அரச சேவையின் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை!
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சின் செயலாளரினால் அரச சேவையின் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொதுமக்களின் பணத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்துவதற்கான விண்ணப்பங்களை மறு அறிவித்தல் வரை சமர்ப்பிக்க வேண்டாம் என அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இனிமேல், அரச துறையில் வெற்றிடமாக உள்ள பணியிடங்களை தற்போதைய அதிகாரிகள் மூலம் நிரப்புவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அரச சேவை ஆணைக்குழு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.