அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வல்ல - மனோ கணேசன்
அதிகாரப்பகிர்வு மூலமாக மாத்திரம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒருபோதும் சாத்தியமாகாது. கடந்த கால தவறுகளை திரும்பிப்பார்த்து விடப்பட்ட தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வடக்கிலும், தெற்கிலும் இருந்து நாட்டினை பிரிக்கும் எந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை நாம் தடுத்து நாட்டினை ஒன்றிணைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒன்றிணைத்த மதச் சகவாழ்வு மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநயாக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
பெளத்த மாநாயக தேரர்கள், இந்து மதத் தலைவர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிவில் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் என அனைவரும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்
நாட்டின் ஆட்சியினை சரியான பாதையில் கொண்டு செல்ல அரசாங்கமாக நாம் செயற்பட்டு வருகின்றோம். அரசியல் அமைப்பினை அடிப்படையாக கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம்.
ஜனாதிபதி தலைமையில் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. எனினும் அதையும் தாண்டி மதத் தலைவர்களின் தலைமைத்துவமும், வழிகாட்டலும் எமக்கு தேவைப்படுகின்றது. நாம் மத சகவாழ்வு மாநாட்டினை நடத்தும் நிலையில் இதில் முக்கியமான சில விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
குறிப்பாக " அரசியல் அதிகார இலக்கில் ஆயுதம் தூக்காதிருப்போம்" , " இலங்கையர் எம் அடையாளம் பன்மைத்துவம் எம் சக்தி ", " வரலாற்றை திரும்பிப்பார், தவறுகளைத் திருத்திக்கொள்" " ஓர் நாட்டில் அனைவருக்கும் அதிகாரம்" என்ற பிரதான நான்கு காரணிகளை தொனிப்பொருளாக கொண்டே நாம் எமது பயணத்தினை ஆரம்பித்துள்ளோம்.
இந்த நாட்டின் உரிமைகளை வென்றுகொள்ள வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இனியொருபோதும் ஆயுதம் எந்தக் கூடாது என்பது எமது இலக்காகும். அத்துடன் எமது வரலாற்றை திரும்பிப்பார்த்தல் அதில் தவறவிட்ட விடயங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.
மேலும் ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். நாட்டில் பிரிவினை, இனவாதம், ஆயுத மோதல் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து அதிகாரங்களை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கொழும்பை அடிப்படையாக வைத்து அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஆட்சி செய்தது.
இப்போது அதிகாரங்களை பரவலாக்கி ஆட்சி செய்து வருகின்றோம். அதிகார பகிர்வு தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்றால் அது ஒருபோதும் சாத்தியம் ஆகாது. அதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஜனநாயக நாட்டில் மேற்கூறப்பட்ட நான்கு விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் அப்போதே பயணம் இலகுவாகும்.
தேசியக் கோடி, தேசிய அடையாளம், அரசியல் அமைப்பு என்பதை அடிப்படையாக கொண்டே அனைவரும் செயற்பட வேண்டும். ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை இதனை ஏற்றுகொள்ள வேண்டும். எனினும் அண்மையில் வடக்கில் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தேசிய கோடியை ஏற்ற மாட்டேன் என்ற வகையில் செயற்பட்டிருந்தார்.
இது மிகவும் மோசமான செயற்பாடாகும். நாம் அப்போதே இதனைக் கண்டித்திருந்தேன். அதேபோல் தெற்கிலும் சில காலத்திற்கு முன்னர் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியாக ஒன்றை ஏந்தியிருந்தனர். இதுவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் உள்ளன. அரசியல் தீவிரவாதிகள், இனவாதிகள், அடிப்படைவாதிகள் இரு தரப்பிலும் இருந்து செயற்பட்டு வருகின்றனர்.
எனினும் நாம் நடுநிலையாக இருந்து நாட்டினை பாதுகாக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றோம்.
இதில் மதத் தலைவர்கள் அனைவரதும் ஆலோசனை, ஒத்துழைப்புகள் எமக்கு அவசியம். இதனையே ஜனாதிபதி தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தி வருகின்றார். ஆகவே அரசாங்கத்தின் பயணத்தில் மதத் தலைவர்கள் அனைவரதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு பலமான அரசாங்கத்தினை கொண்டு செல்ல வேண்டும் என்றே நாம் நினைக்கின்றோம்.
வடக்கிலோ தெற்கிலோ நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெ டுக்கப்படுமாயின் அதனை நாம் வேடிக்கை பார்க்கப்போவதில்லை. பிரிவினை வாதிகள் எத்தனிக்கும் ஒவ்வொரு சந்தப்பத்திலும் நாம் நாட்டினை ஒன்றி ணைக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அதில் நாம் அனைவ ரும் முன்னின்று செயற்படுவோம் என்றார்.