உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி!
கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கியிடம் அமைச்சர் பீரிஸ் உதவி கோரினார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களின் தீவிரமான தன்மையை அமைச்சர் எடுத்துரைத்தார். நிலையான தீர்வுகள் கிடைக்கும் வரை உலக வங்கியின் குறுகிய கால நிதி உதவி பாராட்டத்தக்கதாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. அலுவலகம் போன்ற ஏனைய நிறுவனங்களுடன் தனது அலுவலகம் இணைந்து செயற்படுவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவை ஏற்கனவே அர்ப்பணித்துள்ள திட்டங்களை ´மீண்டும் செயற்படுத்துமாறு´ ஊக்குவிப்பதாகவும் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார். அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.