குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?
பார்வையால் நன்மை தரும் கிரகம் குரு. எனவேதான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி நிகழ்வதை மக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
குரு பகவானின் அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். எனவேதான் குருவின் பார்வைக்காக வேண்டிக்கொள்கின்றனர்.
வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் அமர்கிறார் குரு. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழ உள்ளது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான். இந்த குரு பெயர்ச்சியை அரசியல் கட்சியினரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம் பாழ் என்ற சொற்றொடரும், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட வாக்கும் ஏற்பட்டன.