ஐ நா விசாரணையை இனி பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்ளும்?
உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ள மூன்று வல்லுநர்களின் பெயர்களை ஐ நா அறிவித்துள்ளது.
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், ஃபின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அத்திசாரி,
நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்த மூன்று வல்லுநர்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதன் ஆணையர் நவி பிள்ளை இந்த அறிவிப்பை நேற்று, புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
இந்த மூவரும், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில ஆண்டுகளில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள ஐ நா மனித உரிமை குழுவுக்கு, ஆலோசனை வழங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும் உடன்பட்டுள்ளனர் என்று ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் என்று ஏற்கெனவே ஐ நா அறிவித்துள்ளது.இந்த மூன்று நிபுணர்களும் முக்கியமானதும் சவால்கள் நிறைந்ததுமான விசாரணைக்கு உதவிபுரிவதற்கே இணக்கம் தெரிவித்துள்ளமை குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.
அன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் பூரண ஒத்துழைப்பும் வழங்குவதுடன் உண்மையை கண்டறிவதற்கு உதவ வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
12 பெயரை உள்ளடக்கிய இந்த ஐ.நா.வின் விசாரணைக்குழுவானது அடுத்த மாதம் நடுப்பகுதியில் தனது விசாரணையினை ஆரம்பிக்கவுள்ளது. இந்த குழுவானது விசாரணை செயற்பாடுக்கான ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளை தற்போது ஈடுபட்டு வருகின்றது.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த விசாரணைக்குழுவின் செயற்பாட்டு காலப்பகுதியாகும். இந்த விசாரணைக் குழுவானது வடஅமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு விஜயங்களை மேற் கொண்டு சாட்சியங்களை திரட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசு மற்றும் மக்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், தடைகளை மீறி இந்த விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணைய செய்திக் குறிப்பு கூறுகிறது.
ஐ.நா விசாரணைக்கான தீர்மானத்தில் கடுமையான எதிர்ப்பினை பலவழிகளிலும் பாகிஸ்தானே முன்னெடுத்திருந்தது இவ்வாறான சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரை சேர்த்துள்ளதன் மூலம் நவநீதம்பிள்ளையின் சாதுரியத்தன்மை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு இதுதொடர்பில் எதிர்காலத்தில் பாகிஸ்த்தானும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.