இராணுவத்தை மன்னிக்கக்கூடாது: மங்கள
இராணுவத்துக்குள்ளும் கறுப்பாடுகள் இருக்கக்கூடும் என்றும், எவரேனும் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை மன்னிக்கக்கூடாது என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜெனிவாவில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என கூட்டு எதிரணி கூறினாலும், அவ்வாறு எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்படவில்லை. அப்போதைய வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் அது எனக்கு தெரியும்.
எனினும், நாட்டின் நலன்கருதி சில விடயங்களை அமுல்படுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது.
இலங்கையிடம் சிறந்த இராணுவக் கட்டமைப்பு இருக்கிறது என்பதை சகலரும் நன்கறிவார்கள். எனவேதான் ஐ.நா. அமைதிப்படையில் இலங்கைக்கும் இடம் கிடைத்துள்ளது.
ஊடகவியலாளர்களை கடத்தித் தாக்கிய, கொலை செய்த மற்றும் கப்பம் பெறுவதற்காக இளைஞர்களை கடத்திய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை மன்னிக்கக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.