இலங்கையின் வரட்டு படிவாதம் - வீரகேசரி
மனித உரிமை மீறல்களில் அரச படைகள் ஈடுபட்டிருந்தன என்பது பல வழிகளிலும், பலதரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கின்றன.
ஆனாலும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று அவற்றை அடியோடு அரசாங்கம் மறுத்திருக்கின்றது. மனித உரிமைகள் மீறப்படவில்லை என்று அடித்துக் கூறுகின்ற அரசாங்கம், சிவிலியன்கள் எவருமே கொல்லப்படவில்லை என்றும் ஸீரோ கசுவலிட்டி கொள்கையையே அரச படைகள் கடைப்பிடித்திருந்தன என்றும் கூறி வருகின்றது.
அது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தமானது, அவர்களால் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த அல்லது சிறைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை அவர்களின் பிடியில் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமான யுத்தம் என்றும் அரசாங்கம் சொல்கின்றது. இந்த மனிதாபிமான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே விடுதலைப்புலிகளே, பொதுமக்கள் எவருமே கொல்லப்படவில்லை என்பது அரசாங்கத்தின் கூற்று.
ஏனென்றால் இராணுவத்தினர் ஒரு கையில் மனிதாபிமானத்தையும், மறு கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கிகளையுமே ஏந்திச் சென்றார்கள், சமர் புரிந்தார்கள் என்பது அரசாங்கத்தின் விளக்கவுரையாக இருக்கின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் நடத்தப்பட்ட யுத்தமானது சமாதானத்திற்காக நடத்தப்பட்ட யுத்தம் என்று வர்ணிக்கப்பட்டிருந்தது போன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்திய யுத்தம் மனிதாபிமான யுத்தம் என்று சோடிக்கப்பட்டிருக்கின்றது.
யுத்தம் என்பதே எதிரிகளாகக் கருதப்படுகின்ற ஆட்களைச் செயலிழக்கச் செய்வதற்காக, அவர்களைக் காயப்படுத்தியும் கொல்வதையுமே இலக்காகக் கொண்டதாகும். மனிதருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும். அதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்கள் பல இருக்கலாம். ஆயினும், சமாதானத்திற்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் யுத்தம் செய்தோம் என்று, இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்குக் காரணம் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த யுத்தத்தை ஏற்படுத்தியதே அரச தரப்பினர்தான் என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தயாராக இல்லை என்பது முதலாவது விடயமாகும். யுத்தம் ஒன்றைத் தவிர்த்து, சமாதான வழியில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு இலங்கை அரசாங்கமுமே மனப்பூர்வமான முறையில், நேர்மையான வழியில் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது இரண்டாவது விடயமாகும்.
முரண்பாடு ஒன்றில் குறிப்பாக புரையோடிப் போயுள்ள அரசியல் முரண்பாடொன்றில், சமாதான வழியில் தீர்வுகளைக் காண்பதென்பது இலகுவான காரியமல்ல என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகும். இருந்த போதிலும், அந்த முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய வழிமுறைகளை, இறைமையுள்ள ஓர் அரசு என்ற வகையில் விட்டுக்கொடுப்போடும், சகிப்புத் தன்மையோடும், வழங்கப்படுகின்ற உறுதிமொழிகளை நேர்மையான வழியில் நிறைவேற்றுகின்ற தன்மையோடும், இலங்கையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சி செலுத்திய அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இலங்கை அரசுகளின், மிக முக்கியமான இந்த அரசியல் பலவீனமே, சர்வதேச விசாரணையின் முன்னால் பிடிவாதக்காரர்களாக, முரட்டுத்தனமான அரசியல் போக்கைக் கொண்டவர்களாக, அரச தரப்பினரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது.
மோசமான யுத்தம் ஒன்றில் வெற்றியீட்டியதன் பின்னர் - அந்த வெற்றியானது, நேர்மையானதாக இருக்கலாம் அல்லது மோசடியான அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்ததாக இருக்கலாம். - இறைமையுள்ள ஓர் அரசாங்கம் என்ற வகையில், சொந்த நாட்டுப் பிரஜைகளில் ஒரு தொகுதியினருக்கு எதிராக நடத்தப்பட்ட மோசமான யுத்தம் ஒன்றின் பின்னர், விட்டுக் கொடுப்போடும், நேர்மையாகவும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.
சரி, பிழைகளுக்கு அப்பால் யுத்த முனையில் நடைபெற்ற வேண்டத்தகாத காரியங்களை ஏற்றுக்கொள்வதும், அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வதுமே உண்மையான யுத்த வெற்றி வீரர்களுக்குரிய பண்பாகும். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் பின்னர், இறந்துபோன எதிரியை மதித்துக் கௌரவித்து, அதன் மூலம் சிறப்பான மனிதப் பண்பு நிலை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பல சூட்சுமங்களும், நரித்தனமான தந்திரோபாயங்களும் பயன்படுத்தப்பட்டிருந்த யுத்தத்தில் வெற்றிகொண்டவர்கள், யுத்தத்தில் வெற்றிபெற்ற தரப்பினர் வெளிப்படுத்தியிருக்க வேண்டிய எந்தவொரு உயர்ந்த மனிதப் பண்பையுமே வெளிப்படுத்தவில்லை.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்றன. இத்தகைய மனிதப் பண்பு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்திலான எதிர்பார்ப்பு ஒன்று பரபரப்புடன் கூடிய ஆவலாக, ஏக்கமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கின்றது. அதனைத் தணிப்பதற்குப் பதிலாக எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றி அணைக்க முயற்சிக்கின்ற மோசமான காரியத்தையே அரசு செய்து கொண்டிருக்கின்றது.
சர்வதேச விசாரணைக்கான எதிர்ப்பு
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமைத்திருந்த அரசியல் வியூகங்களின் தந்திரோபாயச் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச நாடுகள் பல அரசாங்கத்திற்குப் பல வழிகளில் உதவி புரிந்திருந்தன. விடுதலைப்புலிகளை இல்லாமல் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அந்த உதவிகள் எல்லாவற்றையும், ஆயுதங்களாகவும், செயல் வழிமுறைகளாகவும் அரசாங்கம் பயன்படுத்தியிருந்தது. இந்தப் பயன்பாட்டின் மூலம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டும்.
அதற்கான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சர்வதேச அளவிலான கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தது. ஆனால், அந்த கோரிக்கை பல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டபோது, அதனை ஒப்புக்காக ஏற்றுக் கொண்டது. ஆனாலும் வெளியார் எவரும் விசாரணைகளை நடத்த முடியாது. அந்த விசாரணைகளைத் தானே நடத்தப் போவதாகக் கூறி, கால தாமதத்தின் பின்னர், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை பாதிக்கப்பட்ட மக்களும், மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேசமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. விசாரணைகளே தேவையில்லை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்ற அரசாங்கத்தின் பிடிவாதப் போக்கு காரணமாக அத்தகைய விசாரணையை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். எதிர்பார்த்தபடியே, அந்த விசாரணை பக்கச்சார்பானதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வெல்வதற்குத் தவறிய ஒன்றாகவுமே அமைந்தது.
அந்த விசாரணை அறிக்கைகூட, அரசாங்கத்தினால் குறிக்கப்பட்ட காலத்தினுள் வெளியிடப்படவில்லை. பல்வேறு அழுத்தங்களின் பின்பே, அது வெளியிடப்பட்டது, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த சிபாரிசுகளை, தானாகவே நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. வற்புறுத்தலின் பின்பே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அந்த நடவடிக்கைகளும் கண்துடைப்பு நடவடிக்கைகளாக இருந்தனவே அன்றி, பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை. இறுதி யுத்தநேரத்துச் சம்பவங்கள் தொடர்பான பொறுப்பு கூறலுக்கான நடவடிக்கைகள் அனைத்துமே, அரசாங்கம் யுத்தகாலத்தில் குற்றமே இழைக்கவில்லை. நீதியாகவே நடந்து கொண்டது. விடுதலைப்புலிகளே குற்றமிழைத்தார்கள். நடைபெற்ற காரியங்களுக்கெல்லாம் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற ரீதியிலேயே அமைந்திருந்தன.
இதனால், அரசாங்கம் மேற்கொண்டிருந்த உள்ளூர் பொறிமுறையிலான விசாரணை நடவடிக்கைகளைப் புறந்தள்ளி, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஊடாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு சர்வதேசம் முன்வந்தது. ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் உள்ளூர் பொறிமுறையின் மூலம் நாங்களும் விசாரணை செய்யமாட்டோம், நடைபெற்ற காரியங்களுக்கு அதன் ஊடாகப் பொறுப்பு கூறுவதற்குமில்லை என்ற போக்கு காரணமாக சர்வதேச விசாரணைக்கு வளைந்து கொடுக்க முடியாது. அத்தகைய விசாரணையொன்றை நடப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அரசாங்கம் வெளிப்படையான முரட்டுத் தனத்துடன் பதிலளித்துள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த விசாரணைகளை உரிய முறையில் நடக்கவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றது.
சாட்சிகள் மீதான மோசமான அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமை விசாரணைக் குழு நாட்டிற்குள் பிரவேசிக்க முடியாது. அதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. அத்துடன், வளைந்து கொடுக்காத அதன் போக்குகளுக்கு முண்டு கொடுக்கின்ற அதன் தீவிரவாத அரசியல் சக்திகளின் ஊடாக சர்வதேச விசாரணை குழுவுக்கு எதிரான அரசியல் பிரசார நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டிருக்கின்றது.
அதற்கான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பன தாராளமாகவே மேடையேற்றப்பட்டன, மேடையேற்றப்பட்டு வருகின்றன. விசாரணையாளர்களுக்கு நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நுழைவு அனுமதி மறுக்கப்பட்டாலும், விசாரணைகளை நடத்தியே முடிப்போம் என்று ஐ.நா. மன்றம் அறிவித்திருந்ததையடுத்து, அந்த முயற்சியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.
சர்வதேச விசாரணை நடைபெறும் என்ற அறிவித்தல் வெளிவந்த உடனேயே, விசாரணையில் யாரும் சாட்சியமளிக்கக் கூடாது. அவ்வாறு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாகவே அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் ஊடாக அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது.
அது மட்டுமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசுக்கு எதிராக சாட்சியமளிப்பவர்கள் மீது, பாதுகாக்கப்பட வேண்டிய நாட்டின் இரகசியங்களை வெளிப்படுத்தினார்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் நின்றுவிடவில்லை. சாட்சியமளிப்பவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் தண்டனையளிக்கப்படும் என்ற செய்தி இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அதாவது விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் கூறியிருக்கின்றது. நாட்டின் இரகசியங்களை வெளியே சொன்னால் அது தேசத்துரோகமாகும். தேசத்திற்குத் துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மரண தண்டனைதான் கிடைக்கும். அதனால் தேசத்துரோகம் என்பது மோசமான குற்றமாகும். எனவே, அதனைச் செய்வதற்கு எவரும் இலகுவில் துணியமாட்டார்கள்.
சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் அத்தகைய குற்றத்தைச் செய்வதற்குக் கனவிலும் துணிய மாட்டார்கள். ஆனாலும், சர்வதேச விசாரணையில் சாட்சியமளிப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தத் தண்டனை பற்றிய அறிவித்தல் சரியான ஒரு பயமுறுத்தலாக அமையாது என்று அரசாங்கம் எண்ணியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. அதன் காரணமாகத்தான், மீட்சியே கிடையாது என்று நாட்டு மக்கள் எல்லோரும் நன்கு அறிந்து வைத்துள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சர்வதேச விசாரணையில் சாட்சியமளிப்பவர்களுக்குத் தண்டனையளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியிருக்கின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும், விசேடமாக தமிழ் மக்களுக்கு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நடைமுறைகள், அதன் பாதிப்புகள் நன்றாகத் தெரியும். கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாக அவர்கள் அந்த சட்டத்தின் பிடியில் சிக்கி மீட்சியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பலருக்கு அந்தச் சட்டத்தின் பயங்கரம் என்ன என்பது நேரடி அனுபவத்தின் மூலம் தெரியும். அதேநேரம் அந்தச் சட்டத்தின் கீழ் நாடளாவியரீதியில் தமிழ் மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்பட்ட அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார்கள்.
அது மட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கு எதிரான விசாரணையில் தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் தமிழ் மக்களே சாட்சியமளிப்பவர்களாக இருப்பார்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதற்காகத்தான் சாதாரண வாழ்க்கையில் துரோகம் இழைப்பதென்பது பாரதூரமான குற்றச் செயலாகக் கருதப்பட்டுள்ள போதிலும், நாட்டுக்குத் துரோகமிழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் பார்க்க, சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதாகத் தெரிகின்றது.
'தேசத்துரோகமுமில்லை, பயங்கரவாதச் செயலுமில்லை – தண்டிக்க முடியாது'
இலங்கை அரசாங்கம் மக்களைத் தடுத்து நிறுத்தினாலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கை அரசுக்கு எதிரான விசாரணைகளைத் திட்டமிட்டபடி நடத்தும் என்று மூன்றுபேர் கொண்ட அந்த விசாரணைக்குழுவின் வல்லுநர்களில் ஒருவராகிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவியாகிய அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்திருக்கின்றார்.
பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுனர் நாயகம் சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவியாகிய அஸ்மா ஜெஹாங்கிர் ஆகிய துறைசார்ந்த வல்லுனர்களே ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி தவிர ஏனைய இருவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'விசாரணையாளர்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதைத் தடுப்பது என்பது எந்தவொரு அரசாங்கத்திற்கும் மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும். அரசாங்கம் ஏதேச்சதிகாரத்தைப் பிரயோகித்து மக்களைத் தடுக்க நினைத்தால், அரசாங்கத்திற்குத்தான் அது பாதகமாக வந்து முடியும். அரசுகள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை நாங்கள் இதற்கு முன்னர் நடத்தியுள்ளோம்' என்று விசாரணைக்குழு உறுப்பினர் அஸ்மா ஜெஹாங்கிர் கூறியுள்ளார்.
அரச ஒத்துழைப்பு இல்லாத விசாரணைகளை நடத்திய அனுபவத்தின் மூலம், இலங்கைக்கு எதிரான விசாரணைகளை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதே அவருடைய துணிவான கருத்து. அதேநேரம் நாட்டின் இரகசியங்களைப் பேண தவறினார்கள், பயங்கரவாதத் தடைச்சட்ட விதிகளை மீறினார்கள் எனக் கூறி, விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களைத் தண்டிக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இதுபற்றி கருத்துரைத்த கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் அதற்கான காரணத்தையும் விளக்கிக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியும், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களுமே நாட்டின் இரகசியங்களை அறிந்தவர்கள் - அறிபவர்கள். அவர்கள்தான் சத்தியப்பிரமாணத்தின் அடிப்படையில் அவற்றைப் பாதுகாப்பதற்கான கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மக்களுக்கு நாட்டு இரகசியங்கள் தெரியவருவதற்கான வாய்ப்பு கிடையாது. எனவே தெரியாத ஒரு விடயத்தைக் காக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இல்லை.
எனவே, இந்த வகையில் நாட்டின் இரகசியங்களை வெளியிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களைத் தண்டிக்க முடியாது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். 'நாட்டின் இரகசியங்களைக் காப்பதென்பதும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தமக்காக நீதியும் நிவாரணமும் கேட்பதென்பதும் இரண்டும் வெவ்வேறு விடயங்களாகும்.
இவையிரண்டுக்கும் இடையில் தொடர்பே கிடையாது. எனவே தொடர்பில்லாத ஒரு விடயத்தில் எவரையும் யாரும் தண்டிக்க முடியாது. பயங்கரவாதச் செயல் ஒன்றைச் செய்பவரையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும். அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கேற்பட்ட பாதிப்பு குறித்து சாட்சியத்தில் எடுத்துக்கூறி நிவாரணம் தேடுவதென்பது ஒருபோதும் பயங்கரவாதச் செயலாக முடியாது. எனவே சர்வதேச விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பவர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனக் கூறும் அரசாங்கம், யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில், எத்தனையோ மனித உரிமை மீறல் செயற்பாடுகளைச் செய்திருக்கின்றது. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடக்கம், அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்ப வற்றில் இந்த மீறல் நடவடிக்கைகள் மிகத் தெளிவாகவும், தாராளமாகவும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.
பூனை கண்ணை மூடினால் பூகோளம் இருண்டுவிட்டது என்று பூனை எண்ணிக்கொள்வதைப் போலவே, மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. அதுபற்றி விசாரணைகள் நடத்துவது தேவையற்ற விடயம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு அமைந்திருக்கின்றது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதில் இருந்து தப்ப முடியாது.
அதனைத் தட்டிக்கழிக்கவும் முடியாது என்பதை அரசாங்கம் இப்போதாவது உணர்ந்து, அதற்கேற்ற வகையில் நட வடிக்கைகளை முன்னெடுப்பது நல்லது. முரட்டுப் பிடிவாதமும், நான் செய்வதே சரி, நான் சொல்வதே வேதவாக்கு என்ற வரட்டுப் பிடிவாதப் போக்கும் நாட்டை அதலபாதாளத்தில் கொண்டு சேர்க்கவே உதவும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.