Breaking News

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் - பிரித்தானிய அரசு அறிவிப்பு!

 


எதிர்வருகின்ற  செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் செப்டெம்பர் 22 அதிகாலை 4 மணி முதல், சிவப்பு பட்டியலில் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதன்கிழமை முதல் எட்டு நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அந்த நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.

துருக்கி, பாகிஸ்தான், மாலதீவு, எகிப்து, இலங்கை, ஓமன், பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய எட்டு நாடுகளே இவ்வாறு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரித்தானியா செல்லும் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு, புறப்படுவதற்கு முன்னரான பி.சி.ஆர். சோதனை, மற்றும் 10 நாள் கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தல் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரித்தானியா அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் தடுப்பூசி போடாத பயணிகள், 10 நாள் வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அதன்பின்னர் அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.