ஒரு முட்டையிட்டுவிட்டு கொக்கரித்து திரியாமல் ஆமைபோல அரசு செயற்பட வேண்டும்
மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளமை உண்மைக்குப் புறம்பான விடயமாகும். எமது மாகாண சபைக்கு ஊழியர்களினுடைய சம்பளம் உட்பட 1,872 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
எங்களைப் பொறுத்தவரையில் எமக்குக் கிடைக்கின்ற நிதியினைக் கொண்டு மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்கலாம் என்பது தொடர்பாக மட்டுமே சிந்தித்து வருகின்றோம். எமக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவித்துக் கொண்டு நான்காயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் தனது கையில் வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் புழுதியாற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்ற போது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நீர் மாசடைந்துள்ளது.
இங்கே பல இடங்களில் நீரில்லை. அவ்வாறு நீரற்ற நிலையிலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நீரை வழங்குவதற்காக புழுதியாற்றுக் குளம் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இப்பொழுது இங்கு ஏற்பட்டுள்ள வரட்சியால் எம்மைச் சுற்றுப் பலவிதமான பிரச்சினைகள் இடம்பெறுகின்றன.
இந்த நீர் எமது வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை தற்பொழுது உணரக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணத்தில் நீர் இருந்தும் கூட அது மாசடைந்துள்ளது. எனவே நீரைப் பாதுகாத்து, வரையறுத்து மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே நாம் இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்து வருகின்றோம்.
இத்தகைய திட்டங்களினூடாக பசுமை நிறைந்த சோலையாக விரைவில் எமது பிரதேசங்களும் மாறவேண்டுமென்பதே எமது விருப்பமாகும். இப்பொழுதெல்லாம் அரசியலில் கோழிக் கலாசாரமே நடக்கின்றது. அதனை ஆமைக் கலாசாரமாக மாற்றவேண்டுமென்பதே எமது விருப்பமாகும். கோழியைப் பொறுத்தவரையில் ஒரு முட்டையை இட்டுவிட்டால் தான் முட்டையிட்டு விட்டேன் எனக் கொக்கரித்து ஊரையே கூட்டும்.
ஆனால் ஆமையானது நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்ட பின்பும் அமைதியாக இருக்கும். நாங்கள் என்னத்தைச் செய்கின்றோம் என்று எம்மிடம் கேட்கின்றனர். எமது மக்களில் பலர் தனிப்பட்ட முறையில் எம்மிடம் வந்து உதவிகளை வழங்குமாறு கோருகின்றனர். தமக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருமாறும் கேட்கின்றனர்.
இம்மக்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பல நிறுவனங்களிடமும் அமைப்புக்களிடமும் உதவிகளைப் பெற்று வழங்கி வருகின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் வெளியிலே சொல்லுவதில்லை. ஆனால் இதுபோன்ற விடயங்களை வெளியிலே சொல்லவேண்டாம் என்பதே தற்போதைய அரசியல் கலாசாரமாகும்.
இந்த வகையில் இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை வெளியிலே சொல்லக்கூடிய வகையில் தம்பி ஐங்கரநேசனும் அவருடைய அமைச்சின் செயலாளரும் வகுத்து கொடுத்துள்ளனர். எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு வழங்கப்படுகின்ற பணத்திலிருந்து சரியான முறையில் திட்டங்களை வகுத்து மக்களுக்கு திருப்தியான சேவைகளை வழங்குவதற்காகவே நாங்கள் முயற்சித்து வருகின்றோம்.
எமக்கு ஐயாயிரம் கோடி ரூபா உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் என பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரமாகியுள்ளன. இத்தகவல் எனக்கே விசித்திரமாக இருந்தது. இவ்வாறு எமக்கு ஐயாயிரம் கோடி ரூபா தரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் தொடர்பாக நான் எமது அலுவலர்களிடம் கேட்டேன்.
எமக்குத் தரப்பட்டிருப்பது ஆயிரத்து 872 கோடி ரூபா என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். எமது சபைக்குட்பட்ட அலுவலர்களுக்கு வழமையாக வழங்கவேண்டிய சம்பளம் உள்ளிட்ட 80 சதவீதமான பணத்துடன் மேலதிகமாக 20 சதவீதமான பணம் மட்டுமே இதுவரையான காலப்பகுதியில் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இப் பணம் எங்களுடைய கையில் இருக்கின்றது.
இதனைக் கொண்டு உங்களுக்கு வேலைகளைச் செய்துதரவுள்ளோம். ஆனால் ஐயாயிரம் கோடி ரூபா எனத் தெரிவித்துக் கொண்டு 4 ஆயிரம் கோடி ரூபாவை அரசாங்கம் தனது கையில் வைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. இப்பணத்தினை எமக்குத் தந்து நாம் என்னத்தைச் செய்தோம் எனக் கேள்விகளைக் கேட்கின்றார்கள்.
இப்பணத்தை எங்களிடம் தந்து விட்டோம் எனவும் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் எனவும் எம்மிடம் கேள்வி கேட்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையில் எமக்குக் கிடைக்கின்ற நிதியினைக் கொண்டு மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்கலாம் என்பது தொடர்பாக மட்டும் சிந்தித்து வருகின்றோம். இவ்வாறான பிரச்சினைகளை கூறி பெரிதுபடுத்துவதற்கு நாங்கள் விரும்பவில்லை.
எனவே எதிர்காலத்தில் அரசாங்கத்தினை முழுமையாக நம்பியிருக்காது எங்களுடைய மாகாண சபை அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளமுடியும் என்பது தொடர்பாக மக்கள் சிந்திக்கவேண்டும். தற்பொழுது மக்கள் மக்களே ஆளுகின்ற காலம் ஒன்று வந்துள்ளது. அந்தவகையில் நாங்கள் மக்களுடன் இணைந்து உங்களில் ஒருவராகவே இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
எனவே மக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும். நாங்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருக்கின்றோம். அந்த வகையில் நாம் யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்தப் பணியில் எங்களுடைய ஊர்களில் நாங்கள் எவ்வாறான பணிகளைச் செய்யமுடியுமோ அவற்றைச் செய்துகொண்டு அரசாங்கம் தருகின்ற உதவிகளையும் பெற்று எமக்குரிய நன்மைகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது அவாவாகும்.
அந்த வகையில் எதிர்காலத்தில் எமக்கு நல்லதொரு வாழ்க்கை அமையும். அதற்கு யார் எந்ததெந்த வழிகளில் தடைகளை விதித்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி முன்னேறிச் செல்வோம் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன், வடமாகாண அமைச்சர்களான த.குருகுலராஜா, பொ. ஐங்கரநேசன் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்களான சு. பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோரும் அரசாங்க அதிகாரிக-ளும் பொது மக்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.