யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு தமிழ் இனவழிப்பு நாள்
ஐந்தாம் ஆண்டு தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் முடிந்திருக்கலாம்
,ஆனால் எமது போராட்டம் முடியவில்லை - யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2014.
ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய தமிழின அழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கோட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தன.
சரியாக பிற்பகல் 16:15 மணியளவில் பேரணி நிகழ்வுத்திடலை அடைய, தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பித்தன. நிகழ்வின் பொதுச்சுடரை சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பு -பிறேமன் ஐச் சேர்ந்த திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை , யேர்மனிய இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஏற்றிவைத்தார். பொது ஈகைச் சுடரினை தமிழீழ மண்ணிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரரின் சகோதரி ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து , வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் , இனவழிப்பில் சாவைத் தழுவிய தமிழீழ மக்களிற்குமான மலர், சுடர் வணக்கம் நடைபெற்றது.
தொடர்ந்து சிற்றுரைகள் , பாடல்கள், தாயக எம் உறவுகளின் அவலநிலையை எடுத்துரைக்கும் குறும்நாடகம் என முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த நிகழ்வுகள் ஆகியன நடைபெற்றன.
வேற்றுநாட்டவர்களாக இருப்பினும், தமிழர்களது இனவழிப்பினை நன்கு அறிந்த யேர்மனிய இடதுசாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி Alexander S. Neu, மற்றும் எமது மக்களுக்காக கடந்த 25 வருடங்களாகாக குரல் கொடுத்துவரும் மதகுரு Koolen அவர்களும் தமிழீழ மக்களின் அவாவினைப் புரிந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
இவர்கள் தமது பேச்சுக்களில் மிக தெளிவாக தமிழர்களுக்கு நடந்தது இனஅழிப்பு என்றும் அத்தோடு இதற்கு சர்வதேச நாடுகள் தமது பூகோள அரசியல் நலனுக்கு அமைய துணையாக சென்றதையும் சுட்டிக்காட்டினார்கள் .இவர்கள் எதிர்காலத்திலும் தமது கட்சியின் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு முழுமையாக உழைப்பார்கள் எனவும் உறுதி கூறினார்கள் .
இறுதியாக சிறப்புரையினை நிகழ்த்திய, ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் சிறீஇரவீந்திர நாதன் அவர்கள் , சிறீலங்கா அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியமும், எமது விடுதலைக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளும் அவசியமும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது என்றும், நாம் போராடிப் பெறவேண்டிய உரிமையை எவரும் பெற்றுத்தரப்போவதில்லை என்றும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களாகிய எம்மால் மட்டுமே எமது ஈழத்து உறவுகளுக்காகப் போராட முடியும் எனபதனையும் தனது உரையில் சிறப்பாகத் தெளிவுபடுத்தினார் .
நிகழ்வில் இடம்பெற்ற பேர்லின் தமிழ் இளையோர்களின் "அப்பா எங்கே ???" எனும் குறும்நாடகம் அனைத்து மக்களின் கண்ணீரை வரவைத்ததுடன் எமது தாயக உறவுகளுக்காக தொடர்ந்து அயராது போராடவேண்டும் எனும் ஓர்மத்தை உருவாக்கியது .
முடிவில், சகல விதங்களிலும் நிகழ்வுகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிய யேர்மனியக் காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் ஒலித்து நிறைவடைய , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு தமிழின அழிப்பு நாள் நினைவு நிகழ்வுகள் சரியாக 18:30 மணியளவில் தேசியக்கொடி இறக்கத்தோடு நிறைவு பெற்றன.