Breaking News

புவியின் உட்புற ஓசைகள்

இன்றைய மனிதகுலம் விண்வெளியையும் தாண்டி பல்லாயிரம் கோடி மைல்களையும் கடந்து சென்று புதிய புதிய நட்சத்திர தொகுதிகளையும் பல புதிய கோள்களையும்
கண்டறிந்து விட்டுள்ளது.மேலும் புதிய கோள்களைக் கண்டறிவதிலும் அங்கு குடியேற்றங்களை மேற்கொள்வதிலும் கூட மனிதகுலம் இன்று ஆர்வம் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், மனிதனின் இருப்பிடமான பூமியின் பல்வேறு அம்சங்கள் இன்னமும் மனிதனுக்கு புரியாத புதிராகவே விளங்குகின்றன.
ஆழ் சமுத்திரங்களில் மனிதன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவிட்ட போதிலும், மேலும் பல வியத்தகு அம்சங்கள் இன்னமும் சமுத்திரங்களுள் ஆழ்ந்து கிடக்கின்றன. அதேபோன்று பூமியின் மையப்பகுதியில் பொதிந்துகிடக்கும் பல்வேறு அம்சங்கள் இன்னமும் மனிதனால் முழுமையாக அறியப்படாததாகவே காணப்படுகின்றன.
புவி மேற்பரப்பிலிருந்து புவியின் கடினமான பகுதி 30 - 50 கிலோமீற்றர்களவரை என கணிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், விஞ்ஞானிகள் புவியின் மையப்பகுதியில் காணப்படும் இரகசியங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட வண்ணமேயுள்ளனர்.
ஆட்டிக் வட்டத்தின் மேற்திசையில், பின்லாந்தின் வடகிழக்கேயுள்ள கோலா குடாவில் அமைக்கப்பட்ட துளையே மனிதனால் புவியில் அமைக்கப்பட்ட மிக ஆழமான துளையாக காணப்படுகின்றது. 13 கிலோமீற்றர்கள் ஆழமான இந்த துளை, 1970 களில் சோவியத் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இத்த திட்டத்திற்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதன் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதோடு, அமைக்கப்பட்ட துளையின் வாய்ப்பரப்பு இரும்புத் தகடுகளால் மூடி காப்பிடப்பட்டது.
மனிதனால் புவிமீது அமைக்கப்பட்ட இரண்டாவது துளை தெற்கு ஜெர்மனியில் அமைக்கப்பட்டது. இதன் ஆழம் 9.1 கிலோமீற்றர்களாகும். 300 மில்லியன் வருடங்களின் முன்னர் இரு பெரும் நிலப்பரப்புகள் ஒண்றிணைந்து Pangaea பெரும்டகண்டம் உருவாக்கம் பெற்றது. அவ்விரு நிலப்பரப்புக்களும் ஒண்றிணைந்த பகுதி தெற்கு ஜெர்மனியில் அமையப்பெற்றுள்ளதன் காரணமாகவே, இவ்விடம் துளையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. 120 விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களின் துணையுடன் 1990 இல் இத்துளையிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. புவியின் ஆழத்தில், கொதிநிலையிலுள்ள ஐதரசன் (boilinghydrogen) பல்வேறு வகையான பாறைகள் மற்றும் கனிமங்கள் போன்றன இத்துளையிடும் கருவியின் துணையுடன் கண்டறியப்பட்டன.
தெற்கு ஜெர்மனியில் முன்னெடுக்கப்பட்ட இந்த புவி மேற்பரப்பை துளையிடும் திட்டம், அதற்கான நிதியுதவி நிறுத்தப்பட்ட நிலையில், துரதிஷ்ட வசமாக நிறுக்தப்பட்டது. இருப்பினும், அத்துளை இன்றும் விஞ்ஞானிகளுக்கும் புவியியலாளர்களுக்கும் பெறுமதிமிக்க பல்வோறு ஆய்வுப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
ஜெர்மனியின் புவியியல் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் ஓவியரும் ஆய்வாளருமாகியLotte Geeven என்பவர் புவியின் ஆழத்திலிருந்து இத்துளையினூடு தொடர்ச்சியாக நுண்ணொலிகள் வெளிவருவதை மிக நுண்ணிய ஒலிவாங்கிகளின் உதவியுடன் கண்டறிந்தார். அவ் நுண்ணொலிகள் தொடர்பாக அல் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வினூடாக, புவியின் உட்பகுதியில் ஏற்படும் பாறை வெடிப்புக்கள், புவியோடுகளின் உராய்வுகள் போன்றவற்றின் காரணமாகவே இவ்வொலிகள் எழுகின்றன எனக் கண்டறிந்தார்.
கலிபோனியாவைச் சேர்ந்த மற்றொரு ஓவியரான Doug Aitken என்பவரும் புவியின் உட்பகுதியிலிருந்து வெளிவரும் ஒலிகளை பதிவுசெய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். மிக நுண்ணிய ஒலிகளைப் பதிவுசெய்யக்கூடிய ஒலிவாங்கிகளை அவர் வசிக்கும் வீட்டின் சுவர்களுக்குள் பதித்து அவ்வொலிவாங்கிகளின் துணையுடன் புவியோடுகளின் அசைவுகளால் ஏற்படும் ஒலிகளை பதிவுசெய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
புவியின் உட்புறத்தில் உருவாகும் ஒலிகளைப் பதிவு செய்வதன் முலம், தற்போது பெருமளவில் பயன்கள் பெறப்படுவதில்லை என்ற போதிலும், எதிர்காலத்தில், இவ்வொலிகளின் துணைகொண்டு நிச்சயமாக பூமியதிர்வுகள், எரிமலை வெடிப்புக்கள் போன்றவற்றை பெரும்பாலும் துல்லியமாக எதிர்வு கூற முடியும் என்று நம்பப்படுகின்றது. இதற்கான ஆய்வுப்பணிகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.