Breaking News

பலத்த மழையால் பயங்கர விபத்து 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 70 பேர் கதி என்ன?



சென்னையின் புறநகர் பகுதியான மவுலிவாக்கத்தில்,
போரூர் சந்திப்பு அருகே புதிதாக தலா 11 மாடிகளை கொண்ட பிரமாண்டமான இரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.

கட்டிட தொழிலாளர்கள்
போரூர்–குன்றத்தூர் சாலையில் இருந்து 100 அடி தொலைவில் அருகருகே இந்த இரு கட்டிடங்களும் கட்டப்பட்டு வந்தன. இரு கட்டிட பணிகளும் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்டு உள்புற வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்த இரு கட்டிடங்களின் கட்டுமான பணியில் சென்னை, சேலம் மற்றும் ஆந்திரா, ஒடிசா,  பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 200 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த இரு கட்டிடங்களின் அடித்தளத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.






இடி–மின்னலுடன் மழை


நேற்றும் வழக்கம் போல் இரு கட்டிடங்களிலும் வேலை நடைபெற்றது. மேலும், நேற்று தொழிலாளர்களுக்கு சம்பள நாள் ஆகும். இதனால் சம்பளம் வாங்குவதற்காக கணிசமான தொழிலாளர்கள் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் கூடி இருந்தனர். மற்றவர்கள் இன்னொரு கட்டிடத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. போரூர் பகுதியில் பலத்த காற்றுடனும், இடி–மின்னலுடனும் மழை கொட்டியது.

  11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

சம்பளம் வாங்குவதற்காக தொழிலாளர்கள் கூடி நின்ற அடுக்குமாடி கட்டிடம் மாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சீட்டுக்கட்டு போல் சரிந்து கட்டிடம் தரைமட்டம் ஆனது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். 

கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து பக்கத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். அவர்கள் பயத்தில் வெளியே ஓடி வந்தனர். அப்போது மழையின் வேகம் சற்று குறைந்து இருந்தது.

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். ஆனால் பக்கத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடமும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் அவர்கள் அருகில் செல்ல தயங்கினார்கள்.

விபத்து நடந்ததும் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மீட்புப்பணி

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 12–க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். 20–க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளும் வந்து சேர்ந்தன. குறுகலான தெரு என்பதால் தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்சுகளும் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

தீயணைப்பு படையினர், கமாண்டோ படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கேஸ் வெல்டிங் கருவி மூலம் கம்பிகளை வெட்டி கொஞ்சம் கொஞ்சமாக இடிபாடுகளை அகற்றினார்கள். 

சிறிது நேரத்தில் அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மருத்துவ குழுவினரும் வந்து சேர்ந்தார்கள். அவசர கால மீட்புப்பணியில் பயிற்சி பெற்ற செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 40 பேரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 



அமைச்சர் டி.கே.எம்.சின்னையா

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்கள். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டார்.

அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடிவிட்டனர். பாதுகாப்பு கருதி அவர்கள் யாரையும் போலீசார் விபத்து நடந்த இடத்தின் அருகே அனுமதிக்கவில்லை. அந்த பகுதியில் போக்குவரத்தையும் போலீசார் திருப்பி விட்டனர்.

உடல்கள் மீட்பு

சிறிது நேரத்தில் இருட்டி விட்டதால், விபத்து நடந்த இடத்தில் ராட்சத மின் விளக்கு கள் பொருத்தப்பட்டு மீட்பு வேலைகள் நடைபெற்றன.



இடிபாடுகளுக்கு அடியில் இருந்து முதலில் மருதுபாண்டியன் (வயது 32) என்பவரது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. பின்னர் சிறிது  நேரம் கழித்து சங்கர் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. இருவரின் உடல்களும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

மேலும் 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.


60 பேர் கதி என்ன?

மீட்புப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பின் பகுதியில் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒருவர் செல்போனில் பேசினார். தன்னுடன் 5 பேர் இருப்பதாகவும், இருட்டாகவும் மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் கூறினார். உடனே உள்ளே சிக்கிக் கொண்ட மற்றொருவரின் செல்போனுக்கு வெளியே இருந்து தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் பலன் இல்லை.

இடிபாடுகளில்  70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவர்களை பத்திரமாக மீட்க மீட்புக்குழுவினர் போராடி வருகிறார்கள். 



பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி இரவு விடிய விடிய நடைபெற்றது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப்பணிகள் முடிந்த பின்னர்தான் எத்தனை பேர் பலி ஆனார்கள் என்ற முழுவிவரம் தெரியவரும்.

புகைப்பட உதவி -முரளிகிருட்டிணன் சின்னத்துரை (TNTV SBNN News services)