தமிழர் தரப்பின் நிதானம் - திருமலை நவம்
சிங்களவரை அரவணைத்துச் செல்ல வேண்டும். உணர்ச்சி பூர்வமான தலைமை முஸ்லிம் மக்களுக்கு தேவையில்லை என்ற கருத்தை வலுப்படுத்தி உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதா வூத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அவர் தனது கருத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இன்று முஸ்லிம் மக்களுக்கு தேவைப்படுவது உணர்ச்சி பூர்வமாக தொழிற்படும் தலைமைத்துவமல்ல. சிந்தனை பூர்வமாக தொழிற்படும் தலைமைத்துவமே தேவை. கடந்த பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப் போராடினர். ஆனால் இது வரை அது வெற்றி பெற்றதாக தெரிய வில்லையென்ற கண்டுபிடிக்கப்பட்ட உண்மையின் அடிப்படையிலும் தனது அனுபவப் பூர்வமான கருத்தைபட்டவர்த்தனமாக சொல்லியிருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்து தமிழ் மக்கள் பற்றிய பின்வரும் கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. ஒன்று தமிழர்கள் தவறு செய்வதையே பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டவர்கள். இன்னொன்று தமிர்களுடைய தலைமைத்துவம் என்றுமே உணர்ச்சிமயப்படுத்தப்பட்டது. மற்றொன்று இந்த இரண்டு விடயங்களையும் முஸ்லிம் மக்களோ அல்லது அவர்களின் அரசியல் தலைமைத்துவமோ என்றுமே செய்யப் போவதில்லையென்ற தெளிவான கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரையுள்ள ஆறரை தசாப்த கால அரசியல் போக்கு, பொருளா தார போக்கு, சமூகப் போக்கு என்பவற் றின் விபரங்களும் விளக்கங்களும் தெரியாததொரு விடயமல்ல. இலங்கையின் அரசியல் போராட்ட வரலாற்றில் போராட்டம் என்ற பதம் 1956 ஆம் ஆண்டு வரை அல்லது 1958ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற பூதம் புறப்ப ட்ட காலம் வரை எந்தவித கனதியும் பெற்றிருக்கவில்லை.
தமிழ் மக்கள் எங்கிருந்து அல்லது எந்த இடத்திலிருந்து அல்லது எந்த சந்தர்ப்பத்திலிருந்து தவறை இழைக்க முற்பட்டார்கள் என்பதை கண்டு கொள்ள வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும் இன்னுமொரு புறம் சிறுபான்மை சமூகத்துக்கும் அவசியமான ஒரு விடயந்தான். 1919 ஆம் ஆண்டு தமிழர்களும் சிங்கள மக்களும் இணைந்து தேசிய காங்கிரசை நிறுவினார்கள். சேர் பொன்.அருணாசலம் பேரின சமூகத்தின் இணக்க உடன்பாட்டுடன் தேசிய அரசியலே நடத்திச் செல்ல வேண்டும்.
அரசியல் திட்டத்தின் சம்பள உரிமை நிலைநிறுத்த வேண்டுமென நிறுவப்பட்ட தேசிய காங்கிரசுக்கு பூரண ஆதரவு வழங்கினார். நடந்தது என்ன சேர் பொன் அருணாசலமும் அவரது சகோதரர் சேர் பொன் இராமநாதனும் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் இழைத்த தவறு பேரினச் சமூகத்தை அரவணைத்து செல்ல வேண்டுமென்ற உயர்ந்த தத்துவ ஞானம் 1948 இல் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஜி.ஜி. பொன்னம்பலம், ராமலிங்கம் மற்றும் கனகர த்தினம் ஆகிய மூவரும் அப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
காரணம் டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையிலான தேசிய சமூகத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற நோக்கம். அவர்கள் அன்று செய்த தவறின் காரணமாக இன்று வரை மலையக சமூகத்தின் எதிரிகளாகப் பேசப்படுவது வழக்கமாகிவிட்டது. 1956 ஆம் ஆண்டு (15.6.1956) சிங்களம் மட்டும் அரசகரும மொழி என்னும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இது கொண்டு வந்த பாரிய நன்மை 1958 ஆம் ஆண்டு இனக்கலவரமென்னும் திருவிழாவைக் கொண்டு வந்தது. இதை தமிழர்கள் யாரும் கைநீட்டி வரவேற்கவில்லை. இந்நாட்டின் இனக் குரோதத்தின் முதலாவது கோரத் தாண்டம் முதல் முறை ஆடப்பட்டது.
இதற்கு முன் 1915 ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராஜ்சியம் இலங்கையைக் கட்டியாண்ட காலத்தை முஸ்லிம் மக்களுக்கெதிராக மூண்டஇனக் கலவரத்தின் மூலச் சம்பவம் பௌத்த மத ஊர்வலமும் கொண்டு வந்ததன் விளைவை கம்பளை மக்கள் மறந்து விட முடியாது. இதன் பின்னே அடுக்கடுக்காக நடந்த எல்லாச் சம்பவங்களும் அரசியல் மாற்றங்க ளும் அறியப்பட்டவொன்றே. பண்டா -–செல்வா ஒப்பந்தம் டட்லி –- செல்வா ஒப்பந் தம், 1973 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தல், 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரம் என்ற இன்னோரன்ன இனக்குறுகல் நிகழ்வுகள் தமிழ் மக்களை மாத்திரம் பாதித்த சம்பவங்களாக இருக்கலாம்.
இவையெல்லாம் தமிழ் மக்கள் செய்த தவறுகளின் பாடங்கள் என்று சொல்வது எந்தளவு கோல்கொண்டு அளக்கப்படுகிறது என்று தெரியவில்லை. 1983 ஆம் ஆண்டுக்கு பின் உருவாகிக் கொண்ட ஆயுதப் போராட்ட முனைப்புக்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக ஆகிக் கொண்டதன் விளைவு சிறுபான்மை சமூகங்கள் மீது மேலாதிக்க சமூகமும் அரசி யல் தலைமைத்துவமும் செலுத்திய சுட்டூழியங்களையும் அநீதிகளையும் சர்வதேச மயப்படுத்த காரணமாகியது என்பதாகும்.
1983 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுக்குள் மாத்திரம் வட்டம் போட்டுச் சுழன்று கொண்டிருந்த சிறுபான்மை சமூகத்துக்கெதிரான அடக்கு முறைகளும் ஒடுக்குவாதங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை பதியப்பட்டிருப்பதற்குரிய பரிணாமத்தை தந்திருக்கிறது என்பது மாத்திரமல்ல அண்மையில் நடந்த அட்டூழியங்களை குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கெதிராக கொழுந்து விட்டெறிய ஆரம்பித்திருக்கும் இனவாத தீயை முஸ்லிம் தலைமைத்துவங்கள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்து இயம்ப வழிவகுத்திருக்கிறது.
திம்பு பேச்சுவார்த்தையில் எங்களையும் அழைத்திருக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்ட காலத்திலிருந்து கிழக்குக்கு ஒரு அலகு வேண்டுமென்று தீட்சண்யத்துடன் போராடி இன்று கிழக்கு குறித்த ஒரு சமூகத்துக்கே உரியது என பேசவைத்திருக்கும் நிலையை உருவாக்கிய பின்னணிகள் என்ன என்பதை தீர்க்க முனைப்புடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் செல்லாக்காசு எனப் பேசப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு தமிழ் மக்கள் விட்ட தவறுகளே காரண மென்பது அப்பட்டமான உண்மை தான்.
கறையான் புற்றெடுக்க கரு நாகம் குடி கொண்ட கதை போல் ஆகிவிட்டது.
தமிழ் மக்களின் இன்றைய பரிதாப நிலை. தமிழர்களின் தலைமைத்துவம் எப்பொழுதும் உணர்ச்சிபூர்வமாக காணப்படுவதன் காரணமாகவே அது தனது இலக்கில் இது வரை வெற்றிபெற்றதாகத் தெரியவில்லையென்ற ஆக்கபூர்வமான கருத்தொன்று தெளிக்கப்பட்டிருக்கிறது. அறிவு பூர்வமற்ற நிதான பூர்வமற்ற அதேவேளை தீர்க்கதரிசன மற்ற தலைமைத்துவத்தையே தமிழ் மக்கள் இது வரை கொண்டிருக்கிறார்கள். இன்னும் வைத்திருக்கிறார்கள் என்ற விமர்சன பூர்வமான கருத்தொன்று சொல்லப்பட்டிருக்கிறது.
சுதந்திரத்துக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு தலைமை தாங்கிய தலைமைத்துவமென்ற வகையில் ஜி.ஜி. பொன்னம்பலம் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதன் பின் ஆயுதப் போர் தொடங்கிய காலத்தில் பல தலைமைகளை வடகிழக்கு மக்கள் கண்டிருக்கிறார்கள். அகிம்சை வழிப் போராட்டம், அறவழிப் போராட்டம் அரசியல் வழிப் போராட்டம் என்ற இருகைங்கரியங்களில் சுதந்திரத்துக்குப்பின் தலைமை தாங்கியவர்கள் என்ற வகையில் தந்தை செல்வநாயகம் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகிய இருவரும் முதன்மை பெற்றவர்களாக காணப்படுகின்றார்கள்.
இவ்விருவரது அரசியல் ஞானம் கல்விப் புலம் சமூகத்தளம் தலைமைத்துவ ஆளுமை என்பவையெல்லாம் யாருக்காவது எடுத்துக் கூறுவதாக இருந்தால் அது கொல்லன் தெருவில் ஊசிவிக்கிற கதையாகிவிடும். இவர்கள் உணர்ச்சிச் செருக்கு மிக்கவர்களாக தமது சமூகத்தை வழிநடத்தினார்களா என்பது இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வியாகும். மகாத்மா காந்தியின் அகிம்சை வாதத்தை பூரணமாக ஏற்றுக் கொண்டு காந்தியை விட ஒரு படி மேலாக உள்நாட்டு பேரினவாதிகளுடன் போராடியவர் தந்தை செல்வநாயகம்.
ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் முரண்பட்ட மகாத்மா காந்திக்கிருந்த சவால்களை விட உள்ளூர் பேரினவாதிகளுடன் அகிம்சை போரை மிக நிதானமாகவும் கவனமாகவும் காத்திரமாகவும் செய்து காட்டிய தந்தை செல்வநாயகம் உணர்ச்சியை எந்த இடத்திலாவது கொட்டியதாக வரலாற்றில் எந்த இடத்திலும் பதியப்படவில்லை. இவருடைய தலைமைத்துவத்தின் உன்னத நிலையால் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸின் பிதாமகர் அஷ்ரப் அவரை குருவாக ஏற்றுக் கொண்டார்.
1960 களில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட சேர் ராசிக் பரீத் மட்டக்களப்பில் போட்டியிட்டு (1965) தோற்றுப் போன மக் கான் மரைக்கார் மற்றும் அல் ஹாஜ் காரியப்பர் அல்ஹாஜ் முகமது அலி (மூதூர்), ஏ.எல்.அப்துல் மஜீத், ஜனாப் முஸ்தப்பா, எம்.அப்துல், மஜீது ஜனாப் எம்.சி.அகமது ஆகியோர் தந்தை செல்வா தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியில் சேர்ந்து கொண்டதும் காலப்போக்கில் அரசாங்கங்களுடன் இணைந்து கொண்டமையும் மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்கள்.
தந்தை செல்வா தேசிய உடன்பாட்டுடைய அரசியல் போக்கை அனுசரித் துப்போக வேண்டுமென்பதற்காகவே பண்டா – செல்வா உடன்படிக்கையையும் (27.07.1957) பண்டாரநாயக்கா – டட்லி செல்வா ஒப்பந்தத்தை (24.03.1965) ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடனும் செய்து கொண்டது மட்டுமன்றி 1965 ஆம் ஆண்டு டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தந்தையவர்கள் தமிழரசுக்கட்சி சார்பில் திருச்செல்வத்தை உள்ளூராட்சி அமைச்சராக்க உடன்பாடு காண முனைந்தார்.
கேவலம் நடந்ததென்ன? கோணேஷர் கோவிலை புனித நகராக ஆக்குவதை நான் எதிர்க்கின்றேன் என ஒரு பௌத்த விகாராதிபதி தனது எதிர்ப்பைக் காட்டியதன் காரணமாக ஒட்டியிருந்த அரசாங்கத்திலிருந்துவெளியேற வேண்டியிருந்தது. இங்கு தமிழ்த் தலைமைத்துவங்கள் உணர்ச்சி வசப்பட்டன தமிழ்த் தலைமைத்துவத்தின் மாபெரிய தவறு தான். தமிழர்களுக்கு தலைமை தாங்கிய இன்னு மொரு தலைவராக விளங்கியவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவரது அரசியல் புலமை மொழி ஞானம் தலமைத்துவ செருக்கு எல்லாம் அறியப்பட்ட ஒரு விடயமே.
1952 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கா வின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஜி.ஜி.பொன்னம்பலமும் கே.கனகரத்தினமும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள். டட்லி சேனநாயக்காவின் பதவி விலக லைத் தொடர்ந்து சேர் ஜோன் கொத்தலாவலை ( 12.10.1953) பிரதமராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது? தமிழர்களை அரசாங்கத்தில் இணைப்பதனை ஆரம்பகாலம் முதல் உள்ளேயும் வெளியேயும் விரும்பாது எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருந்த ஜோன் கொத்தலாவலை அரசாங்கத்திலிருந்து பொன்னம்பலம் கனகரத்தினம் ஆகியோர் 1954 ஆம் ஆண்டு அர சாங்கத்தை விட்டு வெளியேறினார்கள் என் பதை விட வெளியேற்றப்பட்டார்கள்.
1965 ஆம் ஆண்டு மீண்டும் டட்லி சேனநாயக்காவின் தலைமையிலான ஐக்கிய தேசி யக் கட்சி அரசாங்கம் ஆறாவது பாராளு மன்றத்தை அமைத்துக் கொண்டது. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்க்காங்கிரஸ் மீண்டும் இணைந்து கொண்டது உடுப்பிட்டி தேர்தல் தொகுதி யில் போட்டியிட்டு அமோக வெற்றி கொண்ட மு.சிவசிதம்பரம் இப்பாராளுமன்ற த்தில் உப சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொண்டதுடன் உள்ளும் புறமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிறைவான ஆதரவை வழங்கியிருந்தது.
மறுபுறம் தந்தை செல்வநாயகத்தின் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி 14 இடங்களில் வட கிழக்கில் வெற்றி பெற்றதுடன் மறைமுகமான உடன்பாட்டுடன் டட்லி – செல்வா உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டதெல்லாம் வட கிழக்கு மாகாணத்தில் பிராந்திய சபைகள் அமைக்க இணக்கம் காணப்பட்டது. அத்துடன் வட கிழக்கில் தமிழ் மொழியை அமுலாக்குவது சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் செய்யப்படுவதில்லையென்ற உடன்பாட்டுடன் செய்யப்பட்ட டட்லி – -செல்வா ஒப்பந்தம் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் பாராளுமன்றத்தில் (08.01.1966) கொண்டுவரப்பட்ட போது நாட்டில் வன்செயல்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் இதனைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்டுடன் டட்லி– செல்வா உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தலைவர்களின் உணர்ச்சிமயமான போக்குகள் காரணமாகவே அவர்கள் இந்த நாட்டில் அந்நியமயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தங்களது கௌரவத்தையும் சுயாதீனத்தையும் இனத்துவக்கலாசாரத்தையும் பிரதேச வாண்மையையும் அடகு வைக்கத் தவறியதன் காரணமாகவே இன்று தமிழ்ச் சமூகம் தோற்றுப் போன சமூகமாக அடையா ளப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப் போராடுகின்ற போது பெரும்பான்மை இனத்தையும் அரவணைத்துப் போராடி இருந்தால் தோற்றுப்போயிருக்கமாட்டார்கள் என்ற புதிய கண்டுபிடிப்பொன்று சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது.
1947 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முதல் வடகிழக்கு தமிழர்கள் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட காலத்திலிருந்து மாவட்ட சபை அமைப்பு வரை இன்னும் சொல்லப் போனால் வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது வரை ஜனநாயகப் பாரம்பரியங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இன்னுமொரு வகையில் ஜனநாயக மரபு முறைகளை சொல்லிக்கொடுத்த வர்களாக இருந்தும் கூட ஏமாற்றப்பட்டவர்களாகவே இருந்து விட்டார்கள். இணைந்தும் அனுசரித்தும் போக வேண்டு மென்றததத்துவம் ஒரு உன்னத மான உயர்ந்த தத்துவமென்பது மறுப்பதற்கில்லை.
புத்தளம் ஜும்மா பள்ளி வாசலுக்குள் நுழைந்து (02.10.1976) மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனம் தம்புள்ளை பள்ளிவாசல் பாணந்துறை வியாபார நிலையம் குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல்கள் கண்டி காலி மாத்தறை பள்ளிவாசல் கெடுபிடிகள் பர்தா முஸ்லிம் பெண்கள் அணியக்கூடாது ஹிஜாப் அணிந்து வரக்கூடாது ஹலால் உணவு இலங்கைக்கு வேண்டற்பாலது.
முஸ்லிம் மக்களுக்கெதிரான கேகாலை மாவட்ட ஒன்று கூடல் (25.02.2013) முஸ்லிம் மக்களுக்கெதிராக ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுவரொட்டிகள், காணிப்பறிப்புக்கள், விகாரை அமைப்புக்கள், தொல் பொருள் ஆய்வுகள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உணர்ச்சிமயமான அரசியல் ஆக்கப்படக்கூடாது என்பதில் முஸ்லிம் மக்கள் பொறுமையையும் நிதானத்தையும் அமைதியையும் நிறையப் பேணுவதன் மூலம் எல்லா சலுகைகளையும் உரிமைக ளையும் வசதி களையும் பெற்று வாழ முடி யுமென்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் முஸ்லிம் மக்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.