Breaking News

நவநீதம்பிள்ளை வாழ்க்கை வரலாறு - தெரிந்தும் தெரியாதவை

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த
ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை ஓர் இந்திய வம்சாவளிப் பெண். தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவர் நிறவெறி மிகுந்த தென் ஆப்பிரிக்காவில், நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனைதான்.

இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக அகில உலகமும் வியப்புடன் பார்க்கும் உயரத்தில் ஜொலிக்கிறார். இந்த நீதி தேவதை. சமீபத்தில், தன் முன்னோர்கள் பிறந்த பூமியான இந்தியாவுக்கு வருகை புரிந்த நவநீதம் பிள்ளை, ஊடகங்களின் முக்கிய செய்தியானார். தன் வாழ்க்கை முழுதுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில்தான். 

ஏழை குடும்பத்தில் ஒரு பேருந்து ஓட்டுநரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மாதானாம். என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை, எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்தான் காரணமாம். 

தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்! என்கிறபோது ஈரத்துடன் பளபளக்கின்றன அவர் விழிகள்! 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார். 

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அப்போதே நிற வெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார் நவநீதம் பிள்ளை. இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் இவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் அயர்ந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விடிவெள்ளியாகவும் விளங்கினார். 

நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன். ஒரு வழக்குரைஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால், அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது என்று தன் வாழ்நாளின் கறுப்புப் பக்கங்களை கசப்போடு திரும்பிப் பார்க்கிறார் நவநீதம் பிள்ளை. 

தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர். 1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார். 

1992இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணையுடன் "இக்வாலிட்டி நவ்" என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் எவரெஸ்ட்டாக உயர்ந்து நிற்கிறார். மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான். 

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார். 2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது. பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக்குரைஞர் தான். நிற வெறிக்கு எதிராக அவர் வாதாடியதால் ஐந்து மாதங் கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்கிறார் தன் கணவரை ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை பிளாக் பியூட்டி என்று அழைத்தனர். ஆனால், குதிரைகளைத் தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன். 

அப்படி, அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிற வெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அது தான் எங்களின் வெற்றி… என்று கண்களை மூடி மெது வாக சிரிக்கிறார் நவநீதம்பிள்ளை நீதி என்றும், யாருக்கும் மறுக்கப்படுவதில்லை என்று நம்புவோம்!