Breaking News

கட்சித் தலைமையைக் கைப்பற்றுகிறாரா சசிகலா?

ஜெயலலிதா மறைந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார். அவர் கடந்த 5ஆம் தேதி காலமான நிலையில், புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், கட்சிப் பதவி காலியாகவே இருந்துவந்தது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடனேயே இருந்துவரும் அவரது தோழி வி.கே. சசிகலா கட்சியின் தலைமைப் பதவிக்கு குறிவைக்கக்கூடும் என்ற பேச்சுகள் உலவிவந்தன. ஆனால், அது குறித்து கட்சியிலிருந்து யாரும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால், நேற்று மாலை சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற படம் எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது.






ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி

இந்த நிலையில், இன்று காலையில் வெளிவந்த தமிழ் காலை நாளிதழ் ஒன்றில் வெளியான முழுப்பக்க விளம்பரத்தில், "புரட்சித் தலைவி அம்மாவிற்கு காலன் தன்னை வென்றிடுவான் என்று தெரிந்திருந்தால் தனக்குப் பிறகு எல்லாமே சின்ன அம்மாதான் என்று சொல்லி இறைவனடி சேர்ந்திருப்பார்" என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அளித்தவர் பெயர் ஏதும் இல்லாமல், "விசுவாசத் தொண்டனின் மனசாட்சி" என்ற பெயரில் அந்த விளம்பரம் வெளியாகியிருந்தது.

பதினொரு மணியளவில் ஊடகங்களிடம் பேசிய அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பொன்னையன்,புதிய தலைமைத் தேர்வுசெய்ய எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவின் ஆத்மா வழிகாட்டும்" என்று கூறினார்.

அதிமுக கட்சி தொண்டர் வெளியிட்ட விளம்பரம்

அதே நேரத்தில் அமைச்சர்கள் அனைவரும் முதலில் ஜெயலலிதாவின் வீட்டிற்குச் சென்று சசிகலாவைச் சந்தித்தனர். அதற்குப் பிறகே தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது போயஸ் தோட்ட இல்லத்தைப் பார்ப்பதற்கு வந்த தொண்டர்களை வீட்டு வாயிலில் நின்ற சசிகலா சந்தித்தார். தொண்டர்கள் அவரிடம் அழுதபடி துக்கம் விசாரித்தனர். இந்தக் காட்சிகள், அ.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன. அந்தப் புகைப்படமும் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

திடீரென, அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்றபோது, சசிகலாவைச் சந்தித்து அவரைக் கட்சித் தலைமையேற்கவருமாறு அழைத்தனர் என்ற செய்தியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை நகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சசிகலாவிடம் பேசுவது போன்ற காட்சிகள் அதில் இருந்தன.

போஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு சசிகலா தலைமையில் அஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் "சசிகலாவை மூத்த தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுப்பது போன்ற செய்திகளை ஜெயா தொலைக்காட்சியே வெளியிடுவது போன்றவை தொண்டர்களின் உணர்வை அறிய நடத்தப்படும் முன்னோட்டமாக இருக்கலாம். இன்னும் நான்கரை ஆண்டுகால ஆட்சி இருக்கும் நிலையில், அதை இழந்துவிடக்கூடாது என்பதற்காக கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சசிகலாவின் பின் ஒன்றுதிரளக்கூடும். தவிர, கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாகவே கட்சியின் நிர்வாகத்தில் சசிகலாவுக்குப் பங்கு இருந்திருக்கிறது. அதனால், கட்சி நிர்வாகிகளைக் கையாளுவது அவருக்கு சிரமாக இருக்காது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான துரை கருணா.
இதற்குப் பிறகு செய்தித் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "கட்சியை முன்னெடுத்துச்செல்ல அவரே சரியானவர். அதனால், அவர் தலைமையேற்க வேண்டும் என்று கோரினோம்" என்றார்.

அதற்குப் பிறகு, அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளும் சசிகலாவே கட்சியை வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்ட பகுதியில் கூடிய அ.தி.மு.க. தொண்டர்கள் சசிகலா கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.
ஆனால், மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியருமான விஜய் ஷங்கர், தொண்டர்களை எளிதில் சமாதானப்படுத்திவிட முடியும் என்கிறார்.

"அ.தி.மு.கவைப் பொறுத்தவரை ஆட்சியின் பலன்கள், அனைவருக்கும் சென்று சேரும்படி, கட்சியின் கடைக்கோடி வரை சென்று சேரும்படி பார்த்துக்கொள்ளும் ஒரு கட்சி. இன்னும் நான்கரை ஆண்டுகால ஆட்சி மீதமிருக்கும்போது, கட்சித் தொண்டர்களைச் சமாளித்துவிட சசிகலாவால் முடியும். ஆனால், பொதுமக்கள் சசிகலாவை ஏற்பார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார் விஜய ஷங்கர்.

தவிர, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த விவகாரத்தை எப்படி பார்க்கும் என்பதும் முக்கியம் என்கிறார் அவர்.
கட்சித் தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் சசிகலா வெற்றிபெற்றாலும்கூட, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவைதான் சசிகலாவின் முன்னிற்கும் உண்மையான சவாலாக இருக்கும்.
போஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பொது மக்களிடம் பேசும் சசிகலா ஆனால் கட்சியின் பொதுக்குழுதான் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு என்ற வகையில், புதிய தலைமையைத் தேர்வு செய்வதில், பொதுக் குழு உறுப்பினர்களுக்கு முக்கிய பங்கு இருக்கும். பொதுக்குழுவின் இந்தக் கூட்டம் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, 1987ல் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் இறந்தபோது , அவருக்குப் பின் தலைமைப்பதவிக்கு போட்டியிட, அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனை ஒரு கோஷ்டியும், ஜெயலலிதாவை மற்றொரு கோஷ்டியும் முன்னிறுத்தி கட்சிப் பிளவுக்கு வழி வகுத்தது போன்ற நிலை இது வரை இப்போது நிலவுவதாகத் தெரியவில்லை.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்