பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட வேண்டுகோள்!
கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நோயை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் இதற்கு பொதுமக்கள் கடமைப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பொழுது அல்லது வீட்டுக்கு அப்பால் வெளியே செல்லும் பொழுது தமது முகவரி தேசிய அடையான அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடித துண்டுகளை எப்பொழுதும் வைத்திருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்டிகை கால வைபவம் உள்ளிட்ட சில வைபவங்களில் பொதுமக்கள் ஈடுப்படக்கூடும். அனைத்து வைபவங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பல்வேறு தனிமைப்படுத்தல் முறை, கொவிட் தொற்றை தடுப்பதற்கு மூலோபாயங்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களிடம் தகவல்களை கேட்டால், தகவல்களை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
படிவம் ஒன்றில் இந்த தகவல்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறித்த கடிதத்துண்டு ஒன்றை உங்கள் வசம் வைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய வகையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்; கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இந்த விதிமுறைகளை மீறியதன் காரணமாக இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவ்வாறானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டவாறு செயல்படுமாறு நாம் கேட்டுக் கொள்கிள்றோம். பண்டிகை மற்றும் குடும்ப வைபவங்களை குடும்பத்துக்குள் மாத்திரம் வரையறுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பி.சீ.ஆர் பரிசோதனையின் போதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், ஏனைய சுகாதார நடவடிக்கைகளின் போதும் போலியான பெயர்கள் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இதுதொடர்பில் நாம் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு செயல்படுவோர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சமூக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி வழக்கு தொடரக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு. இவ்வாறான வழக்கு ஒன்றில் குற்றம் இழைத்தவராக காணப்படுவோர் 5 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் . இதனால் போலி ஆவணங்கள், போலித் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்..