புலிகளைப் புகழ்ந்த சில சிங்கள(இந்திய) தளபதிகள் -பாகம் 3
காதில் கேட்கிறது..அலைகளைக் காண முடியவில்லை..அவற்றைக் காண மனம் ஏங்கியது.இரண்டு வருடங்களாக சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளாக இந்திய அமைதிப் படையின் காங்கேசன்துறை முகாமில்
அவர்கள் இருந்தார்கள்..
1990 மார்ச் மாதத்தில் ஓர் நாள் காலையில்,அந்த இராணுவ மேஜர் வந்தான்.உங்களுக்கும்,எங்களுக்கும் இன்று விடுதலை உங்கள் மூட்டை முடிச்சுகளோடு புறப்படத் தயாராகுங்கள்..”-என்றார் அவர்.
எங்களிடம் என்ன மூட்டை முடிச்சுகள் இருந்தன? என்பது யாருக்கும் தெரியாது..ஒரு சட்டை,ஒரு ஜட்டி,இவற்றோடு ஒரு சிலரிடம் மேலதிகமாக ஒரு சாரம்(கைலி) இதைத் தவிர எதை விட்டார்கள் உள்ளே?
பற்பசை, பிரஷ்,பாவித்த சோப்பு துண்டு என்று வேண்டுமானால் உண்டு..தங்களுக்கும் விடுதலை என்று அந்த மேஜர் சொன்னாரே..அது எத்தனை உண்மையான வசனம்? சிரிப்பு வந்தது எனக்கு. எமக்கு-எம்மை பார்க்க வரும்போது ஊர் நடப்புகளைப் பற்றிப் பேச எமது உறவினர்களிடம் அவகாசம் இல்லாவிடினும் ,எமக்கு தினப் பத்திரிகையோ,செய்தி கேட்க கூடிய வானொலியோ அனுமதிக்கப் படாமல் இருந்த போதும், நாம் அந்த முகாமில் -எமது ஈழம் பற்றிய செய்திகளை தினமும் ஒன்று விடாமல் அறிந்து கொண்டுதான் இருந்தோம். அதுதான் உண்மை..
அதிலும் வன்னிக் காடுகளில்,இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் ஏற்பட்ட சண்டைகள் பற்றி எமக்கு விலா வாரியாக தெரிந்து கொண்டுதான் இருந்தது.தலைவரின் ஒவ்வொரு நகர்வும் எமக்கு தெரிந்திருந்தது.
ஆனால்,அவர்களுக்கு அவைகள் ஒன்றும் தெரியாது..எமக்கு எல்லாச் செய்திகளும் கிடைக்கின்றன என்பது அவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது. உண்மையாகச் சொல்வதென்றால் எமக்கு விடுதலை வந்து விட்டது என்று சொல்வதை விட இந்தியப் படைக்கு விடுதலை வந்து விட்டது என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாய் இருக்கும்.
அத்தனை தூரம் புலிகளிடம் அப்போது இந்திய அமைதிப் படை அடி வாங்கிக் கொண்டிருந்தது…
சரி, இனி எம் விடுதலை பற்றி பார்ப்போம். மதியத்துக்கு முன்னர் எமது விடுதலைப் பத்திரங்களை கொண்டுவந்தார் அந்த மேஜர்.. இதில் கையொப்பம் இடுங்கள்”..என்று சொன்னார்..பார்த்தோம்..எல்லாப் பத்திரங்களும் இந்தியில் இருந்தன..
“இவை என்ன?” என்று கேட்டோம்..இவைதான் உங்கள் ரிலீஸ் பத்திரங்கள்”-என்றார் அவர்.
இந்தி எங்களுக்கு புரியாது “..என்றோம்
இந்தியில்தான் அவை உள்ளன..நீங்கள் இதில் கையொப்பம் இடாவிட்டால் உங்களுக்கு விடுதலை இல்லை” என்றார் அவர் சிறிது கடுப்புடன்..
விடுதலைக்காக எமது சுயத்தை இழக்க நாங்கள் தயாரில்லை.எமக்கான விடுதலை உண்மை என்றால். எமக்கு புரியும் மொழியில்-தமிழில் அவைகளை தாருங்கள்,அல்லது சர்வதேச மொழியான ஆங்கிலத்தில் தாருங்கள்” என்றோம்..
“சரி நீங்கள் விடுதலை வேண்டாம் என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும்?” என்று சொல்லிவிட்டுப் போனார் அவர்.
சில மணி நேரத்தில் திரும்பி வந்தார். மீண்டும் கையொப்பம் இடுங்கள் என்றார்.முடியாது என்றோம்..
சில மணி நேரத்தில் எங்கள் விடுதலைப் பத்திரங்கள் அத்தனையும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு வந்தன..
கையொப்பம் இடும்போது அந்த மேஜர் என் காதுக்கு அருகில் இப்படி சொன்னார்.
“டாக்டர்..புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று படித்திருக்கிறேன்..நேரில் இப்போதுதான் பார்க்கிறேன்”-என்றார்…
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன்..நான் மட்டுமல்ல எல்லோரும்தான். அதன்பின்னர் சிறிது நேரம் தோழமையுடன் உரையாடினார் அந்த மேஜர்..
புலிகள் சண்டையில் திறமை சாலிகள்..என்பது இந்த இரு வருடங்களில் நாம் அறிந்தது..அது மட்டுமல்ல..நாங்கள் இங்கிருந்து போக முக்கிய காரணம்..புலிகளுக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவு உண்டு என்பதால்தான்..
யாரும் புலிகளைக் காட்டிக் கொடுக்க விரும்புவதில்லை..அதுதான் நாங்கள் பின்வாங்க முக்கிய காரணம்”
விடுதலைப் பத்திரங்களில் கையொப்பம் இட்ட பின்னர் அவர் கூறிய வார்த்தைகள் இவை!
மு.வே.யோகேஸ்வரன்
முன்னைய பதிவுகள்