மோடி சொல்வதையெல்லாம் செய்ய முடியாது – இலங்கை அரசு மிரட்டல்!?
“தேசியப் பிரச்சினை என்று வரும்போது, இப்படித்தான்
நடந்து கொள்ள வேண்டும் என்று யாரும் அரசை வற்புறுத்த முடியாது. அது பற்றித் தீர்மானிக்கும் உரிமை இலங்கை அரசுக்கு மட்டுமே உண்டு.” – இவ்வாறு கூறியிருக்கின்றார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஷ்ட அமைச்சர்களுள் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வற்புறுத்துகின்றார் எனக் கூறப்படுவது குறித்து அவரிடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்தில் இலங்கை மீது இந்தியா பலவந்தமாகவே 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைத் திணித்தது. அதனால்தான் அதை நடைமுறைப்படுத்த முயன்றபோது அதில் பிரச்சினைகள் எழுந்தன என்றார் அவர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், “இந்தியா எங்களின் மிக நெருக்கமான பங்காளி.
எனவே பிராந்திய அமைதிக்காக இந்தியா முன்வைக்கும் யோசனைகளை செவிமடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்படித்தான் செயற்பட வேண்டும் என்று எங்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது.
உள்நாட்டுக் கொள்கை விவகாரங்களில் இந்தியா தலையிடவே முடியாது” – என்றும் சொன்னார். “நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உகந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். ஆகவே எல்லாக் கட்சிகளும் அந்தக் குழுவில் கலந்துரையாடுவதற்கு முன்வர வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.