Breaking News

சுவிஸ் நாட்டின் தூதுவர் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு


வடமாகாணத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருப்பதால்
பொதுமக்களுடைய வாழ்க்கைக்கும் பொருளாதார விருத்திக்கும் எவ்வாறு பங்கம் விளைவிக்கின்றது என்பது தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவரிடம் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோமஸ் லிட்செர் மற்றும் அவரது குழுவினர், வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு குறித்து வடக்கு முதல்வர் கருத்து வெளியிடுகையில், வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக இதுவரை காலமும் இருந்து வந்ததென்பதையும் நடுவிலே சிங்களக் குடியேற்றங்களை முன்னிறுத்தி வடக்கும் கிழக்கும் தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களின் இடங்களாக இருக்கவில்லை என்ற கருத்தை முன்வைப்பதற்காக,

450 குடும்பங்களை தெற்கிலிருந்து கொண்டுவந்து குடியேற்றி உள்ளார்கள் என்பதையும்,


அங்குள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் அந்தத் தொழிலை பாரம்பரியமாக செய்த விதத்திலே செய்ய முடியாமல் அவர்களைத் தடைசெய்து, தெற்கிலிருந்து வந்தவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளிலே அந்த மீன்பிடித் தொழிலைச் செய்வதற்கு எவ்வாறு அனுசரணைகள் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்றன என்பது பற்றி எடுத்துக்காட்டினேன் என்றார்.

மேலும் வருங்காலத்தில் ஜெனிவா பிரேரணை காரணமாக விசாரணை நடைபெற்றால், அந்த விசாரணையின் போது எவ்வாறான ஒரு சூழலில், இங்கு என்ன நடைபெற்றது என்பவை சம்பந்தமாக சர்வதேச நாடுகள் அறிந்து கொண்டதன் பின், இராணுவம் பற்றிக் குறிப்பிடும் விடயங்களை அவர்கள் கட்டாயமாக கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பது பற்றி சுவிஸ் தூதுவர் எனக்கு சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்..