் புரியவில்லை பல வேளைகளில் தலைவரைச் சந்திக்கும் வேளைகளில் அவருடன் சேர்ந்து, உணவுண்டிருக்கிறேன்.

ஆனால், மணிக்கணக்கில் அவரோடு பேசிக் கொண்டு உணவுண்டது இதுவே முதல் தடவை. உலகில் எந்தத் தலைமையோ,தலைவர்களோ இப்படி செய்வதில்லை. செய்ததாக நான் கேள்விப் பட்டதும் இல்லை..

என்னில் இத்தனை பாசம் வைத்திருக்கிறாரா தலைவர்? நினைக்க பெருமையாக இருந்தது அத்தனை நேரம் அவருடன் இருந்து பேசினேன் ஆனால் ,அன்றைய சந்திப்பின் உள் நோக்கம் என்னவென்று எனக்குப் புரியவில்லை..

அப்படியே அன்றைய சந்திப்பும் முடிந்து, நான் மீண்டும் பஜிரோவில் ஏறி வீட்டுக்கு சென்று,அன்று இரவு உணவுண்டு,தூங்கப் போனதும், தூக்கம் இறுதிவரை வரவே இல்லை.. மனத்தை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அடுத்த நாள் தளபதி சூசையிடம் கேட்டுவிட்டேன்.

அப்போது சூசை சொன்ன பதில் இதுதான்.. கடற் புலிகள் அமைப்பில் 2000 போராளிகள் சேர்ந்துள்ளார்கள் அதற்குத்துதான்..." -என்றார் சூசை..மூன்று மாதத்துக்கு முன்னர்...என்னை அழைத்த சூசை நாங்கள் கடற்புலிகள் அமைப்பை தொடங்கும்படி தலைவர் சொல்லி 200 பொடியங்களையும் தந்துள்ளார்...இதை 2000 பொடியள் ஆக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.

அதுவும் ஆறு மாதத்துக்குள்.." என்றார்.. "சரி..நான் மூன்று மாதத்துக்குள் தாறன்" என்று சொன்னேன்.. ஒ..இதுதானா விஷயம்? "சப்' என்று இருந்தது..

நான் என் கடமையைத்தானே செய்தேன்? என் நினைவில் இருந்து அழியாத நாள் அது!

மு.வே.யோகேஸ்வரன்