Breaking News

தனி நாடாக தமிழீழம் - பார்த்தீபன்:-


ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன. அந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த தேசங்கள் இன்னமும் தனித் தனித் தேசமாகவே காணப்படுகின்றன என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்த இரு தேசங்களும் நிலத்தாலும் நிலத்தின் குணத்தாலும் இனத்தாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. வடக்கில் பனைகளும் தெற்கில் தென்னைகளும் மாத்திரம் இந்தப் பிரிவை உணர்த்தவில்லை. இந்த நாட்டின் மக்களின் உணர்வுகளும் இரண்டாகவே பிரிந்திருக்கின்றன. 

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதுதான் இந்த தீவின் அறுபதாண்டுகாலப் பிரச்சினை. ஸ்ரீலங்காவில் நாங்கள் இரண்டாம் தரப் பிரசைகள்கூட இல்லை. ஏனெ;ல் இரண்டாம் பிரசை  என்றால் இரண்டாவது இடமாவது உண்டு. இங்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. எந்த உரிமையும் எங்களுக்கு இல்லை. எங்களை அழித்து ஒழிப்பதைத் தவிர சிங்கள அரசுக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது. எங்களிடம் இருக்கும் சின்னச் சின்ன உரிமைகளைக்கூட மெல்ல மெல்ல சிங்கள அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. 

முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தம் ஈழ மக்களைப் பொறுத்தவரையில் அது ஒரு இனப்படுகெலை யுத்தம். மிகக் கொடிய – மனித குலத்திற்கு விரோதமான போர்க்குற்றங்கள் நடந்த மனித உரிமைகள் மீறப்பட்ட யுத்தம். எங்கள் போராட்டத்தை முறியடித்த கொடிய யுத்தம். வன்னி மக்களின் வாழ்க்கையை முற்றுமுழுதாக சிதறடித்த யுத்தம். ஆனால் சிங்கள மக்களுக்கு இது வீர யுத்தம். தமிழ் இனத்திற்கு எதிரான போரில் வீரப் படைகள் வென்ற யுத்தம். சிங்கள மக்கள் யுத்த வெற்றியை கொண்டாடலாம். ஆனால் தமிழ் மக்கள் இந்தக் கொடிய போரில் கொல்லப்பட்ட மக்களைக்;கூட நினைவுகூற முடியாது என்பது இதனால்தானே? 

சிங்கள மக்கள் இந்த நாட்டில் எங்கும் குடியமர்த்தப்படலாம். தமிழ் மக்கள் சொந்த நிலத்திலே வாழ முடியாது. தமிழர் நிலத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டும் பலவந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவது ஏன்? இதற்குப் பெயர் என்ன? வெசாக் அலங்காரங்களைக் பார்க்க தெற்கிலிருந்து வடக்கு கிழக்குக்கு மக்கள் வருகிறார்கள். யாழ்ப்பாணத்திலும் புத்தர் என்று இராணுவத்தினர் எழுதி மக்களை வரவேற்கிறார்கள். ஆனால் மாத்தறையில் தங்கியிருந்த வடக்கு கிழக்குப் பிரசைகள் இருபதுபேர் கைது செய்யப்பட்டு சிலர் பூசாவில் அடைக்கப்படுகிறார்கள். 

அது அவர்களின் நாடில்லை என்பதனாலும் அவர்கள் வேற்று நாட்டவர்கள் என்பதனாலும் அவர்களால் சிங்கள தேசத்திற்கு பாதுகாப்புப் பிரச்சினை என்பதனாலுமே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கம் தன் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஈழ மக்களை அந்நியப் பிரசைகளாகவே காலம் காலமாக நடத்தி வருகிறது என்பது மாத்தறையிலும் அம்பலமாகியிருக்கிறது. இந்த நிகழ்வு தெற்கை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட்டதையும் தெற்கில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும் நினைவுபடுத்துகிறது.  

கொல்லப்பட்ட தமிழ் மக்களை பயங்கரவாதிகள் என்று நினைவுகூற இடமளிக்காமல் சிங்கள இராணுவத்தின் யுத்த வெற்றியை வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைத்த சமாதானத்தின் வெற்றி என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாய்கூசாமல் சொல்லுகிறார். இப்படிச் சொல்லிக் கொண்டே தமிழிலில் பேசிக் கொண்டே தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதில் மகிந்த ராஜபக்ச வல்லவர். கொல்லப்பட்ட மக்களை நினைவுகூற அனுமதிக்காத சிங்கள அரசிடம் வேறு எதை எதிர்பார்ப்பது?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இறந்த மக்களுக்காக மாணவர்கள் தீபம் ஏற்றுவார்கள் என்பதற்காக பல்கலைக்கழகத்தை மூடுகிறார்கள். அதே பல்கலைக்கழகத்தில் வெசாக் தினத்திற்காக தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தெற்கில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் திறந்து கல்விச் செயற்பாடுகள் நடக்கின்றன. இன்றைய தலைமுறைமீதான இதைவிட கொடிய பாரபட்சம் என்னவாக இருக்கும்? 
தமிழ் தாயகத்தில் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மாணவர்கள் உள் நுழைய முடியாத அளவில் தடை போடப்பட்டிருக்கிறது. 

இங்கு இராண்டாம் தர பிரசை மாணவர்கள் என்ற இடம் கூட தமிழ் மாணவர்களுக்கு இல்லையே? யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தால் மாணவர்களை படுகொலை செய்வோம் என்று சிங்கள இராணுவம் எச்சரிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவம் நுழைய நேரிடும் என்று மிரட்டுகிறது. ஆனால் உங்கள் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்பதை உணர்த்தி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அடக்குமுறை எழுச்சியைத்தான் உருவாக்கும் என்பதை சிங்கள இராணுவத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் உணர்த்தியுள்ளனர்.  

ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூறும் வீரமறவர்கள் தினத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தடைவிதிக்கவில்லையே? தெற்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களும் மக்களும் அந்த நாளை நினைவுகூறுகறார்கள்தானே? தெற்குப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கொல்லப்பட்ட ஜே.வி.பியனரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தத் தேவையில்லை என்று கூறும் ஜே.வி.பி வீரமறவர்கள் தினத்தை கொண்டாடாமல் இருக்குமா? ஸ்ரீலங்கா அரசாங்கத்தை ஆளும் கட்சியைப் போலவே ஜே.வி.பியும் இப்படித்தான் பாரபட்சம் காட்டி உரிமை மறுக்கிறது.  

கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தவிடாமல வடக்கில் மிகப் பெரும்முற்றுகையை இலங்கை இராணுவம் மேற்கொண்டது ஏன் என்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராசா இன்று கேள்வி எழுப்பினார். அவரை பேசவிடாமல் ஆளும் தரப்பு இனவாதிகள் கூச்சல் போட்டு குழப்பினார்கள். தமிழ் மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுவதுபோல கொல்லப்பட்ட அவர்களின் உறவுகளை நினைவுகூறும் உரிமை மறுக்கப்படுவதுபோல ஸ்ரீலங்கா பாராளுமன்றத்திலும் அவரை பேசவிடாமல் இனவாதிகள் கூச்சலால் முற்றுகையிட்டார்கள். இங்கும் இரண்டாம் பிரசைகளுக்னா இடம்கூட இல்லையே?

மாவை சேனாதிராசாவுக்கு அருகில் இருக்கும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அநுரகுமரா திஸ்ஸநாயக்க, பேச முடியாத இனவாத கூச்சல் முற்றுகைக்குள் பேசும் மாவை சேனாதிராசாவைப் பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டிருந்தார். தமிழரின் நிலமையை நினைத்து சிரித்திருப்பார்போல விமல் வீரவன்சவின் தம்பி அநுரகுமார. அவர்களுக்குள் ஆயிரம் அதிகாரப் போட்டிகள் இருந்தாலும் தமிழ் மக்கள் விடயத்தில் அநுரகுமாரவும் விமல் வீரவன்சவும் ராஜபக்சவும் ஒன்றுதான். அனைவரும் உரிமை மறுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளே.

தெற்கில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றி அணிவகுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். வடக்கு மாகாண சபைப் பிரதிநிதியான அனந்தி கீரிமலைக்குச் சென்றபோது தடுக்கப்படுகிறார். வடக்கில் உள்ள தமிழ் மக்களின் தலைவர்கள் தங்கள் சொந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்படுகிறார்கள். கூட்;டமைப்பின் அலுவலகம் முற்றுகையிடப்படுகிறது. தெற்கில் சிங்களத் தலைவர்கள் யுத்த வெற்றி விழாக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கிலோ தமிழ் தலைவர்கள் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். 

தெற்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது. வடக்கு யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகளில் தோய்ந்திருக்கிறது. தெற்கில் மாத்தறை நகரம் யுத்த வெற்றி வேட்டுக்களால் அதிர்கிறது. வடக்கில் வன்னி போரில் இறந்துபோன மக்களின் உறவுகளின் வாய்விட்டு அழ முடியாக் குரலில் அமுங்கியிருக்கிறது. யுத்த வெற்றி சாகசங்கள் தெற்கில் நிகழ்த்தப்படுகின்றன. வடக்கில் மக்கள் தங்கள் உறவுகளை நினைவுகூற இடமற்று ஆலயங்களுக்கு அலைகிறார்கள். தெற்கில் ராஜபக்சவுக்கு இராணுவ மரியாதை செய்து சிங்கள மக்களுக்கு சாகசம் காட்டும் இராணுவம் வடக்கில் ஆலயங்களையும் நகரங்களையும் தெருக்களையும் வீடுகளைளயும் ஈழ மக்களையும் சுற்றி வளைக்கிறது. 

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக தீபங்கள் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. தீபங்கள் ஏற்றி மக்கள் நினைகூறப்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யலாம் என்று ஸ்ரீலங்கா அரசு அறிவித்தது. சிங்கள இராணுவம் தீபங்களைக் கண்டால் தனது சப்பாத்துக்கால்களால் மிதித்து அணைக்கிறது. வடக்கு மாகாண சபையில் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஏற்றிய தீபத்தை அவ்வாறே மிதித்தணைத்தது. ஒரு தீபத்தைக்கூட தமிழ் மக்களுக்கு ஏற்ற உரிமையில்லை என்று சொல்கிறது ஸ்ரீலங்கா அரசு. 

ஆனால் வடக்கு கிழக்குப் பகுதியில் புத்தர் சிலைகளை வைத்து இராணுவம் வெசாக் தீபங்களை ஏற்றுகிறது. தமிழ் மக்களின் ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. அந்த ஆலயங்களை எல்லாம் சுற்றி வளைத்து துப்பாக்கி ஏந்திய இராணுவம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கு என்ற தமிழர் மண்ணில் புத்தருக்கு தீபங்களை ஏற்றி வெசாக் கொண்hட்டங்களை செய்யும் இராணுவம் அந்த மண்ணின் மக்களுக்கு ஒரு தீபத்தை ஏற்ற அனுமதிக்காது துப்பாக்கியுடன் நிற்கிறது. இது மிகப் பெரிய பாரபட்சமும் உரிமை மறுப்புமல்லவா?

இங்கு இலங்கை அரசால் காட்டப்படும் பாராபட்சம்தான் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பும் அடிமைப்படுத்தலும். ஒரு  இனத்தின் அடிப்படை உரிமைகளைக்கூட இராணுவ வழிமுறைகளிலும் அரசியல் வழிமுறைகளிலும் உறிஞ்சி எடுக்கின்ற பேரினவாதப் போக்கே இது. இலங்கை அரசு தனது இயந்திரமான இராணுவத்தை வைத்து அறிவித்து சட்டங்களை உருவாக்கி மனித உரிமைகளை மதிக்காமல் இதைச் செய்துகொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்தில் ஈழத்தில் ஒரு போர் நடந்தது. அக்காலம் ஒரு போர்க்கலாமாகவே இருந்தது. அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த யுத்தம் கத்தியின்றி இரத்தம் இன்றி கண்ணீருக்கும் வெற்றிக் கொண்டாட்டத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது. 

அணுகுமுறைகளால் பாரபட்சங்களால் வடகிழக்கும் தெற்கும் பிரித்து பார்க்கப்படுவது அரசால்தான். பிரிவினையை ஏற்படுத்துவதே சிங்கள அரசுதான். இந்தப் பாராசபட்சங்களும் பிரச்சினைகளும் தான் வடகிழக்கையும் தெற்கையும் இரண்டாக பிரிக்கிறது. இரண்டு தேசங்கள் ஆக்குகின்றன. சிங்கள தேசம் வேறு தமிழ் தேசம் வேறு என்பதையும் சிங்கள மக்களுக்கு உள்ள உரிமை தமிழ் மக்களுக்கு இல்லை என்று காட்டுவதுதான் இலங்கைத் தீவில் வடக்கு கிழக்குப் பகுதி தமிழீழம் என்ற தனித் தேசமாகவே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தமிழ் மக்களுக்கு அவர்களின் சுய நிர்ணய உரிமை தேவை என்பதை நிர்பந்திக்கிறது. 

இலங்கை அரசாங்கம் காட்டி வந்த இந்த பராட்சம் இன்று சிங்கள மக்களின் போக்குகளாக மாறிவிட்டன. சிங்களவர்களை சந்திக்கும் எந்த இடத்திலும் சமத்துவம் இருப்பதில்லை. அவர்கள் தமிழர்களுக்கான இடத்தை கொடுக்கும் மனநிலை இல்லாத இடத்திற்குச் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அணுகுமுறைகளினால் ஏற்படும் அநீதிதான் பிரிந்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கிவிட்டன. எங்களுக்கான உரிமைகளை தட்டிக் கேட்கும் நிலமையை ஏற்படுத்துகின்றன. இன அழிப்பை செய்யும் அணுகுமுறையான இந்தப் பாரபட்ச உரிமை மறுப்பு அரசியலுக்கு இன நல்லிணக்கம் என்று ராஜபக்ச பெயர் வைத்திருக்கிறார்;. 

நிறைவாக சுருக்கமாகவும் உறுதியாகவும் ஒன்றைக் குறிப்பிட முடியும். கடந்த யுத்த வெற்றி விழாவும் - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளும் இந்தத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன அவை ஸ்ரீலங்காவும் ஈழமும் என்பதை தெளிவாக காட்டியுள்ளன. ஸ்ரீலங்கா அரசு விடுதலைப் புலிகளை அழித்து ஒட்டுமொத்த நிலபரப்பையும் கைப்பற்றி ஆக்கிரமித்திருந்தபோதும் இன்னமும் தனி நாடாகவே தமிழீழம் இருக்கிறது. நீங்கள் வேறு நாடு நாங்கள் வேறு நாடு என்பதை தமிழர்கள் சொல்லவில்லை. ஸ்ரீலங்காவே எமக்குச் சொல்கிறது.