Breaking News

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 1-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


நேற்று அவர்களது போராட்டம் 6-வது நாளாக நீடித்தது.

நேற்று விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சாலைகளின் மத்தியில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். மான்ட்சார் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் திடீர் வன்முறை ஏற்பட்டது.

போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகளின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் குண்டுகள் பாய்ந்து 5 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நிறைய பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை விவசாயிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

விவசாயிகள் 6 பேர் பலியானதால் மான்ட்சார் மாவட்டத்திலும் அதை சுற்றியுள்ள ஊர்களிலும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வன்முறை பரவுவதை தடுக்க போலீஸ் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையத்தள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.