கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கவர்ச்சிமிகு வாக்குறுதிகளுடன் முடிந்தது!
வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்
மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன்படி கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்திற்கான கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் இன்றைய தினத்திற்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.இன்று இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார் அலன்டீலன் வடமாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், டெனீஸ்வரன் மற்றும் வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராஜா உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், தவநாதன் உட்பட அமைச்சின் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள், உள்ளுராட்சி சபைகளை சேர்ந்த தவிசாளர்கள், அதிகாரிகள் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இரணைதீவு மக்களுக்கு தமது சொந்த ஊருக்குப்போக விருப்பமில்லையாம்!
இன்றைய கூட்டத்தில் சென்ற கூட்டத்தின் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களுக்கான அறிக்கைகள் முடிவுகள் பற்றி முதலில் ஆராயப்பட்ட போது இரணைதீவு மக்களின் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலர் கருத்துத் தெரிவித்த போது அம்மக்கள் தாம் இரணைதீவுக்குச் சென்று தொழில் செய்ய அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பா.உறுப்பினர் சி.சிறீதரன் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் இரணைதீவு மக்கள் மீள்குடியேற விருப்பம் தெரிவிக்கவில்லையா என கேள்வி எழுப்பினர். அப்போது பூநகரி பிரதேச செயலர் இரணைதீவு மக்கள் வேறு இடங்களில் குடியேறி வீடுகட்டி வாழ்வதாகவும் அவர்கள் இரணைதீவில் மீள்குடியேற விரும்பவில்லையென தெரிவித்தார்.
இதனை இணைத்தலைமைகளில் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவர்கள் தொழில் செய்யவே விருப்பம் தெரிவிப்பதாகவும் ஆகவே தொழில் செய்யச் செல்வதற்கு ஆவன செய்யலாம் என கூறியபோது மீணடும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக மண்ணில் குடியேறி வாழ விருப்பம் தெரிவிக்கவில்லையென்பது ஆச்சரியமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இரணைதீவு முழுமையாக இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதுடன் அங்கு தென்னிலங்கை முதலாளிகள் வாடிகள், பண்ணைகள் அமைத்து கொள்ளை இலாபத்தை கடற்படையின் அனுசரணையுடன் உழைத்து வருகின்றார்கள் என தகவல்கள் அறியக் கிடைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இனி கிளிநொச்சியில் எந்த வைத்தியசாலையிலும் எப்போதும் வைத்தியர் இருப்பார்!
கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அத்தியட்சகர் கார்த்திகேயன் இதுவரை நிலவி வந்த கிராமப்புற வைத்தியசாலைகளின் வைத்தியர் இன்மை மற்றும் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டிருப்பதாக தெரிவித்தார். அவர் கருத்துப்படி இனி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பாக முறைப்பாடுகள் வெளிவராதென கூறலாம்.
அத்தோடு மருத்துவ தாதியர்களுக்கு காணப்படும் பற்றாக்குறை தீர்ப்பதற்கு புதியவர்களை அல்லது ஓய்வு பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கான விளம்பரங்களை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அத்தோடு மண் நிரப்பப்பட வேண்டும் என காரணம் கூறப்பட்டு திறக்கப்படாமல் இருந்த பூநகரி வைத்தியசாலை எந்தக் கொண்டாட்டங்களும் இல்லாமல் அந்தப்பகுதி வைத்தியசாலை நிர்வாகத்தால் சேவைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது இது போலவே எந்தக் கொண்டாட்டங்களும் அரசியலும் இல்லாமல் திறக்காமல் கிடக்கும் பாடசாலை கட்டிடங்களையும் திறந்து வைக்குமாறு கல்வி அமைச்சர் குருகுலராஜா வேண்டுகோள் விடுத்தார். அதை திறப்பதற்கு தென்னிலங்கையில் இருந்து யாரும் தேவையில்லையே என மேலும் குருகுலராஜா தெரிவித்தார். நகரில் குவிந்திருக்கும் ஆசிரியர்கள் மாவட்டத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை கடந்த கூட்டத்தை போலவே பிரஸ்தாபிக்கப்பட்டது.
மாவட்ட மற்றும் வடமாகாண கல்வி உயர் அதிகாரிகளால் ஆசிரிய நியமனம் தொடர்பாக வைக்கப்பட்ட கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்த நிலையில் குழப்பங்கள் நிலவியது. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்புற பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு முன் இருந்த ஆளுனர் ஆட்சியாலும் தற்போதும் வடமாகாண சபையில் ஆளுனர் மற்றும் தென்னிலங்கை அமைச்சர்களின் தலையீடுகள் காணப்படும் நிலையில் நியமனங்கள் இடமாற்றங்களில் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் வீண்பழி சுமக்க வேண்டிய நிலையில் இருப்பதை கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தின.
இனி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவம் நுழையமுடியாது
கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி நிலையின் கலந்துரையாடலின்போது வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் இராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் பல்வேறு களியாட்ட நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களின் கல்வி நிலைபெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த இணைத்தலைமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இராணுவம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாமென கிளநொச்சி வலய கல்விப்பணிப்பாளருக்கு கட்டளை இட்டார். அப்படி இராணுவம் வந்தால் தன்னுடன் கதைக்கச் சொல்லும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் வலியுறுத்தினார்.
கல்வி நிலை தொடர்பில் மேலும் உரையாடல்களின் போது இம்முறையும் பா.உறுப்பினர் சி.சிறீதரனால் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனைக்கு நிரந்தர காணியை பெற்றுக்கொள்ள இக்கூட்டத்தில் முடிவு எட்டப்படவேண்டுமென வலியுறுத்தினார். இணைத்தலைமைகள் உடனடியாக தற்போது கல்விப்பணிமனை உள்ள காணியை பார்வையிட்டு காணி தொடர்பான உயர்பீடத்துடன் கலந்துரையாடி முடிவு எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி நகர் மின்விளக்குகள் இனி ஒளிரும்?
அடுத்து கடந்த பல கூட்டங்களிலும் பாடுபொருளாக இருந்துவந்த கிளிநொச்சி நகரில் ஜனாதிபதியின் வருகையோடு பொருத்தப்பட்ட மின்விளக்குகளை பல மாதங்களின் இடைவெளியின் பின் மீள அதை ஒளிபெற வைக்க இன்றைய கூட்டத்திலும் கடும்பிரயத்தனம்.மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் காலத்தின் போது ஜனதிபதியை குளிர்விக்க கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஏ9 வீதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிர்ந்தன ஆனால் அந்த மின்விளக்குகளால் ஏற்படும் செலவை ஈடுகட்ட கரைச்சி பிரதேசபையால் முடியாத நிலையில் அவை ஒளி இழந்தன..
இந்த நிலையில் மின்சார அந்த தொகையான 12.லட்சத்து 70ஆயிரம் ரூபாவை செலுத்தும்படி பிரதேசபையை வற்புறுத்த பிரதேசபை அரசாங்க அதிபரிடம் முறையிட்டு இந்தத் தொகையை செலுத்த முடியாதென தெரிவித்தது. இந்த பிரச்சினை கடந்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் பேசுபொருளான போதும் மின்குமிழ்கள் ஒளிர தீர்வு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த பிரச்சனை பேச்சுக்கு வந்த போது இனி மின்குமிழ் ஒளிர ஏற்பாடு செய்வதாக டக்ளஸ் தேவானந்தா அதிரடியாக அறிவித்தார். அது எப்படி என சிறிதரன் வினாவினார். 12இலட்சத்து 70ஆயிரம் ரூபாவை இனி பிரதேசசபை கட்டத் தேவையில்லையா எனக் கேட்டார். அதற்கு தன்னிடம் திட்டம் இருப்பதாக அமைச்சர் பதிலளித்தார்.
ஆயினும் ஒளிருமா கிளிநொச்சி நகரின் மின்குமிழ்கள் என்ற கேள்வியே இன்றும் எஞ்சி நின்றது. இது மௌனம் கலைத்த வடமாகாண இணைத்தலைமைகளில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கரைச்சி பிரதேசசபை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருப்பதை உறுதிப்படுத்தியதுடன் ஒப்பந்தங்களின் கையொப்பமிடுகின்ற போது தெளிவாக இருக்க வேண்டுமென கரைச்சி பிரதேசசபைக்கு கண்டிப்புடன் அறிவுரை கூறினார்.
அம்பலமானது சமுர்த்தி உத்தியோக்தர் நியமன குளறுபடி
இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்போது சமுத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனங்களில் நடந்த குளறுபடிகள் அம்பலமாகின.இதை பா.உறுப்பினர் சந்திரகுமார் அம்பலப்படுத்தினார். தேர்தலின் போது அவசர அவசரமாக ஈ.பி.டி.பியாலும் அரசாங்கத்தாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது ஊரறிந்த விடயம் இன்று இது தொடர்பாக கவலைப்பட்டார் வசதியான பல முதலாளிகளுக்கு சமுர்த்தி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இப்பொழுது அவை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை தாம் இடை நிறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது இது தொடர்பாக இந்த நியமனங்கள் தொடர்பாக மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு தெரியுமா அல்லது மாவட்டத்தின் த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களுக்கு தெரியுமா கேள்வி எழுப்பபபட்ட போது அதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்று நிருபங்களில் அவ்வாறு இல்லையென பா.உறுப்பினர் சந்திரகுமாரும் ஈ.பி.டி.பி வடமாகாணசபை உறுப்பினர் தவராசாவும் வாதிட்டனர். அப்படியெனில் அபிவிருத்தி பற்றி நாம் இங்கு வந்து பேசுவதிலும் இணைத்தலைமையிலும் என்ன பயன் என மீண்டும் த.தே.கூட்டமைப்பால் கேள்வி எழுப்பப்பட்டது.
இறுதியில் சமுர்த்தி நியமனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் ஒத்துக்கொள்ளப்பட்டு இனி இவ்வாறான தவறுகள் நிகழாது பார்க்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் உறுதி அளித்தார். இடையில் சற்று மாறுதலாக இன்று உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பழரசம் கல்ந்து கொண்டவர்களுக்கு வழங்கி புத்துணர்வு அளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வீதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் எந்த வீதிகளும் போடப்படவில்லையென மாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் மிகுந்த கவலைப்பட்டார்.
எழுதுமட்டுவாளில் இருந்து கிளாலி வரையான வீதியையேனும் போட்டுத் தருமாறு மேலும் அவர் வினயமாக கேட்டுக்கொண்டார். இதேவேளை கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரர் வீதியின் தரம் தொடர்பாக ஒப்பந்தகாரருக்கும் கரைச்சி பிரதேசசபைக்கும் ஏற்பட்டிருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமுகநிலை ஏற்பட்டுள்ளதாக பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
மின்சாரம் வழங்கல் தொடர்பாக பேசப்பட்ட போது ஸ்கந்தபுரத்தில் மின்சாரம் வழங்கும் போது கொண்டாட்டத்திற்கு எழுதப்பட்ட திறந்து வைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய கல்லில் காகம் எச்சமிடுவதாகவும் அங்கு பலருக்கு மின்சாரம் வழங்கப்படவில்லையென மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம் சுமத்தினார்.