Breaking News

ஓட்டத்தில் சாதனை படைத்த 8 மாத கர்ப்பிணி


அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ
800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு வயது மட்டுமல்ல கர்ப்பமும் ஒரு தடையே அல்ல என்பதை இவர் நிரூபித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ, தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதைவிட, பல்வேறு சர்வதேச ஓட்டப் பந்தய போட்டிகளிலும் 2012 இல் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்காவின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், அதற்குள் குழந்தையொன்றை பெற்றெடுக்க முடிவெடுத்து, கருவுற்றார். இந்நிலையில், கடந்த 26ஆம் திகதி கலிபோர்னியா நகரில் நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கால கர்ப்பிணியாக பங்கேற்று ஓடிய இவர் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இதே தூரத்தை 1:57.34 கடந்தது இவரது அதிவேக சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் கலிபோர்னியாவில் இடம்பெற்ற ஓட்டப் பந்தயத்தில் 35 வினாடிகள் தாமதமாக 2:32.13 நேரத்தில் லிசியா மொண்ட்டானோ கடந்துள்ளார்.

28 வயதாகும் இவர் வெற்றிக் கோட்டை கடந்ததும் கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி, கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.