டென்மார்க்கில் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்
டென்மார்க்கின் கொல்பேக் நகரத்தில் மே-18 முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
Holbæk நகரத்ததில் நடைபெற்ற Carnival நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டனர்.
உலகில், அநாகரீகமாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் மனித நேயம் அறவே அற்ற, இரத்த வெறிபிடித்த, கொடிய சிறீலங்கா அரசைக் கண்டிக்கத் தவறிய, ஐ.நா.வையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
மானிட வரலாற்றில் இப்படி ஒரு இனப்படுகொலை இதுவரை நிகழ்ந்ததில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கதென, தங்களின் ஆதங்கங்களை முன்வைத்தார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி தமிழீழ மண்ணில் ஒரு இனவழிப்பை சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றியது.
தொடர்த்தும் எமது தாயக பூமியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களையும் நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாசார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிறுவியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றது.
இதைத் தடுப்பதற்காக டென்மார்க் அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த நிகழ்வில் டெனிஸ் மக்களுக்கு டெனிஸ் மொழியில் திசைகள் இனளயோர் அமைப்பினர்கள் விளக்கம் கொடுக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி தமிழீழ மக்கள் மீது நடத்தப்படுக் கொண்டிருக்கின்ற இனவழிப்பை விளங்கப்படுத்தியுள்ளார்கள்.